தரக்குறைவான பேச்சு: மேனகா காந்தியை கண்டித்து கால்நடை மருத்துவர்கள் போராட்டம்!

மருத்துவரை தரக்குறைவாக பேசிய முன்னாள்மத்திய அமைச்சர் மேனகா காந்தியை கண்டித்து நாடு முழுவதும் கால்நடை மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.

முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பி.யுமான மேனகா காந்தி, கால்நடை மருத்துவர் ஒருவருடன் பேசிய ஆடியோ வெளியாகியது. அதில், கால்நடை மருத்துவரை மேனகா காந்தி மிகவும் தரக்குறைவாக பேசிய உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. சாதி ரீதியிலாகவும் மேட்டிமைதனத்துடன் மேனகா காந்தி பேசியிருப்பதாக விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், மேனகா காந்தியின் இந்த பேச்சை கண்டிக்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள கால்நடை மருத்துவர்கள் நேற்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரித்தனர். மேலும், கருப்புப் பட்டை அணிந்து அவர்கள் தங்கள் பணியில் ஈடுபட்டனர். மேனகா காந்தியின் பேச்சை வன்மையாக கண்டிப்பதாக இந்திய கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் உமேஷ் சர்மா கூறியுள்ளார். கொரோனா காலத்தில் 150க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு இந்தியகால்நடை மருத்துவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. மேனகா காந்தி தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும் தனது பேச்சு தொடர்பாக பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.