தவறானவர்களது கைகளுக்கு அரசியல் அதிகாரம் போகக் கூடாது : வேலாயுதம் கணேஸ்வரன்

எதிர்காலத்தை கருத்திற் கொண்டு நாங்கள் செயற்பட வேண்டும். எமது எதிர்காலத்தை அரசியலுக்காக மக்களை உசுப்பேத்தி அவர்களின் சிந்தனைகளை வேறு திசைகளுக்கு மாற்றியமைப்பதை விடுத்து கல்விக்காக சிந்தனைகளைத் தூண்டக் கூடிய வகையிலான தம் பிரதேசத்தில் புதிய செயற் திட்டங்களை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். அதற்காக நாங்கள் எல்லோரும் கடுமையாகப் பாடுபட வேண்டும். கல்வி அனைவருக்கும் சமம் என்ற வகையில் சகல மாணவர்களும் சமமான கல்வியை பெற வேண்டும் என்பது பேச்சளவில் இல்லாமல் உண்மையாக செயற்படுத்தும் போது எமது இலக்கை இலகுவாக அடைந்து கொள்ளலாம் என்று யாழ் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம் தினகரன் பத்தரிகைக்கு வழங்கிய செவ்வி.

கல்வி துறையில் அபிவிருத்தி முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் உங்களுக்கு ஏற்பட்டக் காரணம் என்ன?

நான் 2015 ஆம் ஆண்டில் தேர்தலில் களமிறங்கிய போது அது பற்றிய தகவல்களை அறிந்தேன். பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களில் 20 விகிதமானவர்கள் முற்றாக எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் உள்ளார்கள் என்று கூறினார்கள். அதைக் கேள்வியுற்றதும் நான் மிகவும் கவலையும் வேதனையும் அடைந்தேன். உடனடியாக எங்கள் பிரதேசத்தின் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்ற வகையில் கல்வியலாளர்களை சந்தித்து பேசினேன். அவர்களது ஆலோசனைகளுடன் சில வேலைத் திட்டங்கள் முன்னெடுத்தேன்.

ஆரம்பத்தில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகளைத் தெரிவு செய்து கற்றல் உபகரணங்கள் வழங்கினோம். வறிய பிள்ளைகளுக்கு சத்துணவு வழங்கினோம். சில பாடசாலைகளுக்கு ஸ்மாட் வகுப்பறைகளை செய்து கொடுத்தோம். பயண சரமங்களை எதிர்நோக்கும் சில மாணவர்களுக்கு இலகுவாக பாடசாலைக்கு வந்து செல்ல சைக்கிள்களை வாங்கிக் கொடுத்தோம்.

அவை மட்டுமல்ல புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க. பொ. த சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியர்களின் உதவியை பெற்றுக் கொண்டு மிக முக்கியமான பாடங்களான கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலப் பாடங்களை கவனத்தில் கொண்டு இலவசமாக விசேட கருத்தரங்குகளை நடத்தினோம்.

கல்வி அமைச்சினால் ஒரு பாடசாலைக்கு கணனி தொழில் நுட்ப ஆய்வு கூடம் வழங்கியிருந்தார்கள். ஆனால் அதன் வேலைகள் முழுமையாக நிறைவடைந்து இறுதிக்கட்டத்தில் இருந்தது. அது முழுமை பெறா நிலையில் இருந்தது. அதனால் 8 மாதங்களாக மாணவர்களால் பாயன்படுத்த முடியாமல் இருந்தது. அப்பாடசாலை ஆசிரியரின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன் அறக்கட்டளை நிறுவனத்தினால் மீதமுள்ள தேவைகள் சரி செய்யப்பட்டு அதை முழுமையாக்கி மாணவர்களின் பாவனைக்காக கையளித்தோம். இப்படி எத்தனையோ சேவைகளை கல்விக்காக மறைமுகமான முறையில் உதவிகள் செய்து வருகின்றோம்.

நீங்கள் யாழ்ப்பாணத்தில் மெல்லக் கற்போம் என்ற திட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுத்தாகவும் அதற்கு இடையில் தடைகள் ஏற்பட்டாகவும் நாங்கள் அறிகின்றோம். அது பற்றிக் கூற முடியுமா?

உண்மையிலே நாங்கள் பாடசாலைகளில் மெல்லக் கற்கும் மாணவர்களைத் தெரிவு செய்து பிரத்தியேக மாலை நேர வகுப்புக்களை இலவசமாக நடத்தினோம். இந்த வேலைத் திட்டத்தில் அதிகளவிலான மாணவர்கள் இணைந்து கொண்டார்கள். யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை ஒன்றிணைத்தும் நடத்தி வந்தோம். சுமார் 2000 மாணவர்கள் அளவிலான மாணவர்கள் அத் திட்டத்தால் பயன்பெற்று இருக்காலம். இது சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லப்பட்டது உண்மை தான். எந்தவொரு வேலையை திறன்படச் செய்தாலும் காழ்ப்புணர்ச்சியொன்று மற்றவர்களுக்கு ஏற்படுவது இயற்கையான ஒன்று.

எனினும் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வேளையில் இடைநடுவில் இதைச் செய்ய வேண்டாம் என்று மாகாண கல்வி வட்டதாரத்தின் ஊடாக வலயக் கல்வி அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது.

நாங்கள் இம்மாணவர்களுக்கு கற்பித்தவர்கள் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் அல்ல. கல்வியில் திறன் வாய்ந்த தொண்டர் மற்றும் சமூக அக்கறை கொண்ட ஆசிரியர்களை தெரிவு செய்து அவர்களுக்கு சங்கானைத் தோட்டத்திலுள்ள வேல்ட் விசன் நிறுவனத்திற்கு நிதி உதவிகள் வழங்கி விசேட பயிற்சிகள் வழங்கிய பின்தான் இப்பணியை ஆரம்பித்தோம்.

எனினும் தூரதிஸ்டவசமாக பலரது எதிர்ப்புகள் காரணமாக பிரத்தியேக வகுப்புக்களை இடை நடுவில் நிறுத்த வேண்டி வந்தது. இது அந்த எதிர்கால சந்ததிக்கு சிலர் வேண்டுமென்றே மறைமுகமாக செய்த கொடும் செயல் என நினைக்கிறேன். எங்களுடைய பிரதேசத்தில் கல்வியினை எழுச்சிவூட்ட வேண்டும் என்று நாங்கள் முன்னெடுத்த வேலைத் திட்டத்தை முடக்கியது மட்டுமல்ல எமது மாணவர்களின் கல்வி நிலையை மீண்டும் மீண்டும் வீழ்ச்சியை நோக்கி செல்ல வாய்ப்பை ஏற்படுத்தினார்கள். இது எனக்கு கவலையை தந்தது. ஆனாலும் வடபுல மக்களின் கல்வி மேம்பாடு என்பது என் உடலில் ஊறிய இரத்தம் போன்றது. ஆதலால் அதை நான் பெரிதாக பொருட்படுத்தவில்லை. அவர்களது எதிர்காலத்தை சுபீட்சமாக்க அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தோம்.

இது தொடர்பாக முதலமைச்சருடன் கலந்தாலோசித்து தொடர்ந்து அந்த பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டோம். அது பயளிக்கவில்லை. மாகாண கல்வி அமைச்சுக் குழுக் கூட்டங்களில் சிவன் அறக்கட்டளையின் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என அவர்கள் பேசியே தடுத்ததாக நாங்கள் அறிந்தோம். கல்வியை மேம்படுத்துவதற்காக பல வேலைத் திட்டங்கள் முன்னெடுத்தோம். ஆனால் அது முடியாமற் போயிற்று. ஏனென்றால் அரசியல் அதிகாரம் பிழையானவர்களின் கையில் இருப்பதனால் அதைச் செய்ய முடியாமைப் போனது எனலாம். அவர்கள் நல்ல விடயங்களை அவர்கள் செய்யாது போனாலும் அடுத்தவர் செய்வதையும் செய்ய விடாது தடுப்பதிலேயே அக்கறையாக இருந்தார்கள். இதன் தாக்கம்தான் அரசியலுக்கு வர என்னை தள்ளியது. அவர்கள் ஒத்துழைப்பு தந்திருந்தால் நான் அரசியல்வாதியாகி இருக்க மாட்டேன். சமூக தொண்டுகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்திருப்பேன். அரசியல் பலமொன்று இல்லாமல் இங்கு எதையும் செய்ய முடியாது.

உண்மைதான்! சமூகப் பணிகளில் ஈடுபடும் போது இப்படியான பிரச்சினைகள் வருது சகஜம். இதற்கு மாற்றீடாக வேறு என்ன முயற்சியில் ஈடுபட்டீர்கள்?

மாற்றீடாக வறிய மாணவர்களுக்கு புலமைப் பரிசில் நிதி உதவி வழகுங்குதல். சத்துணவு வழங்குதல் போன்ற வேலைத் திட்டத்தை இதுவரையிலும் செய்து கொண்டு தான் வருகின்றோம். தொடர்ந்து செய்யத் தான் போகின்றோம்.

கல்வித் துறையை உயர்வுக்கு கொண்டு செல்ல வேண்டுமாயின் நான் பதவிக்கு வந்தால் நிச்சயமாக இந்தக் கல்வித் துறையை கட்டி எழுப்புவேன். ஏனென்றால் கல்வியைக் கட்டி எழுப்புவதற்காக பல்கலைக்கழக ஓய்வு நிலைப் பேராசிரியர்கள், ஓய்வு நிலை அரச நிர்வாக உத்தியோகஸ்தர்கள் ஓய்வு நிலை உயர் கல்வி அதிகாரிகள் , மருத்துவ நிபுணர்கள் என அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்து ஒரு பலமான நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசனை குழுவொன்றை அமைத்துத் தான் நான் செயற்பட்டேன். எமது வேலைத் திட்டங்கள் வெறுமனே கல்வி எழுச்சியை மாத்திரம் முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல. விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் , பொருளாதாரம் என மக்களுடைய அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளையும் இனங்கண்டு நிறைவேற்றி வைப்பதற்காக ஒரு அமைப்பை உருவாக்கி இதுவரையிலும் செயற்பட்டு வந்திருக்கிறேன்.

நீங்கள் இவை தவிர வேறு என்ன வகையிலான வேலைத் திட்டங்கள் மேற்கொண்டீர்கள் என்று கூற முடியுமா?

முன்னாள் வட மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே இருந்த காலத்தில் அவருடன் எமது கல்வித் திட்டத்தை முன்வைத்து சில வேலைத் திட்டங்களை முன்னெடுத்தோம். பாடசாலைகளில் காலையில் யோகாசனப் பயிற்சிகள் இடம்பெற வேண்டும் என்ற ஆலோசனையை முன் வைத்தோம். ஞாயிறு தினங்களில் அறநெறிப் பாடசாலைகள் சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு ஆலோசனை வழங்கினோம். இவை போன்ற பல வேலைத் திட்டங்கள் அவர் ஊடாக செய்ய முன்வந்தோம். எனினும் துர்திஷ்டவசமாக அவர் அந்தப் பதவியில் இருந்து விலக்கப்பட்டு புதிய ஆளுநராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டார்.

அதற்குப் பின்னர் நாங்கள் முன்னெடுத்த வேலைத் திட்டத்தை தொடர்ச்சியாகச் செய்வதற்கு உதவிகளை பெற புதிய ஆளுநரைச் சந்திக்க முயற்சிகள் செய்தோம். நாம் நான்கு மாத காலமாக அவரைச் சந்திப்பதற்கு முயற்சி செய்த போதிலும் எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தை ஊடகங்களுக்கு தெரிவிப்பேன் என்று கூறிய பின்னர் தான் அவர் எம்மைச் சந்தித்தார்.
நாங்கள் முன்னாள் ஆளுநர் ரெஜினோல் குரே ஊடாக ஆரம்பித்த வேலைகளை தொடர்ந்து செய்வதற்கு அவர் எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்கவில்லை. அவரது நடவடிக்கையின் காரணமாக நிபுணத்துவம் வாய்ந்த அறிவுசார் ஆலோசனைக்கு குழுவினர் மனம் சோர்வடைந்து போனார்கள்.

இந்த இடத்தில்தான் எங்கள் கையில் அரசியல் அதிகாரம் தேவை என்பதை உணர்ந்து கொண்டோம். எங்கள் கையில் அரசியல் அதிகாரம் இல்லை. பிழையான அரசியல்வாதிகளிடம் அதிகாரம் உள்ளது.

சரியானவர்கள் கையில் அதிகாரங்கள் இருந்து எங்கள் கல்வி உண்மையாகக் கிடைக்கும் பட்சத்தில் துவண்டு போயுள்ள எமது குழு உயிர்த்தெழுந்து கல்வி மேம்பாட்டுக்காக பாரிய பணிகளை மேற்கொள்ளும். குறிப்பாக கல்வியில் எங்களுக்கு என்னென்ன பிரச்சினை இருக்கிறது. கல்வியில் என்ன பிழைகள் விடுகிறார்கள் என்பதைப் பார்த்து அதற்கான மாற்று நடவடிக்கைகளை மீண்டும் எங்கள் அறிவுசார் நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசனைக் குழுவின் ஊடாக நிச்சயமாக வீழ்ச்சியடைந்துள்ள கல்வியை மீளக் கட்டி எழுப்ப முடியும் என்பதை உறுதியாக நான் கூற விரும்புகின்றேன்.

தற்போது வட மாகாணத்தின் கல்வி நிலை கடைசி ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. அதை குறைந்தது நான்காவது இடத்திற்காவது கொண்டு வருவதற்கு முயற்சி செய்வேன் என்பதுதான் என்னுடைய முதலாவது இலக்காகும்.

நீங்கள் புலம் சமூகத்துடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிள்ளீர்கள். அவர்கள் மூலமாக எமது எதிர்கால மாணவச் சமூகத்தினுடைய கல்வி எழுச்சியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா?

ஆம்! நிச்சயமாக. உண்மையில் இத் தேர்தலில் வெற்றி பெற்றால் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்களிப்பைக் கொண்டு என்னால் எண்ணற்ற சேவைகளை செய்ய முடியும். குறிப்பாக கனடா, லண்டன் போன்ற நாடுகளில் அதி திறன்மிக்க எமது மண்ணைச் சேர்ந்த ஆசிரியர் வளவாளர்கள் உள்ளார்கள். அவர்கள் எமது தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அந்நாடுகளில் இருந்து இங்கு கற்பிப்பதற்கு தயாரான நிலையில் இருக்கிறார்கள். அந்த வசதிகளை என்னால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். ஏனைய நாடுகளான , பிரான்ஸ் , சுவிஸ் , ஜேர்மனி , நோர்வே போன்ற ஐரோப்பிய நாடுகளில் தொழில் நுட்பங்கள் தெரிந்த அநேக இளையோர் இருக்கிறார்கள். அவர்களின் உதவியைக் கூட நாம் பெறலாம். அவர்கள் உதவ விரும்பினாலும் வழி தெரியாமல் இருக்கிறார்கள். இவர்கள் அவர்களிடம் பணத்தை மட்டும்தான் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் பெற்ற அறிவை நம் மக்களுக்கு கொடுத்து உயர்வடையச் செய்ய வேண்டும் என சற்றும் சிந்தித்ததில்லை.

குறிப்பாகச் சொல்லப் போனால் முன்னாள் வட மாகாண முதலமைச்சர் கனடா சென்ற சமயம் எமது வடபுல மக்களின் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்காக கனடியன் நிதி ஒரு தொகை சேகரித்து வழங்கியுள்ளார்கள். அதில் சிறு தொகையான கனடியன் நிதியை அவர் தன்னுடைய பயணச் செலவுக்காக எடுத்தாலும், அதன் மிகுதி தொகை நிதி இன்னும் கனடாவிலே இருக்கிறது. இப்பணத்தை தனிப்பட்ட ரீதியில் எடுத்து பயண்படுத்த முயற்சிகள் மேற்கொண்டார். ஆனாலும் அப்போதைய ஆளுநர் ரெஜினோல்ட் குரே அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனாலும் பொதுவான முதலமைச்சர் நிதியம் என்ற வகையில் ஒரு முகாமைத்துவ குழுவின் ஊடாக அப்பணத்தைப் பெற்று மக்களுக்குப் பயன்படுத்தலாம் என்று அப்போதைய ஆளுநர் முதலமைச்சரிடம் தெரிவித்திருந்தார்.

எனினும் அதற்கு முதல் அமைச்சர் இணக்கப்பாட்டுக்கு வரவில்லை. அதன் காரணமாக இன்றும் பெருந்தொகை கனடியன் டொலர்கள் பணம் கனடாவில் தேங்கி இருக்கிறது. வெளிநாட்டுத் தொடர்புகளை சரியான முறையில் அவர் பயன்படுத்த வில்லை. அவர் சரியான முறையில் செயற்பட்டிருந்தால் அப்பணத்தைப் பெற்று மக்களுக்கு எவ்வளவோ பெரும் சேவை செய்திருக்கலாம் என்று அதனுடன் தொடர்பு பட்ட கனடாவிலுள்ள வெளிநாட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எமது தமிழ் மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக புலம்பெயர் சமூகம் ஒத்துழைப்புக்கள் , நல்லாதரவுகள் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றார்கள். அவர்கள் செய்யாமலும் இல்லை. தனிப்பட்ட ரீதியாக எத்தனையோ மாணவர்களுக்கு தற்போதும் உதவிகளை நேரடியாக செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட நாங்கள் முனைந்தால் அவர்கள் தாராளமாக உதவுவார்கள் என்பதை உறுதியாகச் சொல்லுகின்றேன். அப்போது அதன் பலமும் பலனும் அதிகமாகும். அந்த சிந்தனை இவர்களிடம் இல்லை. எனவே புலத்திலுள்ளோருக்கும் நாட்டிலுள்ளோருக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்து கொண்டேயிருக்கிறது. அவர்களது கடின உழைப்பில் நன்மைகள் நடக்கும் என அனுப்பும் பணம் நாசமாகும் போது அவர்களுக்கும் தொடர்ந்து உதவும் மன நிலை இருக்காது. விலகி ஒதுங்கிவிடுகிறார்கள்.

உங்களுடைய கல்வி கொள்கைள் என்ன என்பதை விளக்க முடியுமா?

எமது வட மாகாணத்தைப் பொறுத்தவரையிலும் 900 ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருக்கின்றன. வடக்கு மாகாணத்தில் 1200 பாடசாலைகள் உள்ளன. இதுவரையிலும் இங்கே போதுமான அளவு ஆங்கில ஆசிரியர்கள் இல்லை. டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்த ஆங்கில ஆசிரியர்களை தொண்டர் ஆசிரியராக நியமனம் செய்ய வேண்டும் என்று நாங்கள் முன்னாள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்தோம். அவர் அதை ஏற்றுக் கொண்டார். அதற்குப் பின்னர் வந்த முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

குறிப்பாகச் சொல்லப் போனால் ஒரு பின் தங்கிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் ஒரு மாணவி க. பொ. து சாதாரணப் பரீட்சையில் ஒன்பது பாடங்களில் எட்டு ஏ அதி திறமைச் சித்திகளைப் பெற்று இருந்தார். அந்தப் பிள்ளை ஒரு பாடத்தில் மட்டும் சித்தியடைவில்லை. அது ஏன் என்று பார்த்தால் அப்பாடசாலையில் ஐந்து வருடமாக ஆங்கில ஆசிரியர் இல்லை.
எட்டு ஏ அதி திறமைச் சித்திகளை எடுத்த அந்தப் பிள்ளை ஒரு பாடத்தில் மட்டும் சித்தியடையவில்லை என்றால் அந்தப் பிள்ளை பிழை செய்யவில்லை. மாகாண சபை தான் பிழை செய்துள்ளது. இப்படியான பிழைகளை இனங்கண்டு அனைவரும் எந்தப் பாரபட்சமுமின்றி அனைத்து மாணவர்களும் சமமாக கல்வி கற்பதற்கு ஆசிரியர் வளங்கள் சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

கடந்த நான்கு ஐந்து தசாப்பதங்களுக்கு முன்னர் எமது மண்ணைச் சேர்ந்தவர்கள் தான் இலங்கை முழுவதும் கல்வி ரீதியாக ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆசிரியர் தொழில்கள் மட்டுமன்றி அரச சேவை , மருத்தும் என சகல நிர்வாகத் துறைகளிலும் கடமையாற்றி வந்தனர். அத்தோடு நின்று விடாமல் பல்வேறு ரீதியாக நாட்டின் அபிவிருத்திற்கு முக்கிய பங்காளியாக வடபுல மக்கள் இருந்துள்ளனர்.

அதற்கமைய வடபுல மண்ணை மீளவும் கட்டி எழுப்புதற்காக நான் கடந்த ஐந்து வருடங்களாக என்னுடைய சொந்த நிதியில் ஏனையோரது குறை நிறைகளை அறிந்து இன்று வரையிலும் முடிந்த மட்டும் உதவி வருகின்றேன். வறிய மாணவர்களுக்குப் புலமைப் புலமைப் பரிசில் நிதி உதவி வழங்குதல் போன்ற இன்னும் எத்தனையோ இன்னோரன்ன உதவிகளை செய்து வருகிறேன் என்பதை எல்லோரும் நன்கு அறிவார்கள்.

எதிர்காலத்தை கருத்திற் கொண்டு நாங்கள் செயற்பட வேண்டும். எமது எதிர்காலத்தை அரசியலுக்காக மக்களை உசுப்பேத்தி அவர்களின் சிந்தனைகளை வேறு திசைகளுக்கு மாற்றியமைப்பதை விடுத்து கல்விக்காக சிந்தனைகளைத் தூண்டக் கூடிய வகையிலான தம் பிரதேசத்தில் புதிய செயற் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அதற்காக நாங்கள் எல்லோரும் கடுமையாகப் பாடுபட வேண்டும். கல்வி அனைவருக்கும் சமம் என்ற வகையில் சகல மாணவர்களும் சமமான கல்வியை பெற வேண்டும் என்பது பேச்சளவில் இல்லாமல் உண்மையாக எம் மக்கள் மேல் நேசத்துடன் செயற்படுத்தும் போது எமது இலக்கை இலகுவாக அடைந்து கொள்ளலாம்.

போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில் பொதுமக்களின் பொருளாதார , கல்வி , சமூக பிரச்சனைகள் தீர்க்கப்படாத நிலையிலேயே இன்றும் காணப்படுகிறது.

இவற்றை தீர்ப்பதற்கு முன்னின்று செயற்படவேண்டிய அரசியல் தலைவர்கள் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதை விட்டுவிட்டு தங்களது சுயலாபம் கருதிய அரசியல் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களிடம் இருந்து எமது மக்களை மீட்க வேண்டிய கடமையும் பொறுப்பும் சமூக நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு சாதாரண குடிமகனின் கடமையாகவே நான் கருதுகின்றேன் அக்கடமையினை தங்கு தடையின்றி சரியான முறையில் செய்வதற்கு அவர்களது கரத்தினால் வழங்கப்படும் பெறுமதியான வாக்கின் ஊடாக மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் என் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றேன். நிச்சயமாக அவர்களுடைய மேலான ஒத்துழைப்பும் ஆதரவும் என்னுடைய முயற்சிகளுக்கு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கின்றேன். இதுவரை தவறானவர்களை தேர்வு செய்திருந்தால் , இனியாவது சரியானவர்களை தேர்வு செய்ய எம் மக்களிடம் வேண்டுகிறேன். இது உங்கள் வாழ்வு. அதை சரியாக தீர்மானியுங்கள் என்றுதான் நான் சொல்வேன். இதுவரை ஒன்றுமே உங்களுக்கு செய்யாதவர்கள் இனியும் எதையும் செய்யப் போவதில்லை. நாம் தெரியாமல் சிலரை தேர்வு செய்திருப்போம். ஆனால் தெரிந்து தெரிந்தே நாம் தவறானவர்களை தேர்வு செய்யக் கூடாது. சேவை செய்யாத தவறானவர்களை மீண்டும் பாராளுமன்றத்துக்கு அனுப்பும் தவறை செய்யக் கூடாது.

எதிர்காலத்தில் என்னுடைய முயற்சியின் முக்கிய செயற்பாடுகளாக , இபஇபோது போலவே கல்வி மேம்பாடு , பொருளாதார அபிவிருத்தி , ஊழல் ஒழிப்பு , விளையாட்டுதுறை வளர்ச்சி, சுகாதார விருத்தி , போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு , சுற்றுலாதுறை ஊக்குவிப்பு , போதைப்பொருள் ஒழிப்பு , இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பன நிச்சயம் உள்ளடங்கும்.

நேர்காணல் : ஜீவராஜ்

Comments are closed.