முற்றாக முடங்குமா யாழ்ப்பாணம்? மக்களின் நடத்தையிலேயே முடிவு.

“ஒரு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்தால் அந்த மாவட்டத்தை முற்றாக முடக்குவதா? இல்லையா? என்பது மக்களின் நடத்தைகளில்தான் தங்கியுள்ளது. எனவே, யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சுகாதார ஒழுங்கு விதிகளை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.”

இவ்வாறு இராணுவத் தளபதியும் கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனாத் தாக்கத்தால் யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொரோனாத் தடுப்புக்காக அந்தந்த மாவட்டச் செயலர்கள் தலைமையில் மாவட்ட கொரோனாத் தடுப்புச் செயலணிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு அமைவாக கொரோனாத் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்ததையடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தின் நகரத்தில் சில பகுதிகள் 10 நாள்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தக் கொரோனாத் தாக்கத்தால் வர்த்தகர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, முடக்கப்பட்ட நாட்களுக்குள் வர்த்தகர்கள் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் அறிக்கைகளை சுகாதாரப் பிரிவினரிடம் கையளிக்கவேண்டும். அதன் பின்னர் வர்த்தக நிலையங்களை திறக்க முடியும்.

பொதுமக்களும் முடக்கப்பட்ட பகுதிகளுக்குள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்கான முறையில் அனைத்துத் தரப்பினரும் பின்பற்ற வேண்டும். சுகாதாரப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படைகளின் சேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.