விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட சிவசங்கர் பாபா – சிபிசிஐடி அலுவலத்தில் தொடரும் விசாரணை

டெல்லியில் கைதான சிவசங்கர் பாபாவை தமிழக சிபிசிஐடி போலீஸார் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் சிவசங்கர் பாபவிற்கு சொந்தமான சுசில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்ததை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினர்.

இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மாறாக, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனிலுள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அவரது தரப்பில் கூறப்பட்டது.

இதற்கிடையில், வெளிமாநிலங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அவர் மீது லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. எனினும், மருத்துவமனையில் சிவசங்கர் பாபா தப்பி ஓடினார்.

டெல்லியில் இருப்பது உறுதியான நிலையில் சிபிசிஐடி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காசியாபாத்தில் வைத்து சிவசங்கர் பாபாவை டெல்லி காவல்துறை உதவியுடன் இன்று காலை கைது செய்தனர். தமிழகம் அழைத்து வருவதற்காக சாகேத் நீதிமன்றத்தில் டிரான்சிட் ரிமாண்ட் பெற சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை டெல்லி சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் மாலை 3.30 மணிக்கு நீதிபதி விபில் சந்த்வார் முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதி சிவசங்கர் பாபாவை தமிழ்நாடு சிபிசிஐடி அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்த முழுமையான அனுமதி வழங்கினர். இதனையடுத்து விமானம் மூலம் சிவசங்கர் பாபா சென்னை அழைத்து வரப்பட்டார். எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.