நாள்தோறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டக்கூடிய அபாய நிலைமை.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் நாளாந்த எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடக்கும் அபாய நிலைமை வரும் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரச மருத்துவமனைகளில், நோயாளர்களுக்கான கட்டில்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதைத் தவிர்ப்பதற்காக, இலங்கை இராணுவத்தினரால் கொரோனா நோயாளர்களுக்காகத் தனியொரு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகின்றது.

கம்பஹா மாவட்டம் – சீதுவ பிரதேசத்தில், தற்காலிக கொரோனா நோயாளர்களுக்கான மருத்துவமனை அமைக்கப்படுகின்றது.

இந்த வைத்தியசாலையில், முதற் கட்டமாக, ஆயிரத்து 200 நோயாளர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய, ஆயிரத்து 200 நோயாளர் கட்டில்கள் தயார்படுத்தப்பட்டுள்ள நிலையில், கட்டில்களின் எண்ணிக்கையை, விரைவில் 10 ஆயிரமாக அதிகரிக்க எதிர்பார்ப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில், அரச வைத்தியசாலைகளில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கட்டில்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைமையானது, எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாம் எனத் தெரிவித்துள்ள தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர, எதிர்வரும் நாட்களில், நாளாந்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடக்கலாம் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளார்.

அதன் காரணமாக, மேலதிகமாக தொற்றாளர்களுக்காக சிகிச்சை அளிக்கக் கூடிய வசதிகள் அவசியம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.