ஐ நாவில் இன்று இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது.

இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஜெனீவா நேரப்படி இன்று முற்பகல் 9 மணிக்கு பிரேரணை குறித்து விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

குறித்த பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நேற்று இடம்பெறுமென முன்னதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் பிரேரணையை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட நேர சிக்கல் காரணமாக இன்று வரை வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையை பிரித்தானியா தலைமையிலான ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன.

இதேவேளை, 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டாமென இலங்கை நட்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், நோபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய வலய நாடுகளின் ஒத்துழைப்பை இலங்கைக் கோரியுள்ளது.

எவ்வாறிருப்பினும் இந்த விடயம் குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், வாக்களிப்பில் பங்கேற்காமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், இலங்கைக்கு ஆதரவளிக்க சீனா தீர்மானித்துள்ளதாக ஜெனீவாவிற்கான சீனாவின் நிரந்தர வதிவிட பிரிதிநி குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டும் என்றதன் அடிப்படையில் இலங்கையை சீனா ஆதரிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை தொடர்பாக இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு எதிராகவும் பாகிஸ்தான் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.