இலங்கையில் அரசியல் பழிவாங்கல் தாராளம்! – தமிழர் நிலையையும் சபையில் எடுத்துரைத்தார் ஜனா எம்.பி.

“இந்த நாட்டில் தமிழர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது அரசியல் பழிவாங்கலுக்குச் சிறந்த உதாரணம்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவித்ததாவது:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“நமது அரசின் தலைவர்கள் தம் உதட்டளவில் பேசும் பௌத்த தர்மம், தேசாபிமானம் என்பன தம் உள்ளத்திலிருந்து வெளிவராததன் காரணமாகவே இந்த நாட்டின் உயரிய சபையில் இன்று அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விவாதம் நடைபெறுகின்றது. இதனையிட்டு புத்தரின் போதனைகளை மதிக்கும் ஒருவன் என்ற ரீதியில் வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா அல்லது கௌதம புத்தரைப் போன்று எனது மனைவி, பிள்ளைகளை விட்டுத் துறவறம் போவதா என்ற சிந்தனைகள் எனது மனதைக் குழப்புகின்றன.

ஆட்சி மாறும்போது அமைச்சர்கள் மாற்றம் பெறுவார்கள். அமைச்சின் செயலாளர்கள் மாற்றம் பெறுவார்கள். அத்தனை அரச இயந்திரங்களும் அரசுக்குச் சாதகமாக மாறும்.

கடந்த ஆட்சியில் உயர் பதவிகளில் இருந்தவர்கள் பந்தாடப்படுவார்கள். இது நமது நாட்டில் ஆட்சி மாறும் போது இடம்பெறும் சாதாரண காட்சி.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கம் அரசமைப்புக்கு முரணல்ல என்று இன்று வாதிடும் நீதி அமைச்சர் அலிசப்ரி பிரதம நீதியரசர் மோகன் பீரிஷை நீக்கியமை அரசமைப்புக்கு முரண் எனக் கூறுவது அரசியல் பழிவாங்கல்களின் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு ஒப்பானது.

தமது இனத்துக்குள்ளே, தமது மதத்துக்குள்ளே மாறி மாறி ஆட்சியமைக்கும் அரசியல் தலைவர்களினால் அரசியல் பழிவாங்கல்கள் ஏற்படுகின்றன ன்றால் அர்த்தபுஷ்டியுள்ள அதிகாரப்பகிர்வுக்காகவும் புறக்கணிப்புக்கு எதிராகவும் சமத்துவத்துக்காகவும் போராடும் எமது மக்கள் எத்தனை விதத்தில் பழிவாங்கப்பட்டிருப்பார்கள். இத்தகைய பழிவாங்கல்களுக்காக நியாயம் கேட்க முடியாத நாதியற்ற சமூகமாக எமது மக்கள் எவ்வளவு காலம் வாழ்ந்திருப்பார்கள்? தேசிய சுதந்திரப் போராட்டத்திலிருந்து தேசியத்துக்காக உழைத்த எமது தலைவர்கள் இன்று உரிய தேசிய மரியாதையின்றி புறக்கணிக்கப்படுகின்றார்கள். ஆனால், எமது இனத்தின் பேரில் அரசுக்கு ஆதரவு வழங்கும் ஒரு சில அரசியல்வாதிகளுக்கு எலும்புத்துண்டுக்கும் குறைவான மரியாதையை மக்கள் வழங்குகின்றார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்

ஆட்சியாளர்களுக்குச் சார்பாக அரச சட்டங்கள் வளைந்து கொடுக்கின்றன. கிரிஷாந்தி குமாரசாமி வழக்கில் நீதிமன்றத்தின் மூலம் சந்தேகத்துக்கிடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்ட மரணதண்டனைக் கைதி ஒருவர் சிங்கள இராணுவச் சிப்பாய் என்பதால் அவர் அரசின் பொதுமன்னிப்புக்கு ஆளாகின்றார். இப்படி எத்தனையோ இராணுவத்தினர் நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனைத் தீர்ப்பிலிருந்து பொதுமன்னிப்புப் பெற்றுள்ளனர். ஆனால், தாயை இழந்து தனியாக உறவினருடன் வாழும் தன் மகளினதும் மகனினதும் வாழ்வைக் காப்பாற்றுவதற்காக ஆனந்த சுதாகரனுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள் என்று முழந்தாளில் நிற்காத குறையாக அகிலமே வேண்டியும் கூட ஆட்சியாளரின் அகிம்ஷைக் கண் திறக்கவில்லை.

26 வருடங்களுக்கும் மேலாக வழக்குத் தாக்கலின்றி வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் எத்தனை அரசியல் கைதிகள் சிறைகளில் வாடுகின்றனர். இவர்கள் செய்த குற்றம் என்ன? தன் இனத்தை தன் மொழியை தன் மண்ணை நேசித்ததா குற்றம்? இதுபோன்ற அரசியல் பழிவாங்கல் இராணுவ ஆட்சி நடக்கும் நாட்டில் கூட நடந்ததாக அண்மைய வரலாற்றுப் பதிவுகள் இல்லை. ஆனால், உலகுக்கு ஜனநாயகத்தைப் போதித்த நாடாளுமன்ற சம்பிரதாயங்களின் தாய் எனப் போற்றப்படும் பிரிட்டனுக்கு முன்னரே சர்வஜன வாக்குரிமையை வழங்கியதாக பெருமை கொண்ட எமது நாட்டில் இத்தகைய பழிவாங்கல்கள் என்று ஓயும்? இவை ஓயுமா அல்லது அடுத்த தலைமுறைக்கும் நகர்த்தப்படுமா?

அரச பதவி நியமனங்களில் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படுகின்றார்கள். அண்மைய இலங்கை நிர்வாக சேவை பரீட்சை முடிவு இதற்குச் சான்றாகும். மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையிலே கடந்த முறை 69 பேர் அழைக்கப்பட்டிருந்தும் அவர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை. இது ஒரு திட்டமிட்ட பழிவாங்கல். பதவிகளை வழங்கும்போது தகுதிக்கும் திறமைக்கும் முன்னுரிமையளியுங்கள். இனத்துக்கும் உறவுக்கும் முன்னுரிமை வழங்காதீர்கள்.

எமது நாடு முன்னைய சிறப்பை அடைய வேண்டுமானால் ஆட்சியாளர்கள் கடந்த கால வரலாறிலிருந்து பாடம் கற்க வேண்டும் . அதிலிருந்து உங்களின் தவறுகளைக் கண்டுபிடியுங்கள். அவற்றுக்குச் சிறந்த தீர்வை வழங்குங்கள். வரலாற்றிலிருந்து பாடம் கற்காத எவரும் மக்கள் போற்றும் அரசு தலைவராக மிளிர முடியாது. இதனை உணர்ந்து உங்கள் தீர்மானங்களை எடுங்கள். இந்த நாட்டில் தமிழர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது அரசியல் பழிவாங்கலுக்குச் சிறந்த உதாரணம்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.