கல்விக்கு உள்ள அதே முக்கியத்துவம் விளையாட்டுக்கும் கொடுக்கப்பட வேண்டும் – வேலாயுதம் கணேஸ்வரன்

போர் நிறைவடைந்ததாக கூறப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பொதுமக்களின் பொருளாதார கல்வி சமூக பிரச்சனைகள் தீர்க்கப்படாத நிலையிலேயே இன்றும் காணப்படுகிறது : யாழ் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன்

நேர்காணல் ஜீவராஜ்

நீங்கள் சமூகப் பணிகளில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவது போன்று விளையாட்டுத் துறையில் உள்ளவர்களை அதிகளவு ஊக்கப்படுத்த கரிசனை காட்டி செயற்பட்டு வருகின்றீர்கள். இதில் அதிக ஆர்வம் காட்டுவதற்கான காரணம் என்ன?

கல்வியை போலவே விளையாட்டுத்துறையும் எம் இளையோருக்கு மிக முக்கியமான துறைகளாகும். இவ்வளவு காலமும் பாராளுமன்றம் சென்றவர்கள் எவரும் அவை குறித்து சிந்தித்தாகத் தெரியவில்லை. தன்னுடைய ஊரில் அல்லது தம் பிரதேசத்தில் உள்ள இளையோரில் விளையாட்டுத் தறையில் யார் திறமைமிக்கவர் என்று அடையாளம் கண்டு அவர்களுடைய திறனை வளர்த்து விடுவதற்கு கொஞ்சம் கூட அக்கறை கொள்ளாதவர்கள் தான் மீளவும் திரும்ப திரும்ப பாராளுமன்றம் சென்று வருபவர்களாக இருக்கின்றனர்.

எமது பிரதேசங்களில் 30 வருட யுத்தப் போராட்டத்தில் கலந்து சாதனைகள் நிலைநாட்டிய எத்தனையோ இளைஞர் யுவதிகளை வீரத் தியாகம் எய்தினர். நாம் கண்முன் கண்டோம். யுத்த நிறைவுக்கு பின்னர் தமது வீரத்தையும் வல்லமையையும் விளையாட்டுத் துறையின் மூலம் உலக அரங்கில் சாதித்துக் காட்டக் கூடிய திறன்வாய்ந்தவர்கள் உள்ளார்கள். இப்படிப்பட்டவர்கள் எமது பிரதேசங்களில் இலை மறைகாய்களாக மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை.

எவ்வளவு திறமையிருந்த போதிலும் முதலில் அவர்களுடைய குடும்ப பொருளாதார கட்டமைப்புத் தான் விளையாட்டுத் துறையில் சாதனை நாட்டுவதற்கு தடுக்கின்ற பிரதான காரணியாக இருக்கிறது. மறுபக்கம் கொஞ்சமாவது வெளியே சென்று போட்டிகளில் கலந்து கொள்வதிலும் அதற்கான உரிய விளையாட்டு உபகரணங்கள் இல்லாமையும் , சரியான பயிற்சி முறைகள் இல்லாமையும் தடுக்கும் பிரதான காரணியாக இருக்கிறது. இதனால் தான் என்னுடைய சொந்த செலவிலாவது விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டுள்ள வீர வீராங்கனைகளை இனங்கண்டு உதவ முன்வந்தேன்.

உண்மையில் முன் பாராளுமன்றம் சென்றவர்களுக்கு இது தொடர்பில் கவனம் செலுத்த நேரமில்லையா அல்லது எமது பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு விளையாட்டுத் துறையில் ஈடுபாடு என்பது குறைவு என்று காட்ட முற்பட்டார்களா என்று தெரியாது. ஆனால் 2019 ஆண்டில் எமது பிரதேசத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் அதற்கு முற்றிப்புள்ளி வைத்தார்கள். அதை நாடே கொண்டாடியது.

அவ்வாறாயின் உங்களது சமூகப் பங்களிப்பின் ஊடாக எமது யாழ் மண்ணுக்குப் பெருமை தேடித் தந்த விளையாட்டு வீர வீராங்களைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?

ஆம். எத்தனையோ பேர்கள் இருக்கின்றார்கள். ஆனாலும் ஒரு சிலரைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அதாவது நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கிடையிலான கபடிப் போட்டியில் பங்கு கொண்டு சாதனை நிலைநாட்டிய எமது மண்ணைச் சேர்ந்த பிள்ளைகள் உள்ளனர். இந்த வீர சாதனைச் செயலை நிலைநாட்டியவர்கள் எமது மண்ணைச் சேர்ந்த இரு மாணவிகளே. விமலேந்திரன் திலகஷ்சனா மற்றும் இராசதுரை பிரியவர்ணா ஆகிய இருவருமாகும்.

இராசதுரை பிரியவர்ணா எனும் வீராங்கனை நெல்லியடி மத்திய கல்லூரியில் கல்வி பயின்றவர். அவர் ஒன்பதாம் ஆண்டில் படிக்கும் போது பாடசாலையில் கபடி அணியில் சேர்ந்தவர். அவருக்கு குறித்த அந்த வயதில் விளையாட்டுத் துறையில் சாதனை நிலை நாட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. 2012 ஆம் ஆண்டு மாவட்டப் போட்டியில் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்டார். பின்னர் மாகாண மட்டப் போட்டிகளில் இவ்விரு பிள்ளைகள் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்டனர். 2019 கொழும்பில் சார்க் கேம் விளையாட்டுப் போட்டிக்காக கொழும்பில் தெரிவு இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று பிள்ளைகள் சென்றனர். இதில் இருவர் தெரிவு செய்யபட்டார்கள். 2019 ஆம் 11 ஆம் ஆண்டு நடைபெற்ற சாக் கேம் விளையாட்டில் மூன்றாடம் இடத்தை பெற்று இலங்கைக்கும் தான் பிறந்து வளர்ந்த மண்ணுக்கும் பெருமை தேடிக் கொடுத்தார்கள்.

இந்தப் பிள்ளைகளுடைய விளையாட்டுத்துறை பயிற்சி ஆசிரியர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு விளையாட்டுத் துறையில் காணப்படும் பிரச்சினைகளையும் தேவைப்பாடுகளையும் செய்து உதவுமாறு வேண்டிக் கொண்டார்கள். அந்த வகையில் என்னால் இயன்ற உதவிகளை நான் செய்து கொடுத்தேன். குறிப்பாக இவை மட்டுமல்ல கால் பந்து , எல்லை, கூடைப் பந்து , கிரிகெட், வலைப்பந்து , கோல் ஊன்றிப் பாய்தல், பளு தூக்குதல் முதலிய அத்தனை வகையிலான விளையாட்டுக்குரிய வேலைத் திட்டங்களுக்கு தனிப்பட்ட ரீதியாகவும் விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகள் மூலமாகமாகவும் எண்ணற்ற உதவிகள் என்னால் இயன்ற வரையிலும் இம்மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்த இரு பிள்ளைகளுக்காக மாதாந்தம் கொடுப்பனவு மாதாந்தம் போசாக்குணவு போன்றவற்றையும் கொழும்பு சென்று போட்டிகளில் கலந்து கொள்வதற்காக விசேட போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து , அந்தப் பிள்ளைகளுடைய வெற்றியில் நானும் ஒரு சிறு பங்காளியாக இருக்கின்றேன் என்கின்ற மனத் திருப்தியும் , சந்தோசமும் எனக்கு இருக்கிறது.

இப்படி பாடசாலைகளுக்கிடையே நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் மாகாண மட்டப் போட்டிகளிலும் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றுவதற்காக போக்குவரத்து வசதிகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றேன். ஒரு தடவை பண்டைதரிப்பு பாடசாலையில் இருந்து நான்கு விளையாட்டுக் குழுவினர்கள் உள்ளனர். அதில் அழைத்துச் செல்வதற்காக உதவி கேட்டார்கள். நான்கு குழுக்களை அழைத்துச் செல்வதற்கு உதவி செய்தேன். அப்பாடசாலையில் இருந்து சென்ற அத்தனை குழுவினர்களும் வெற்றி இலக்கை அடைந்தார்கள்.

மற்றையது 2017 ஆம் ஆண்டில் மலேசியா நாட்டில் ஆசியா விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. பளு தூக்குதல் போட்டியில் உள்ளுருக்குள் தன் வீரத்தை நிலைநாட்டி வந்த கொக்குவிலைச் சேர்ந்த எட்ரின் வூட் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று தம் மண்ணுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்தார். இத்தகைய வீரமகனைப் பெற்றெடுத்த பாடசாலையும் ஊர் மக்களும் பெருமையடையும் வேளையில் அதில் ஒரு சிறு துளிப் பங்கு எனக்கும் இருக்கிறது என்பதில் நான் சந்தோசப்படுகின்றேன்.

இளவாலைச் சேர்ந்த அனிதா என்ற பெண் பிள்ளை 2017 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற திறந்த போட்டியில் கோல் ஊன்றிப் பாயும் விளையாட்டில் கலந்து கொண்டார். எனினும் அவருக்கு இடம் கிடைக்காவிட்டாலும் , அங்கு செல்வதற்கு அப்பிள்ளை சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இப்படி பல்வேறு ரீதியாக விளையாட்டுத் துறையை ஊக்குவித்து வருகின்றேன்.

இவை போன்ற தம் சமூக இயக்கச் செயற்பாடுகளை தங்கு தடையின்றி மேற் கொள்வதற்கு ஒரு அரசியல் பலம் அவசியமாக தேவை இருக்கிறது. அதன் ஊடாக மேலும் விளையாட்டுத் துறையினை விருத்தி செய்து கொள்ள முடியும் என்பது என்னுடய எதிர்பார்ப்பாகும்.

நீங்கள் விளையாட்டுத் துறையை மட்டும் தெரிவு செய்து ஊக்குவிப்பதற்கான முக்கிய காரணம் என்ன?

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஒரு தசாப்த காலாமாயிற்று. ஆனாலும் விளையாட்டுத் துறையை பொறுத்தவரையிலும் குறிப்பாக எமது மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மாணவர் மாணவியர்கள் மத்தியில் திறமைகள் இருந்த போதிலும் அதை வெளியே வெளிக்கொணர முடியாமல் இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஒவ்வொரு விளையாட்டுத் துறையைச் சார்ந்த பயிற்சி ஆசிரியர்கள் பலர் என்னுடன் தொடர்பை வைத்திருந்தார்கள். கால்பந்து விளையாட்டுப் பற்றிப் பேசுவார்கள். கோல் ஊன்றி உயரம் பாய்தல், வலைப் பந்து , 100 மீட்டர் ஓட்டம் என ஒவ்வொரு துறைகளிலும் திறன்வாய்ந்தவர்களை அடையாளம் கண்டு இந்த விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு என்னால் இயலுமான மனிதாபிமான உதவிகளை கடந்த ஐந்து வருடங்களாக செய்து வருகின்றேன்.

இந்த விளையாட்டுத் துறைக்காக அரசாங்கத்தின் வளப்பங்கீடுகளைப் பெற்று எமது விளையாட்டு வீரர்களுடைய தேவைகளையும் சலுகைகளையும் நிறையப் பெற்றுக் கொடுக்க முடியும். முன் பாராளுமன்றம் சென்றவர்கள் மற்றும் மாகாண சபையில் நீண்ட நாள் மக்கள் வாக்குப் பலத்தை எடுத்துச் சென்று விட்டு சுகபோகம் அனுபவித்தவர்கள் எத்தனையோ பேருக்கு அரசியல் பலம் இருந்தும் இதைப் பற்றி அவர்கள் கவனத்தில் கொள்ள வில்லை என்பது கவலை தரும் செய்தியாகும்.

அந்த வகையில் கபடி விளையாட்டுப் போட்டி, கோல் ஊன்றிப் பாய்தல், கால் பந்து வலைப்பந்து, கிரிகெட் விளையாட்டு சார்ந்த அத்தனை விளையாட்டுகளில் ஈடுபடும் வீர வீராங்கனைகளுக்கு உதவி நல்கியுள்ளேன். அவர்களுடைய தேவைப்பாடுகள், எதிர்பார்ப்புக்கள் , என்னால் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்யாவிட்டாலும் , அவர்கள் மத்தியில் விளையாட்டுத் துறை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளளேன் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

அரசாங்கத்தின் அனுசரணையுடன் செய்ய வேண்டிய சேவைகள் நிறையவே இருக்கின்றன. இருந்த போதிலும் இம்மாவட்டத்திலுள்ள பாடசாலை அதிபர்கள் விளையாட்டுத் துறை பயிற்சி ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தொடர்ச்சியான மனிதாபிமானப் பணிகளை நான் செய்து வருகின்றேன்.

என்னுடைய இந்தப் பணிகளை பூரணமாக முன்னெடுத்துச் செல்வதற்கும் அதற்கு வலுசேர்த்துக் கொள்வதற்கான வழிமுறையினை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் , அரசியல் அதிகாரம் தேவைப்பாடுடையது எனும் சில சம்பவங்கள் என் வாழ்வில் நிகழ்ந்தன.

சமூக இயக்கச் செயற்பாட்டாளரான நீங்கள் அதனால்தான் திடீரென தேர்தலில் போட்டியிட முன்வந்தீர்களா?

இலங்கையில் ஒரு போர்க்கால சூழல் வருவதற்கு முன்னர் இந்த நாட்டை கல்வியின் மூலம் நிர்வகித்தவர்கள் தமிழர்களே. இன்று அந்த நிலை மாற்றடைந்துள்ளது. ஏனைய சமூகத்தவர்கள் நாம் தக்க வைத்திருந்த கல்வியை தமதாக்கிக் கொண்டுள்ளார்கள். எனவே நாம் இழந்த கல்வியை மீண்டும் கட்டி எழுப்புவதற்காக அதிகம் போராட வேண்டியிருக்கிறது. அதற்காக அதிக பிரயத்தனம் செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் போரினால் இழந்தவற்றையும் , ஏனைய காரணங்களால் இழந்தவறைறையும் மீளப் பெற்றுக் கொள்ளலாம்.

இதனைச் சீர் செய்வதற்காக என்னுடைய சொந்த செலவில் பின்தங்கிய பாடசாலை மாணவர்களைத் தெரிவு செய்து மெல்லக் கற்போர் வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வேலை செய்து வந்தேன். அது ஒரிரு வருடங்கள் நடந்து கொண்டிருந்த போது அரச நிர்வாக அதிகாரிகளினால் அது தடைப்பட்டு விட்டது. அது ஒருவித உறுத்தலாகவே எனக்கு வருத்தத்தை தந்தது.

தவிர நாட்டில் வெளியிடப்படும் ஒவ்வொரு கல்வி பெறுபேறுகளின் அடிப்படையில் வடமாகாணத்தின் கல்வி நிலை வெகுவாக பின்தள்ளப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது. இதனைச் சீர் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பல்கலைக்கழகம் சார்ந்த ஓய்வுநிலைப் பேராசிரியர்களையும் கல்வியலாளர்களையும், உயர் நிர்வாக உத்தியோகஸ்தர்களையும் உள்வாங்கி ஒரு கூட்டு முயற்சியாக செயற்பட ஆரம்பித்தேன். முன்னாள் வட மாகாண ஆளுநர், பதவியில் இருக்கும் வரையிலும் ஒரு குறித்த காலம் மட்டும் , ஒரு அமுலாக்கக் குழுவாக இருந்து பல வேலைத் திட்டங்களை நாங்கள் முன்னெடுத்தோம். ஒரு முன்னேற்றகரமன வெற்றிகளையும் ஈட்டினோம். அது தற்போது தடைப்பட்டு நிற்கிறது.

வடபுல தமிழ் சமூகத்தின் மத்தியில் கல்வி அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அரசியல் தலையீடுகள் அதற்குத் தடையாக இருக்கின்றது. இந்த சவால்களை முறியடித்துக் கொண்டு போராட்டம் நடத்த வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாக இருக்கிறது. இந்தப் பணிகளை இடையூறுகளின்றி செய்வதற்கும் அரசியல் அதிகாரம் அவசியம் என்பதை அலசிப் பார்த்து இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளராக களமிறங்கி நிற்கின்றேன்.

அரசியல் பிரதிநிதித்துவம் என்பது வெறுமனே இயலாமையிலுள்ளவர்களை பாராளுமன்றம் அனுப்புகின்ற விடயமல்ல. மக்களுக்கு நிறைய எல்லாத் துறைகளிலும் சேவையாற்றக் கூடிய வல்லமை இருத்தல் வேண்டும். ஆளுமையை நோக்கிய பயணம் அவசியமானது. ஆகவே கல்வித் துறையில் மட்டுமல்ல விளையாட்டுத் துறையிலும் , எமது மண்ணைச் சேர்ந்தவர்களுடைய பெயர் , புகழ் போன்றவை பாராளுமன்றத்திலும் , உலக அரங்கிலும் உரத்து எதிரொலிக்க வேண்டும். வெறுமனே நீண்ட காலமாக காலத்தை வீணடித்து நாசமாக்கியவர்களை மீளவும் பாராளுமன்றம் அனுப்பி திரும்பத் திரும்ப தொடர்ந்து செய்த தவறுகளைச் செய்யாமல், மக்களுக்கு சேவை செய்யக் கூடிய சரியானவர்களை பாராளுமன்றம் அனுப்பி யாழ் மாவட்ட மக்களுடைய அரசியலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.


இறுதியாக நீங்கள் கூற விரும்புவது என்ன ?

நான் அரசியலுக்கு நுழைய முன்னரே ஏராளமான சமூகப் பணிகள் செய்துள்ளேன். அப்பணிக்காக உலக அனைத்துப் பல்கலைக்கழம் , கண்டிப் பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்ட்ரேலியா ஆகிய பல்கலைக்கழகம் இணைந்து கண்டியில் நடத்திய சர்தேச சமூகவியல் மாநாட்டில் , மாற்றுத் திறனாளின் பங்களிப்புக்காக சர்வதேச விருது வழங்கி என்னை கௌரவித்தார்கள். அதை விட அதிகமாக அரசியலின் ஊடாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவா எனக்கு இருக்கிறது.

சமூக மாற்றத்துடன் கூடிய அரசியல் சமூக அபிவிருத்தி, சமூக ஒருங்கிணைப்பு, சமூக வலுவூட்டல் போன்ற பல்வேறு பணிகளை முன்னெடுத்து நிச்சயமாக என்னால் பல நல்லவற்றை செய்ய முடியும்.

போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் , பொதுமக்களின் பொருளாதார , கல்வி , சமூக பிரச்சனைகள் தீர்க்கப்படாத நிலையிலேயே இன்றும் காணப்படுகிறது.

அரசாங்கத்தின் மூலம் விளையாட்டு பயிற்சிக் கல்லூரிகள் தென்னிலங்கையில் பல இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆனால் முன்னர் நம்மோடு இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இதைப் பற்றி யோசிக்கவுமில்லை. அதைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன் வரவுமில்லை. வடக்கிலுள்ள , குறிப்பா வடக்கில் ஐந்து மாவட்டத்தில் , ஒரு மாவட்டத்தில் கூட விளையாட்டுப் பயிற்சிக் கல்லூரி ஒன்று கூட இல்லை. நான் பாராளுமன்றமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு வந்தால் நிச்சயமாக இதைப் பெற்றுக் கொடுப்பேன். இப்படி எத்தனையோ பிரச்சினைகள் எமது மாவட்டத்தில் உள்ளன.

எமது மக்களை மீட்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எமக்கு இருக்கிறது. நிச்சயமாக நான் பாராளுமன்றம் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அவற்றை நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையுடன் இப்பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளேன். மக்களது மேலான ஒத்துழைப்பும் நல்லாதரவும் எனக்கு கிடைக்கும் என்ற மிகுந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

என்னுடைய முக்கிய செயற்பாடுகளாக கல்வி மேம்பாடு, பொருளாதார அபிவிருத்தி , ஊழல் ஒழிப்பு , விளையாட்டுதுறை வளர்ச்சி, சுகாதார விருத்தி ,போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு, சுற்றுலாதுறை ஊக்குவிப்பு , போதைப்பொருள் ஒழிப்பு , இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பன உள்ளடங்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தினகரன்

Comments are closed.