சர்வகட்சி கூட்டத்தை உடன் கூட்டவும்! – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது சம்பந்தமாக ஆராய்வதற்காக உடனடியாக சர்வகட்சி கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரான கபீர் ஹாசீம் எம்.பி. மேற்படி வேண்டுகோளை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அலையின்போது அரசு, சர்வகட்சி கூட்டத்தைக் கூட்டியது. எதிர்க்கட்சியின் சார்பில் தலைவர் சஜித் பிரேமதாஸவும், செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் பங்கேற்றனர். இரண்டு கூட்டங்களுக்கு மாத்திரமே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முதலாவது அலையை சிறப்பாகக் கட்டுப்படுத்துகின்றோம், எனவே, முழுப் புகழும் அரசுக்கே கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகளை அரசு இவ்வாறு புறக்கணித்திருக்கக்கூடும்.

ஆனால், இன்று என்ன நடக்கின்றது? வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி கண்டுள்ளது. இந்த நிலைமை தொடருமானால் நெருக்கடியான நிலைமை உருவாகக்கூடும். எனவே, மக்களைப் பாதுகாத்து, நாட்டை மீட்டெடுக்க வேண்டும்.

இதற்காக சர்வகட்சித் தலைவர் கூட்டத்தைக் கூட்டுமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கின்றோம். அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கவும். யோசனைகளை, ஆலோசனைகளை உள்வாங்கவும். நாட்டை மீட்க இணைந்து செயற்படுவோம். பிறகு அரசியல் செய்யலாம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.