புர்காவைத் தடை செய்து முஸ்லிம்களை காயப்படுத்த வேண்டாம். பாகிஸ்தான் தூதுவர் வலியுறுத்து.

“இலங்கையில் நிகாப் மற்றும் புர்கா மீதான தடை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஒரு சம்பவம்.”

இவ்வாறு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டாக் தெரிவித்தார்.

தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இலங்கையில் புர்கா மீதான தடை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளுக்கும், இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளுக்கும் காயத்தை ஏற்படுத்தும்.

சர்வதேச அரங்குகளில் நாடு எதிர்கொள்ளும் தொற்றுநோய் மற்றும் பிற சவால்களால் பொருளாதாரம் பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், பாதுகாப்பு என்ற பெயரில் இத்தகைய பிளவுபடுத்தும் நடவடிக்கைகள், பொருளாதார சிக்கல்களை அதிகரிப்பதைத் தவிர, அடிப்படை மனித உரிமைகள் குறித்த பரந்த அச்சங்களை மேலும் வலுப்படுத்த மட்டுமே உதவும்” – என்றுள்ளது.

தேசிய பாதுகாப்பு காரணமாக, புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனச் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, புர்காவை தடைசெய்யும் அமைச்சரவை பத்திரத்தில் தான் கையெழுத்திட்டார் என்று கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

அத்துடன், அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பான ஆவணம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இது இவ்வாறிருக்க, ஹிஜாப்பைத் தடை செய்யும் நோக்கம் எதுவும் அரசிடம் இல்லை எனவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

ஹிஜாப்பால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதால் அதனைத் தடை செய்யும் நோக்கம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அனுமதி கிடைத்ததும் புர்காவும், நிகாப்பும் தடை செய்யப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.