விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் பெற்ற வெற்றி : சுவிசிலிருந்து சண் தவராஜா

விக்கிலீக்ஸ் ஊடகத்தின் ஆரம்ப கர்த்தாவும், ஊடகப் போராளியுமான யூலியன் அசாஞ்ஞே அவர்களை நாடு கடத்துவது தொடர்பில் இங்கிலாந்து நீதிமன்றில் நடைபெற்றுவந்த வழக்கில் அவர் நாடு கடத்தப்படுவதற்குத் தடைவிதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரின் விடுதலை கோரியும், ஊடக சுதந்திரத்திற்காகவும் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த அவரது நண்பர்களும், ஊடக அமைப்புகளும் அவரது விடுதலை தொடர்பில் மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். தீர்ப்பு அறிவிக்கப்பட்ட செய்தி வெளியாகிய உடனேயே லண்டனில் அமைந்துள்ள நீதிமன்றத்துக்கு வெளியே கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியதைத் தொலைக் காட்சிகள் ஒளிபரப்பின. கொரோனாக் கொள்ளைநோய்க் காலத்திலும் அத்தனை ஆதரவாளர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்தமை அசாஞ்ஞே அவர்களினதும், அவர் குறித்த வழக்கினதும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருந்தன.

Julian Assange bail: UK judge denies bail for WikiLeaks founder - CNN

இந்தக் கொண்டாட்டத்திற்குத் தீர்ப்பு அசாஞ்ஞே ஆதரவாளர்கள் மத்தியில் ஆனந்தத்தை மாத்திரமன்றி இன்ப அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வனேசா பறைற்சர் ஒரு கடும் போக்காளர் என்பதாலும், கடந்த காலங்களில் நாடு கடத்தல் தொடர்பான வழக்குகளில் அவர் 95 வீதம் நாடு கடத்தலுக்கு ஆதரவான தீர்ப்பையே வழங்கியிருந்ததாலும் பெரும்பாலும் அசாஞ்ஞே நாடு கடத்தப்படும் தீர்ப்பே கிடைக்கும் என அவரது ஆதரவாளர்களும் சட்டத்தரணிகளும் கூட நினைத்திருந்தார்கள். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறான வகையில் தீர்ப்பு அமைந்திருந்தமை அவர்கள் மத்தியில் திகைப்பை ஏற்படுத்தியதாகப் பலரும் தெரிவித்தனர். தீர்ப்பு விபரங்களைக் கேள்வியுற்றதும் ஏற்கனவே தயாரித்துக் கொண்டு வந்திருந்த தனது பேச்சை மாற்றி எழுத வேண்டியிருந்தது எனத் தெரிவித்தார் அசாஞ்ஞேயின் துணைவியார் ஸ்ரெல்லா மொரிஸ்.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து அசாஞ்ஞேயின் விடுதலை மாத்திரமன்றி தீர்ப்பின் உள்ளடக்கமும் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

அசாஞ்ஞே எதற்காக அமெரிக்காவால் இலக்கு வைக்கப் படுகின்றார் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமே. தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் வெளிநாடுகளில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் படை நடவடிக்கைகளின் போது மனித உரிமைகள் மீறப்படுகின்றன, போர்க் குற்றங்கள் இழைக்கப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்களையே விக்கிலீக்ஸ் வெளியிட்டது. மின்னஞ்சல்கள், இரகசிய ஆவணங்கள், இராசதந்திர உரையாடல்கள், ஒலிப்பதிவுகள் என ஆயிரக் கணக்கில் வெளியிடப்பட்ட போது அவற்றை மறுதலிக்க முடியாத நிலை அமெரிக்காவிற்கு ஏற்பட்டது. இன்றுவரை வெளியிடப்பட்ட தகவல்களை மறுக்க முன்வராத அமெரிக்கா, குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டமை அமெரிக்க உளவுச் சட்டங்களின் அடிப்படையில் கிரிமினல் குற்றம் எனவும், அதன் மூலம் அமெரிக்கப் பிரசைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப் பட்டுள்ளது எனவும் வாதிடுகின்றது. எனவே, அசாஞ்ஞே அமெரிக்காவிற்குக் கொண்டுவரப்பட்டு அங்கு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாடு.

18 குற்றச் சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவை நிரூபிக்கப்பட்டால் அசாஞ்ஞேக்கு 175 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அது மிகைப்படுத்தப்பட்ட விடயம், நான்கு முதல் ஆறு வருட தண்டனையே அவருக்குக் கிட்டும் என்பது அமெரிக்க சட்டத்தரணிகளின் கருத்து.

அசாஞ்ஞே சார்பு சட்டத்தரணிகளின் வாதம் குறித்த வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது, கருத்துச் சுதந்திரத்துக்கு முரணானது, புலனாய்வு ஊடகவியலாளர்களை ஒடுக்கும் நோக்கம் கொண்டது, அமெரிக்காவில் அசாஞ்ஞேக்கு சுதந்திரமான விசாரணை மறுக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பதாக இருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி இந்த விடயங்கள் எதனையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவரது தீர்ப்பு இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது. “அசாஞ்ஞேயின் உடல்நிலை மற்றும் மனநிலை அத்தோடு அமெரிக்காவில் உள்ள சிறைச்சாலைகளின் மோசமான நிலைமை என்பவற்றைக் கருத்தில் கொண்டு அசாஞ்ஞே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவர் தற்கொலை செய்து கொள்ளக் கூடும். எனவே, அவரை நாடு கடத்த அனுமதிக்க முடியாது” என்பதே.

இந்தத் தீர்ப்பில் அசாஞ்ஞே மானுட குலத்திற்கு ஆற்றிய பணி கவனத்தில் கொள்ளப்படவே இல்லை. மாறாக, அமெரிக்க அரசாங்கத்தின் கருத்தியலே கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. “அசாஞ்ஞேயின் ஆதரவாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள், அவரை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடுங்கள். எங்கள் பார்வையில், பிரித்தானியச் சட்டத்தின் பார்வையில் அவர் அமெரிக்காவினால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவ்வாறு அமெரிக்கா சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வதில் எங்களுக்குக் கூச்சமில்லை” என்பதே தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தப்படும் கருத்து.

நீதிபதியின் இந்த மனோபாவம் அசாஞ்ஞேக்கான பிணைமனுவை நிராகரித்ததில் நன்கு வெளியாகியுள்ளது. யனவரி 4 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, 6 ஆம் திகதி பிணை மனு முன்வைக்கப்பட்டது. நாடு கடத்தல் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிணை மனு பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சித் தீர்ப்பை நீதிபதி வழங்கினார். பிணை மனுவை நிராகரித்த அவர், அசாஞ்ஞே பிணையில் விடுவிக்கப்பட்டால் அவர் தலைமறைவாகச் செல்லக் கூடும், எனவே, பிணை மனு நிராகரிக்கப் படுகின்றது என்றார்.

அவர் இவ்வாறு பிணை மலுவை நிராகரிப்பது இது முதல் தடவையல்ல. ஏற்கனவே, 2019 செப்டம்பரிலும் 2020 மார்ச்சிலும் இதே காரணங்களை முன்வைத்து அசாஞ்ஞேயின் பிணை மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது.

தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்வதற்கு அமெரிக்கத் தரப்பிற்கு 14 நாட்கள் கால அவகாசம் உள்ள நிலையிலேயே பிணை மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. முன்னைய தீர்ப்பின் படி அசாஞ்ஞே அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவது இல்லை என முடிவான பின்னரும், அவரைத் தொடர்ந்து சிறைக் கொட்டடியில் அடைத்து வைக்க முனைவது எதனால் எனப் புரியவில்லை. “பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்பதற்கு இதைவிடவும் சிறந்த வேறு எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

அமெரிக்க அரசாங்கத் தரப்பு மேன்முறையீடு செய்யும் என சட்டத்தரணிகள் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே, அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்பிடம் பொது மன்னிப்பு வழங்கக் கோரி உலகப் பிரபலங்கள் பலரும் முன்வைத்த கோரிக்கைகள் செவிமடுக்கப்படாத நிலையில், மேன்முறையீடு செய்வதைத் தவிர்த்தாவது தன்னை ஓரளவு நல்லவர் எனக் காட்டிக் கொள்ளக் கூடிய இறுதி வாய்ப்பையும் ட்ரம்ப் தவற விட்டு விடுவார் போன்றே தெரிகின்றது.

இதே வேளை, பிணை மனு மறுக்கப்பட்டதை எதிர்த்து மேன் முறையிடு செய்யவுள்ளதாக அசாஞ்ஞே ஆதரவுத் தரப்பு தெரிவித்துள்ளது. “அசாஞ்ஞே கைது செய்யப்படக் காரணமாக இருந்த குற்றம் எனத் தெரிவிக்கப்படும் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறினார் என்னும் குற்றத்திற்காக 50 வாரத் தண்டனையை அவர் ஏற்கனவே நிறைவு செய்து விட்டார். எனவே, அவர் நீதிமன்றில் முன்னிலையாகாமல் தலைமறைவாகி விடுவார்” எனச் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது என்கிறார் விக்கிலீக்ஸ் ஊடகத்தின் பிரதம ஆசிரியர் கிறிஸ்ரின் ராப்சொன்.

Assange: After extradition win, WikiLeaks founder seeks bail | Julian  Assange News | Al Jazeera
மறுபுறம், வழக்கின் தீர்ப்பு தொடர்பாகப் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். பெரும்பாலான கண்டனங்களின் சாரம், வழக்கில் அசாஞ்ஞேக்கு வெற்றி கிட்டினாலும், ஒட்டு மொத்தத்தில் ஊடகத் துறைக்கு இந்தத் தீர்வு ஒரு பின்னடைவு என்பதே.

இந்நிலையில் விடுதலை செய்யப்படும் அசாஞ்ஞேக்கு தனது நாட்டில் அரசியல் தஞ்சம் வழங்குவதற்குத் தான் தயாராக உள்ளதாக மெக்சிகோ நாட்டு அதிபர் ஆன்டஸ் மனுவல் லொபாஸ் ஒப்ரடோர் தெரிவித்துள்ளார். “அசாஞ்ஞே ஒரு ஊடகர். அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நான் அவரை மன்னிப்பதற்குத் தயாராக உள்ளேன். அவருக்கு நாங்கள் பாதுகாப்பு வழங்குவோம். பாதுகாப்பு வழங்குவது எமது பண்பாடு” என அவர் தெரிவித்து உள்ளார். இடதுசாரிக் கொள்கையுடைய ஒப்ரடோர், தற்போதை அமெரிக்க அரசுத் தலைவர் ட்ரம்புடன் நட்பு பாராட்டுபவராக விளங்கும் அதேவேளை பொலவிய அரசுத் தலைவர் ஈவோ மொராலஸ் 2019 இல் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவான போது – மேற்குலகின் அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாது – தனது நாட்டில் அடைக்கலம் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி மேற்குலகினால் வெனிசுவேலாவின் உத்தியோகபூர்வ அரசுத் தலைவர் எனக் கொண்டாடப்படும் எதிர்க் கட்சித் தலைவர்களுள் ஒருவரான யுவான் குவைடேவை அங்கீகரிக்க மறுத்தவர் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

அசாஞ்ஞே நாடு கடத்தப்பட மாட்டார் என்ற செய்தி வெளியாகி உள்ள நிலையில் “அனைத்து அவுஸ்திரேலியப் பிரசைகளையும் போன்று அசாஞ்ஞேயும் நாடு திரும்பலாம்” எனத் தெரிவித்துள்ளார் அவுஸ்திரேலியத் தலைமை அமைச்சர் ஸ்கொட் மொரிசன். இதேவேளை, அவுஸ்திரேலியப் பிரசையான அசாஞ்ஞே அவர்களைக் காப்பாற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என எதிர்க் கட்சியான தொழிற் கட்சி பலத்த கண்டனம் தெரிவித்துள்ள நிலையிலேயே ஸ்கொட் மொரிசனின் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

UK judge refuses US extradition of WikiLeaks founder Assange

“அசாஞ்ஞே நாடு கடத்தப்படப் போவதில்லை என்ற செய்தி கொண்டாட்டத்திற்கு உரியதே. ஆனாலும், நாடு கடத்தப்படாமைக்கான காரணமாக நீதிபதி முன்வைத்துள்ள விடயங்கள் ஊடகர்களைப் பொறுத்தவரை கவலை தருவனவாக உள்ளன” என்கிறார் லண்டனில் உள்ள ஈக்குவடோர் நாட்டுத் தூதுவராலயத்தில் அசாஞ்ஞே தஞ்சம் அடைந்திருந்த காலகட்டத்தில் தூதுவராகப் பணியாற்றிய பிடல் நார்வேஸ். “அடிப்படையில் ஊடகச் செயற்பாடுகளை கிரிமினல் குற்றமாக நீதிபதி பிரகடனம் செய்திருப்பது மிகுந்த கவலை தருவதாக உள்ளது. இதன் மூலம் அவர்கள் ஒரு முன்னுதாரணத்தைப் படைக்க நினைக்கிறார்கள். அவருடைய தீர்ப்பின் 95 வீதமான பகுதிகள் அமெரிக்கத் தரப்பு வாதத்தை அடியொற்றியதாகவே இருக்கின்றன. அமெரிக்காவின் உளவு பார்த்தல் தொடர்பான சட்டமானது அமெரிக்க அரசாங்கம் விரும்பாத எந்தவொரு செய்தியையும் வெளியிடும் ஊடகருக்கு எதிரானதாகவே உள்ளது” என்கிறார் அவர்.

நாடு கடத்தலுக்குத் தடை சொல்லும் தீர்ப்பை வழங்கிவிட்டு பினை மனுவை நிராகரித்தமை ஒரு நாடகமே என்கிறார்கள் ஒருசில நோக்கர்கள். அவர்களின் கருத்தின் பிரகாரம் அசாஞ்ஞேயின் வழக்கு இன்னும் பல வருடங்களுக்கு தொடர்ந்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு இழுத்தடிக்கப்படப் போகின்றது. உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்பட்டு அசாஞ்ஞே சிறையிலேயே மரணத்தைத் தழுவிக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு என்பது அவர்களின் வாதம்.

இந்த வாதம் ஏற்புடையதா என்பதைத் தெரிந்து கொள்ள இன்னும் கொஞ்சக் காலம் காத்திருக்க வேண்டும். அதுவரை அசாஞ்ஞே மனோ பலத்துடனும், தேக ஆரோக்கியத்துடனும் தாக்குப் பிடிக்க வேண்டியிருக்கும்.

Ecuador Considered Smuggling Julian Assange to Freedom in a Bag | WIRED
மானுடத்தின் நலனுக்காக, தன்னுயிரையும் துச்சமென நினைத்துச் செயற்பட்ட ஒரு ஊடகவியலாளனுக்கு இதுவே வெகுமானம் என்பதை நினைக்கும் போது நாம் உண்மையிலேயே நாகரிக உலகில்தான் வாழுகின்றோமா என்ற கேள்வி எழுகின்றது.

அசாஞ்ஞேயை உடனடியாக விடுதலை செய்யக் கோரிப் போராடுவதே ஊடக சுதந்திரத்தையும், மானுட விடுதலையையும் நேசிப்பவர்களின் கடமையாகின்றது.

Leave A Reply

Your email address will not be published.