யாழில் மீண்டும் சந்தைக் கொத்தணியா? – அச்சுவேலியில் 4 வியாபாரிகளுக்குக் கொரோனா’

அச்சுவேலி பொதுச்சந்தையில் எழுமாற்றாாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மரக்கறி வியாபாரிகள் நால்வருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இவர்களுடன் சேர்த்து வடக்கு மாகாணத்தில் இன்று10 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் ஆகியவற்றில் இன்று 689 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 10 பேருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அச்சுவேலி பொதுச்சந்தையில் எழுமாற்றாகப் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் மரக்கறி வியாபாரிகள் நான்கு பேருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சந்தைகளை மீளத் திறக்க அனுமதிக்கப்பட்ட பின்னர் அவற்றில் வாராந்தம் எழுமாறாக மாதிரிகள் பெறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை – கச்சேரி தனியார் பஸ் சேவையின் நடத்துநர் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று அவரது மனைவிக்கும் பிள்ளைக்கும் என இருவருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் முசலி வாடியில் தொற்று ஏற்பட்டவருடன் நேரடித் தொடர்பில் இருந்தவராவார். மற்றைய இருவரும் மன்னார் நகரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் கொரோனா அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களாவர்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் அண்மையில் தொற்றாளாராக அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்புடையவராவர்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.