அலுவலகங்களில் வாக்கு கோருதல், பிரசுரங்கள் வழங்குதல் தடை

எந்தவோர்‌ அரசாங்க அல்லது மாகாண சபை அலுவலகத்தில்‌ அல்லது அரசாங்கப்‌ பாடசாலையில்‌, உள்ளூர்‌ அதிகாரசபையில்‌, வேறு அரச கூட்டுத்தாபனங்கள்‌ அல்லது நியதிச்சட்ட சபைகள்‌ வசமுள்ள நிறுவனமொன்றில்‌ பாராளுமன்றத்‌ தேர்தலில்‌ போட்டியிடும்‌ வேட்பாளர்கள்‌ சார்பாக வாக்குகளை இரந்து கேட்டல்‌, துண்டுப்‌ பிரசுரங்களைப்‌ பகிர்ந்தளித்தல்‌ அல்லது வேறு அவ்வாறான கருமங்களை மேற்கொள்ளல்‌ அல்லது கூட்டங்களை நடாத்துதல்‌ தடைசெய்யப்பட்டுள்ளது. ஆகையால்‌, அவ்வாறான செயற்பாடுகளைத்‌ தவிர்த்துக்கொள்வது அத்தியாவசியமானதென்று அனைத்து அரசியல்வாதிகள்‌ அல்லது அரசியல்‌ செயற்பாட்டாளர்கள்‌ மற்றும்‌ தொழிற்சங்க செயற்பாட்டாளர்களுக்கு இத்தால்‌ அறிவித்தல்‌ கொடுக்கப்படுகின்றது.

தமது கட்டுப்பாட்டின்‌ கீழுள்ள அரசாங்க அல்லது மாகாண சபை அலுவலகங்களில்‌ அல்லது பாடசாலைகளில்‌ அல்லது உள்ளூர்‌ அதிகாரசபைகளில்‌ அல்லது அரச நிறுவனங்களில்‌, கூட்டுத்தாபனங்கள்‌ மற்றும்‌ நியதிச்சட்ட சபைகளில்‌ இவ்வாறான சட்டவிரோதமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்காதிருத்தல்‌ குறித்த அரசாங்க நிறுவனங்களின்‌ தலைவர்களதும்‌ உப அலுவலகங்களின்‌ தலைவர்களதும்‌ பொறுப்பாகும்‌. இது சம்பந்தமாக தாபனவிதிக்‌ கோவையின்‌ அத்தியாயம்‌ XXXII பந்திகள்‌ 2:4, 2:5 மீது கவனத்தைக்‌ கோர விரும்புகின்றேன்‌.

இது தொடர்பாக தேர்தல்‌ ஆணைக்குழுவினால்‌ வெளியிடப்பட்டுள்ள, தேர்தல்‌ காலப்பகுதியினுள்‌ அரசாங்கத்திற்கு அல்லது அரச கூட்டுத்தாபனங்களுக்கு அல்லது நியதிச்சட்ட சபைகளுக்குச்‌ சொந்தமான யாதேனும்‌ அசையும்‌ அல்லது அசையா ஆதனங்களை கட்சிகள்‌, குழுக்கள்‌, வேட்பாளர்களை ஐக்கப்படுத்துவதற்கு அன்றேல்‌ பாதிப்பை ஏற்படூத்துவதற்குக்‌ காரணமாக அமையக்கூடிய விதத்தில்‌ அல்லது சுதந்திரமானதும்‌ நீதியானதுமான ஒரு தேர்தலை நடாத்தும்‌ கருமத்திற்கு இடையூறை ஏற்படுத்துகின்றவாறு பயன்படுத்தப்படுவதைத்‌ தடுப்பதற்கான பணிப்புகள்‌ தொடர்பான 2178/29 ஆம்‌ இலக்கமும்‌, 2020.06.06 ஆந்‌ திகதியும்‌ கொண்ட இலங்கை சனநாயக சோசலிசக்‌ குடியரசின்‌ அதிவிசேட வர்த்தமானப்‌ பத்திரிகை அறிவித்தலில்‌ குறிப்பிடப்பட்டுள்ள்‌ விடயங்கள்‌ மீதும்‌ கவனம்‌ செலுத்துமாறு இத்தால்‌ அறிவித்தல்‌ கொடுக்கின்றேன்‌.

Comments are closed.