பாபா ராம்தேவின் திடீர் பல்டி: ‘மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள்; விரைவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’!

யோகாவும், ஆயுர்வேதமுமே எனக்கு போதும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளமாட்டேன் என முன்னர் கூறிய யோகா குரு பாபா ராம்தேவ், திடீரென அவரின் நிலைப்பாட்டிலிருந்து பல்டி அடித்து விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளதுடன், மருத்துவர்கள் கடவுளின் தூதர்கள் எனவும் போற்றிப்பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிடவும் அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர், அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது எனவும் யோகா குரு பாபா ராம்தேவ் பேசிய வீடியோ பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில் அலோபதி மருத்துவர்கள் பாபா ராம்தேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். பாபா ராம்தேவின் கருத்துக்காக அவரிடம் 1,000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸையும் அனுப்பினர்.

இந்நிலையில் நேற்று ஹரித்துவாரில் சாலை திட்டப்பணி தொடக்க விழாவில் கலந்து கொண்ட பாபா ராம்தேவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான் விரைவாகவே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வேன். யோகா, ஆயுர்வேதம் ஆகிய பலத்துடன் பலத்துடன் கொரோனா தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டால் இரட்டை அரண் பாதுகாப்பை பெறுவீர்கள். இவ்வாறு செய்தால் கொரோனாவுக்கு எந்த ஒரு உயிரும் பலியாகாது.

ஜூன் 21ம் தேதி முதல் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி எனும் வரலாற்று சிறப்புவாய்ந்த திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என பாராட்டிய பாபா ராம்தேவ் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

நல்ல அலோபதி மருத்துவர்கள் கடவுளின் தூதுவர் போன்றவர்கள், அதில் எனக்கு சந்தேகம் கிடையாது. உண்மையில் மருத்துவர்கள் பூமிக்கு கிடைத்த ஆசிர்வாதம், இருப்பினும் மனச்சாட்சியற்ற மருத்துவர்கள் சிலரும் இருக்கிறார்கள் அந்த ஒரு சிலருக்காக அலோபதி மருத்துவத்தை குறை சொல்ல முடியாது. என்னுடைய போராட்டம் எந்த ஒரு அமைப்புக்கும் எதிரானது அல்ல, மருத்துவ மாஃபியா கும்பலை எதிர்த்து மட்டும் தான் போராடுகிறேன்.

மக்களை தேவையில்லாத மருந்துகள் மற்றும் சிகிச்சையில் இருந்து காப்பாற்ற வேண்டும். அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளில் அலோபதி தான் சிறந்தது. இருப்பினும் வாழ்க்கை முறை நோய்களை குணப்படுத்த நம் முன்னோர்கள் தந்த யோகாவும், ஆயுர்வேதமும் தான் சரி. இதைத்தான் நான் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்துகிறேன்” இவ்வாறு யோகா குரு பாபா ராம்தேவ் கூறினார்.

அலோபதி மருத்துவம் மற்றும் மருத்துவர்கள் குறித்து பாபா ராம்தேவ் பேசிய பேச்சு கடந்த சில வாரங்களுக்கு முன் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது திடீரென அவரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது ஆச்சரியத்தை தருவதாக உள்ளதாக அலோபதி மருத்துவத்துறையினர் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.