வெடிக்கும் கமல் : ஊழலின் பிக் பாஸ் எடப்பாடி!”

தமிழக அரசியல் களம் அனல் தெறிக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தொடங்கி கடைக்குட்டிக் கட்சிகள் வரை வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு ‘ஓட்டு’ வேட்டைக்குக் கிளம்பிவிட்டன. இந்தநிலையில்தான், “மாற்றத்தை நிகழ்த்துவோம்… எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்; நாளை நமதே” என்கிறார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். அவரைச் சந்தித்து, பல கேள்விகளை முன்வைத்தோம். எந்தக் கேள்வியையும் அவர் தவிர்க்கவில்லை… அத்தனை கேள்விகளுக்கும் அவருக்கேயுரிய ‘பாணி’யில் பதிலளித்தார். ஜூனியர் விகடனுக்கு அவர் அளித்த ‘எக்ஸ்க்ளூசிவ்’ பேட்டி இங்கே…

“ஊழலின் பிக் பாஸ் எடப்பாடி!” - வெடிக்கும் கமல்

“கடந்த 2018, பிப்ரவரி 21-ம் தேதி மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கினீர்கள். இந்த மூன்றாண்டு அரசியல் பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

 

“என் அப்பா அடிக்கடி என்னிடம், ‘எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. அரசியல் நம்முடன் கலந்திருக்க வேண்டும். அரசியலால்தான் சுதந்திரமே கிடைத்தது’ என்பார். ‘அப்பாக்களே இப்படித்தான்…’ என்று அப்போது நினைப்பேன். ஆனால், அது தவறு என்பதை தற்போது உணர்கிறேன். என் வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தை அடைந்துவிட்டேன் என்கிற உணர்வை இந்த மூன்றாண்டுப் பயணம் ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் எங்களுக்கு அளிக்கும் ஆதரவு, நெகிழச் செய்கிறது. எங்கள் கடமையுணர்வை அதிகரிக்கிறது. மாற்றத்தைக் கொண்டுவர தீவிரமாக உழைக்க வேண்டும் என்கிற வெறியை அதிகப்படுத்தியிருக்கிறது.”

 

“நீங்கள் மாற்றம் என்கிறீர்கள்… முதல்வரும் துணை முதல்வரும், ‘மூன்றாவது முறையாக ஆட்சியைத் தொடர்வோம்’ என்கிறார்களே?”

“அவர்களின் மனக்கோட்டையை எங்கள் மக்கள் நீதி மய்யம் தகர்க்கும்.”

 

“முதல்வர் பழனிசாமி, ‘சிறப்பான நிர்வாகம் செய்யும் மாநிலம் தமிழ்நாடு என்பதற்காகப் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறோம்’ என்கிறார். தி.மு.க-வும் ‘திராவிட ஆட்சியால்தான் தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது’ என்கிறது. அப்படியிருக்க, தமிழக அரசியல் களத்துக்கு புதிதாக கமல் என்பவர் தேவையா?”

 

“தேவையில்லாமல் நான் எதிலும் மூக்கை நுழைக்க மாட்டேன். எங்கள் தேவையை இங்கிருக்கிற சில அரசியல் கட்சிகளே உருவாக்கி யுள்ளன. அந்த அளவுக்கு அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியைச் சிதைத்துள்ளனர். நம் தமிழ்நாடு போட்டியிட வேண்டியது ஊழல் நிறைந்த, நைந்துபோன உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுடன் இல்லை. உலகத்திலுள்ள நல்ல மாநிலங்கள், நகரங்களுடன் போட்டியிட வேண்டும். அப்படியான ஆரோக்கியமான போட்டியை மக்கள் நீதி மய்யத்தால் நிகழ்த்த முடியும்.”

“ஆனால் நம் முதல்வரோ, ‘கமல், திரைப்படங்களில் ஹீரோவாக இருக்கலாம். அரசியலில் ஜீரோ’ என்று உங்களை விமர்சிக்கிறாரே?”

 

“ஜீரோ என்பது ஒரு வேல்யூ. அதனுடன் எதைச் சேர்க்கிறோம் என்பதில்தான் அதன் மதிப்பு கூடும். இந்த ஜீரோவுடன் ஏழரைக் கோடி மக்களைப் சேர்த்துப் பாருங்கள்… ஐயாம் வித் பீப்பிள். ஸோ, இந்த ஜீரோ மதிப்பு வாய்ந்ததுதான்.”

 

“நீங்கள், ‘வீட்டுக்கு வீடு இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தீர்கள். இதையடுத்து, ‘மாணவர்களுக்கு தினசரி இரண்டு ஜி.பி டேட்டா இலவசம்’ என்று முதல்வர் அறிவித்திருக்கிறாரே?”

 

“இதில் எங்களைப் பின்தொடர்பவர், எங்களைப்போல நேர்மையையும் பின்தொடர்ந்தால் சரி.”

“நீங்கள், ‘இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவோம்’ என்கிறீர்கள்… எங்கிருந்து நிதியைத் திரட்டுவீர்கள்?”

 

“செயல் திட்டங்கள் இல்லாமல் சொல்ல மாட்டோம். ஆனால், அந்தத் திட்டத்தை வெளியே சொல்ல மாட்டோம். சொன்னால், கொள்ளையடிக்க இன்னொரு யுக்தியை இவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாக அமையும். மற்றபடி அதை எங்கள் ஆட்சியில் நாங்கள் செய்யத் தவறினால், அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம். இன்னொரு விஷயம்… ஆட்சியாளர்கள் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்தாலே அல்லது திருப்பி எடுத்தாலே இரண்டு தமிழ்நாட்டை மிகச் சிறப்பாக வழிநடத்தலாம்.”

“ஊழலின் பிக் பாஸ் எடப்பாடி!” - வெடிக்கும் கமல்

“உங்கள் பரப்புரையில், ‘இந்த ஆட்சியில் பாலம் போடுகிறார்கள். அதற்கு வேறு காரணம் இருக்கிறது. அது லாபம்’ என்று விமர்சித்தீர்கள். முதல்வர் பழனிசாமியிடம்தான் நெடுஞ்சாலைத்துறை இருக்கிறது. அவர், லாபம் சம்பாதித்துவிட்டாரா?”

 

“மற்றவர்களெல்லாம் 10 சதவிகிதம் என்றால் எடப்பாடி அதைப்போல எட்டு மடங்கு லாபம் வைக்கிறார். அதனால்தான் ஒரு சாலை போதாதென்று எட்டுவழிச் சாலைக்கு முயன்றார்.”

 

“நேரடியாகவே ஊழல் ஆட்சி நடக்கிறது என்று சொல்கிறீர்களா?”

 

“ஊழல் பரவி, விரவிக்கிடக்கிறது. அது பெரிய இடத்தின் ஆசீர்வாதம் இல்லாமல் நடக்காது என்பதுதான் எங்களின் பார்வை. ‘பிக் பாஸ் பார்த்து கெட்டுப்போகிறார்கள்’ என்றார் முதல்வர். ஆனால், ஆட்சியிலிருக்கும் பெரிய பெரிய பிக் பாஸெல்லாம் ஊழல் செய்தால், சின்னச் சின்ன நிலச்சுவான்தார்களெல்லாம் ஊழல் செய்ய மாட்டார்களா? நானே துறைவாரியாக நடக்கும் ஊழல்கள் பற்றிப் பட்டியலிட்டேனே… மேலிடத்தின் ஆசி இல்லாமல் எதுவும் நடக்காது. என்னைப் பார்த்து, ‘பிக் பாஸ் எல்லாம் பண்றாங்க… ஆனால், அரசு நடத்த முடியுமா?’ என்று எடப்பாடி கேட்கிறார். இவரே ஒரு பிக் பாஸ்தான்…”

“எதில் பிக் பாஸ் என்கிறீர்கள்… ஊழல் செய்வதிலா?”

 

(பெருஞ்சிரிப்பு சிரிக்கிறார்…) “நானே, துறைவாரியாக நடக்கும் ஊழல்கள் பற்றி பட்டியலிட்டேனே… அதுவும் மேலிடத்தின் ஆசி இல்லாமல் எதுவும் நடக்காது. இவரையும் கடந்து மற்றொரு மேலிடம் இருக்கிறது என்றால், இவர் யாருடையக் கைப்பாவை என்று மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”

 

“அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில், ‘எங்கள் கட்சியில் வேஷ்டி கட்டும் ஆண்கள் உண்டு. கோஷ்டிப் பூசல் செய்யும் ஒரு தொண்டர்கூட இல்லை’ என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளாரே?”

 

“நல்ல ஜோக். கோஷ்டிகளாகப் பிரிந்து இரண்டு இலைகளும், பல இலைகளாகத் துளிர்விட்டுக்கொண்டிருப்பதையும் நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.”

 

“அ.தி.மு.க-வை கடுமையாக விமர்சனம் செய்கிறீர்கள். ஆனால், தி.மு.க-வை அப்படியெதுவும் விமர்சனம் செய்வதில்லை. ஏன் தி.மு.க மீது ஊழல் முத்திரை இல்லையா?”

“கண்டிப்பாக இருக்கிறது. நிலுவையிலுள்ள வழக்குகளே அதற்கு சாட்சி. அப்படியிருக்க… எப்படி அவர்களை ஊழல் கறையில்லாதவர்கள் என்று நான் சொல்ல முடியும்!”

 

“ஆனால், அ.தி.மு.க-வை அட்டாக் செய்யும் அளவுக்கு, நீங்கள் தி.மு.க-வை அட்டாக் செய்வதில்லையே?”

 

“இப்போது நமக்கு வந்திருக்கும் நோய் காமாலையா, டைபாய்டா என்று பார்க்க வேண்டும். பிரதான பிரச்னையாக இருக்கிற காமாலைக்கு முதலில் மருந்து கொடுக்க வேண்டும். அதேநேரம், டைபாய்டு வராமலிருக்க, தடுப்பூசியும் கொடுக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.”

 

“இப்படியெல்லாம் நீங்கள் சொன்னாலும், ‘கமல்ஹாசன் தி.மு.க-வின் பி டீம்’ என்று அ.தி.மு.க-வினர் விமர்சிக்கிறார்களே?”

 

(சிரிக்கிறார்…) “நான் ஏ டீம் ஆகத்தான் இருப்பேன். ஊழல் இல்லாதவர்களுடன் கூட்டணி சேர்ந்த ஏ டீம் நாங்கள்.”

“இன்னொரு பக்கம், உங்களை ‘பா.ஜ.க-வின் பி டீம்’ என்றும் விமர்சிக்கிறார்களே?”

 

“ஆம்… நான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் பி டீம்.”

 

“சமீபத்தில், ‘எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி நான்’ என்றீர்கள். தேர்தல் நெருங்குவதால், நீங்களும் எம்.ஜி.ஆர் என்னும் தொப்பியை அணியத் தொடங்கிவிட்டீர்களா?”

 

“நல்ல தொப்பி என்றால் அணிந்துகொள்வதில் தப்பில்லையே… நான் ரசிகர் இயக்கம் வைத்திருந்தபோதே எங்கள் கூட்டத்துக்கு வந்து வாழ்த்தியவர் எம்.ஜி.ஆர். இன்றைக்குப் பல அமைச்சர்கள் எம்.ஜி.ஆரைப் பார்த்துக்கூட இருக்க மாட்டார்கள். ஆனால், நான் அவர் மடியில் தவழ்ந்தவன். அவரிடமிருந்து நல்லவற்றைக் கற்றுக்கொண்டவன். எனவே, எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்ல எனக்கு நிறையவே உரிமை இருக்கிறது.”

 

“வரும் தேர்தலில் எந்தக் கூட்டணியில் சவாரி செய்யப்போகிறீர்கள்?”

“அரசாங்க வேலைகளை உதறிவிட்டு, நேர்மையான ஆட்சி வர வேண்டும் என்று பலர் எங்களுடன் அணி சேர்கிறார்கள். இப்படி எல்லாக் கட்சிகளிலும் இருக்கிற நல்லவர்கள் அணி சேர்வார்கள். இப்படியான நல்லவர்களுடன் கூட்டணி சேர்வோம்.”

 

“ஆனால் காங்கிரஸ், பா.ம.க., அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் உங்களுடன் கூட்டணிக்காகப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை?”

 

“அரசியல் என்பது பெரிய களம். எல்லா வாய்ப்புகளையும் ஆராய்வார்கள். ஆள் அனுப்பிப் பேசுவார்கள். இவையெல்லாம் தேர்தல் நேரத்தின் இயல்பு. அது இங்கும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நல்லவர்களுடன்தான் கூட்டணி.”

 

“தி.மு.க-வுடன் கூட்டணி முயற்சிகள் நடந்துவருகின்றன. இதற்காக  உதயநிதியும் நீங்களும் சந்தித்தீர்கள் என்றும் பேச்சுகள் வந்தனவே?”

“அரசியலில் நலம் விசாரிப்பது நடக்கும்.”

 

“ஊழல் ஒழிப்பு அரசியலுடன் தேர்தலைச் சந்திக்கிறீர்கள். நம் நாட்டில் ஊழல் மட்டும்தான் பிரச்னையா… சாதி, ஆணவக் கொலைகள் என்று பல கொடுமைகள் நடக்கின்றனவே?

 

“சாதி ஒழிப்புக்குத் தனித் திட்டங்கள் உண்டு. தவிர, சாதியை ஒழிக்க ஒவ்வொருவரும் தனிப்பட்ட வகையில் சத்தியாகிரகம் செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் போராட வேண்டும். முதலில் தன் வாசலைப் பெருக்கி, பிறகு வீதிகளைப் பெருக்க வேண்டும்.”

 

“அப்படியென்றால், பொதுத்தொகுதியில் பழங்குடி மற்றும் பட்டியல் சமூக வேட்பாளரை நிறுத்துவீர்களா?”

 

“நிச்சயமாக. மக்களுக்கு நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்கிற தகுதி மட்டுமே வேட்பாளருக்கான எங்களின் அடிப்படை அளவுகோல்.”

“உங்கள் பரப்புரையில் கார்ப்பரேட்கள் உதவியும் தேவை என்று சொன்னது சர்ச்சையைக் கிளப்பியதே?”

 

“தமிழ்நாடு செழிக்க, பெரும் நிறுவனங்கள் இங்கே வேண்டும். ஐம்பது பில்லியன் டாலர் ஈட்டக்கூடிய நிறுவனங்கள் இருக்கும் அதேநேரத்தில் ஐந்து லட்சம் குறு, சிறு தொழில் நிறுவனங்களும் சமமாக வளர வேண்டும் என்பதே என் பார்வை.”

 

“உங்கள் ஹெலிகாப்டர் பயணம் ஆடம்பரம் என்று விமர்சிக்கப்படுகிறதே?”

 

“இங்கே எளிமையான தோற்றம் என்று காட்டிக்கொள்பவர்கள், எளிமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், எளிமையாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதுதான் மோசடியின் ஆரம்பம். இவர்கள் யாருமே எளிமையானவர்கள் இல்லை. காந்தியாரைப் பார்த்து காப்பியடிப்பவர் களெல்லாம் காந்தியாகிவிட முடியாது. இவர்களின் வங்கிக் கணக்குகள் வேறு கதைகள் சொல்கின்றன. நான் எனது சொந்தப் பணத்தில் பயணிக்கிறேன்.”

 

நன்றி : விகடன்

 

 

Leave A Reply

Your email address will not be published.