தொண்டமானின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஊடகவியலாளருக்கு கொரோனா என பரவிய தகவல் பொய்யானது : தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் சுதத் சமரவீர

முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான தொண்டமான் அவர்களது இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவருக்கும் மற்றும் இருவருக்கும் கொரோனா அறிகுறிகள் தென்படுவதாக இன்று (03) வெளியிடப்பட்ட செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட ஊடகவியலாளர் ஹட்டன் நிருபர் ஆவார் . இவர் சுவாச நோய் காரணமாக டிக்கோயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதோடு சுவாசம் சம்பந்தமான நோயாளிகளுக்கு தற்போதைய நிலையில் PCR சோதனை செய்யப்படுவதால் இந்த ஊடகவியலாளருக்கும் அதே சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அவருடன் வந்த இரு நெருங்கிய நண்பர்களும் தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவிய போதிலும் அவர்கள் வழமைபோல் இருப்பதாக அவர்களை தொடர்பு கொண்ட எமது நிருபர் இன்று தெரிவித்தார்.

இது குறித்து தொற்று நோயியல் பிரிவின் தலைவர், சுதத் சமரவீரா, அந்த ஊடகவியலாளருக்கு சுவாச பிரச்சனை இருந்தமையால் வைத்தியரால் PCR பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டாரேயன்றி , அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அல்ல என தெரிவித்தார்.

அவருக்கு அப்படி ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவ மேற்பார்வைக்கு அனுப்பப்படுவார் என்று மேலும் திரு சமரவீரா தெரிவித்தார். அவர் டிக்கோயா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற போதிலும் அவரது உடல் நலம் நல்ல நிலையில் உள்ளதாக தெரியவருகிறது.

பிந்தி கிடைத்த தகவல்:
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.