கோட்டாவின் ஆணைக்குழு கண்துடைப்பு நாடகமே! சஜித் அணி விளாசல்.

கோட்டாவின் ஆணைக்குழு கண்துடைப்பு நாடகமே!சஜித் அணி விளாசல்.

“இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஆராயும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு நாட்டுக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கப்போவதில்லை. இது வெறுமனே கண்துடைப்பு நாடகம் என்பதை சர்வதேசம் நன்கு அறியும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

“இலங்கைக்கு சீனாவின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களை ராஜபக்ச அரசு நிராகரித்தது. சீனாவை நம்பிக்கொண்டு அரசு எடுக்கும் முயற்சிகள் நாட்டை மிகப்பெரிய நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையை ஏற்றுக்கொள்வதாக மஹிந்த ராஜபக்‌ச அரசு சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரமே தொடர்ச்சியாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நல்லாட்சி அரசு புதிய தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி இலங்கை இராணுவத்தைப் போர்க்குற்றங்களில் சிக்கவைக்கவில்லை.

போர்க்குற்றங்களில் சிக்கவிருந்த இராணுவத்தையும், அதற்குத் துணை நின்ற தலைவர்களையும் எமது அரசில் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகக் காப்பாற்றினோம்.

2015ஆம் ஆண்டு அமெரிக்கா கொண்டுவந்த புதிய தீர்மானத்தை நாம் நிராகரிக்காது இணை அனுசரணை வழங்கியதன் மூலமாகவே இலங்கைக்கான சர்வதேச ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெற்றன. தற்போதைய அரசு ஐ.நா. தீர்மானங்களிலிருந்து விலகிக்கொள்வதாக கூறியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் அதற்கான எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டன.

இந்த நிலைமை தொடருமாயின் இலங்கை தனித்து விடப்படுவதுடன், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கும் உள்ளாக நேரிடும்”என்றார்.

Leave A Reply

Your email address will not be published.