கொரோனாத் தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு! – சுகாதாரத் தரப்பினர் தகவல்

இலங்கையில் முதலாம் கொரோனாத் தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதார அமைச்சிடம் தற்போது வரையில் 3 இலட்சத்து 30 ஆயிரம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் மாத்திரமே இருக்கின்றன எனவும், மேலும் 6 இலட்சம் தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் சுகாதாரத் தரப்பினர் கூறுகின்றனர்.

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு இந்தியாவின் தயாரிப்பான ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டியுள்ளது.

நேற்றுப் புதன்கிழமை தொடக்கம் இரண்டாம் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு ஆரம்பித்தாலும், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்நிலையில், இந்தியா ஏற்கனவே அனுப்பி வைத்த தடுப்பூசிகளில் 3 இலட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் கைவசம் இருக்கின்ற நிலையில், மேலும் 6 இலட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்கள் மேலதிகமாக வழங்குவதாக தெரிவித்த தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட ஐந்து நாடுகளிடம் இருந்து ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும், அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளை எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை ஏற்ற முடியும் எனவும், அதற்குள் அவசியமான தொகையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருவருக்கு இரண்டு தடுப்பூசிகளை ஏற்றுவதை விடவும் ஒருவருக்கு ஒரு தடுப்பூசியை ஏற்றி, சகலருக்கும் பாதுகாப்பு வழங்குவது இப்போதுள்ள நிலையில் ஆரோக்கியமானது எனத் தாம் கருதுவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.