இஸ்ரேல் குண்டு மழை: பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்வு.

இஸ்ரேல் ராணுவத்தின் ராக்கெட் குண்டு வீச்சுக்கு அஞ்சி, காசா பகுதியில், ஏராளமான பாலஸ்தீனியர்கள், குடும்பத்துடன் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்காசியாவைச் சேர்ந்த இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில், பாலஸ்தீனிய குடும்பங்களை வெளியேற்றும் முயற்சி நடக்கிறது. இதை எதிர்த்து, பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினர், ஜெருசலேமில் ராக்கெட் குண்டுகளை வீசினர். இதில் இஸ்ரேல் ராணுவ வீரர் உட்பட ஏழு பேர் பலியாயினர்.இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம், காசா பகுதியில் தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசி வருகிறது.

இஸ்ரேல் ராணுவம் காசாவில் நடத்திய, 600க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டு வீச்சில், மூன்று பெரிய கட்டடங்கள் தரைமட்டமாயின.

இஸ்ரேல் ராணுவம் வான்வழியாகவும், எல்லையோரம் பீரங்கி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 19 பெண்கள், 36 குழந்தைகள் உட்பட, 137 பேர் பலியாகியுள்ளனர். 920 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.ஹமாஸ் படையின் முக்கிய தளபதிகள், 20 பேர் இறந்துள்ளனர். ஆனால், பலி அதிகம் இருக்கும் என்கிறது, இஸ்ரேல் ராணுவம்.ஹமாஸ் படையினரின் பதுங்கு குழிகளை குறி வைத்து, இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இரவு, பகலாக குண்டு மழை பொழிவதால், காசா புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர், குடும்பங்களுடன் பாதுகாப்பான இடங்களை தேடிச் செல்கின்றனர்.இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் பல குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கமாக குண்டு வீச்சுக்கு முன், குடியிருப்பு பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பின்பே இஸ்ரேல் தாக்குதல் நடத்தும். தற்போது எச்சரிக்கையின்றி தாக்குவதால், உயிர் பிழைக்க குடும்பத்துடன்இடம் பெயர்வதாக, காசா பகுதியைச் சேர்ந்த சதாலா தனானி என்பவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே எகிப்து, கத்தார் மற்றும் ஐ.நா., ஆகியவை போர் நிறுத்தம் தொடர்பாக தொடர்ந்து சமரச முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.