தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து வழமையான நிலைக்கு திரும்பிய கல்முனை.

27நாட்களின் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து வழமையான நிலைக்கு திரும்பியது கல்முனை.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட கல்முனை நகரில் கல்முனை மற்றும் கல்முனைக்குடி ஆகிய பிரதேசங்களிலுள்ள 11 கிராம சேவையாளர் பிரிவுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் கல்முனை செய்லான் வீதி தொடக்கம் நகர வாடி வீட்டு வீதி வரை தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு 27நாட்கள் அமூலில் இருந்து வந்த நிலையில் நேற்று (24) மாலை 06மணி முதல் இப்பிரதேசம் தனிமைப்படுத்தல் ஊரடங்கில் இருந்து நீக்கம் பெற்றுள்ளதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இதனால் 27நாட்களின் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து வழமையான நிலைக்கு திரும்பியது கல்முனை நகர்.

இராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் இருந்த இப்பிரதேச மக்கள் சுதந்திரமாக நடமாட்டத்துடன் காணப்படுவதுடன் கடைகள், பொதுச் சந்தை, பிரதான வீதிகளில் போக்குவரத்து, உள்வீதிகளின் போக்குவரத்து, அலுவலகங்கள் மற்றும் பிரதான பஸ் நிலையம் என்பன வழமையான நிலையில் இயங்குவதை அவதானிக்க முடிந்தது.

இருந்தும் கொரோனா பரவலை முற்றுமுழுதாக தடுப்பதற்காக அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பொது மக்கள் கடைப்பிடிக்குமாறு வேண்டப்பட்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.