யாழ். பல்கலை மாணவர்கள் மூவர் உட்பட மேலும் 9 பேருக்குக் கொரோனா!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் ஒருவர் யாழ். நகரைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 62 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் எவருக்கும் தொற்று இல்லை.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 444 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 6 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட யாழ். நகரைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமிக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வசிக்கும் காரைநகர் இ.போ.ச. சாலையில் பணியாற்றும் வாகனத் திருத்துநர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மல்லாவி மீன் சந்தை தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்று சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து 395 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆய்வுகூடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இவர்களில் மூவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த மூவரும் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள். கிளிநொச்சி, புத்தளம் மற்றும் மாத்தறையைச் சேர்ந்த மூவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.