சிறைக்குள் தொற்று பரவல் தலை தூக்கும் அபாயம்

வெலிகடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், ஏராளமான கைதிகள் ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளமையால், சிறைச்சாலைக்குள் தொற்றுநோய் வேகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட கைதிகளின் சுகாதாரப் பாதுகாப்பு குறித்த எந்தவொரு திட்டங்களும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என சிறைக் கைதிகளின் உரிமைகள் தொடர்பில் குரல்கொடுக்கும் முன்னணி அமைப்பு தெரிவித்துள்ளது.

அரச தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், நாலக கலுவேவாவின் கையொப்பத்துடன், வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், வெலிகடை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, உறுதிப்படுத்தியுள்ளார்.

வைரஸைக் கட்டுப்படுத்த குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளியை பேணுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், எனினும் சிறைகளில் ஒரு அங்குல இடைவெளியேனும் இல்லையெனவும் சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து யோசனைகள், மார்ச் 16ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, அந்த அமைப்பின் தலைவர் சட்டத்தரணி, சேனக பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் யோசனைகள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகிய நிலையில், சிறைச்சாலைகளுக்குள்ளும் வைரஸ் பரவினால் ஏற்படும் ஆபத்து குறித்து சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு, அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததோடு, சிறைகளில் காணப்படும் கடுமையான நெரிசலுக்கு தீர்வாக, சிறிய குற்றங்களுக்காகவும் மற்றும் தண்டப்பணத்தை செலுத்த முடியாமலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நிபந்தனையின் அடிப்படையிலாவது விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியது.

முதியவர்கள் மற்றும் கடுமையாக நோய்வாய்ப்பட்ட கைதிகளை விடுவிப்பதற்கான சட்ட விதிகள் தொடர்பிலும் இந்த குழு அரச அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

மீள் பரிசீலனை செயன்முறையை முறையாக அமுல்படுத்தினால் சிறைகளில் ஏற்படும் நெரிசல் குறைவடையும் என அந்தக் குழு தொடர்ச்சியாக அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றது.

பிணை வழங்கப்பட்ட ஏராளமான கைதிகள் அண்மைய காலங்களில் விடுவிக்கப்பட்டாலும், சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் கட்டுப்படுத்த அது போதுமானதாக இல்லையெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் அநுராதபுரம் சிறைச்சாலையின் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அச்சமடைந்த கைதிகள் நடத்திய போராட்டத்தின்போது சிறைக் காவலர்களால் இரண்டு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தமது சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி கைதிகள் நடத்திய ”போராட்டத்தை கட்டுப்படுத்த சென்ற அதிகாரிகள்” துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் பின்னர் உறுதிப்படுத்தினர்.

கைதிகள் சமூகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதை, கடந்த சில வருடங்களாக காணக்கூடியதாக உள்ளதாகவும், சிறைகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதோடு, கைதிகள் மனிதாபிமானத்தோடு நடப்பட வேண்டுமெனவும் சேனக பெரேரா வலியுறுத்தியுள்ளா்ர.

கடுமையான ஒடக்குமுறை மற்றும் அடக்குமுறை

கடந்த ஜூன் மாதம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஸ்ரீலங்காவில் உள்ள சிறைகளில் பத்தாயிரம் பேருக்கு மாத்திரமே இடவசதி காணப்படுகின்ற நிலையில், சுமார் 26 ஆயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முன்னணி மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவரான, ருகி பெர்னாண்டோ சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான கைதிகள் ஒரு சிறிய இடத்தில் அடைத்து வைக்கப்படுவதன் ஊடாக அவர்கள் கடுமையான அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறைக்கு ஆளாவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்காவில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் சந்தேகநபர்கள் மாத்திரமே எனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2018ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களுக்கு அமைய, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 81 சதவீதத்திற்கும் அதிகமானோர் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாக காணப்படாத சந்தேகநபர்கள் மாத்திரமே என ருகி பெர்னாண்டோ கூறியுள்ளார்.

நீதிமன்றங்களால் தண்டனை பெற்று, சிறை வைக்கப்பட்டுள்ளவர்களில் அறுபது சதவீதத்துக்கும் அதிகமானோர், தண்டப் பணத்தை செலுத்த முடியாமல் சிறைத் தண்டனையை அனுபவிப்பதாவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.