யாழில் கொரோனாவுக்கு முடிவுகட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் விவசாய விளைப்பொருட்களைச் சந்தைப்படுத்தல் தொடர்பில் இன்று முக்கிய கூட்டம் நடைபெற்றது. யாழ். மாவட்ட அரச அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. இதன்பின்னர் யாழப்பாணத்தின் நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, மேற்படி கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன என்று மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ். மாவட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் விற்பனை செய்யப்பட்டு எஞ்சியுள்ள விவசாய உற்பத்திப் பொருட்களை மாகாணத்துக்கு வெளியே அல்லது வடக்கு மாகாணத்துக்குட்பட்ட மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு எவ்வாறு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் அல்லது மொத்த வியாபாரிகளிடம் எவ்வாறு அதனைச் சேர்ப்பித்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

விவசாய உற்பத்திப் பொருட்களை அதிக அளவில் கொண்டுள்ள விவசாயிகளை எவ்வாறு மொத்த வியாபாரிகளுடன் இணைப்பது தொடர்பில் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது குறித்து ஆராயப்பட்டது.

ஜனாதிபதியின் ‘நஞ்சற்ற விவசாயத்தை ஊக்குவிப்போம்’ என்ற எண்ணக் கருவுக்கு அமைய சேதனப் பசளை மூலம் மாவட்டத்தில் விவசாய உற்பத்தியை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் சேதனப் பசளை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கக் கையாள வேண்டிய உத்திகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

இன்றைய கூட்டத்தின்போது ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் தகவல்களைப் பெற விரும்பும் விவசாயிகள் வடக்கு மாகாண விவசாய உதவிப் பணிப்பாளருடன் தொடர்புகொண்டு அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது” – என்றார்.

இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாகாண உதவி விவசாயப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.