‘மேகதாதுவில் அணை கட்டுவோம்’: எடியூரப்பாவின் பேச்சுக்கு தமிழகம் எதிர்ப்பு

மத்திய அரசிடம் அனுமதி பெற்று காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுப்போம் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியதற்கு காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகம் தரப்பில் கடும் எதிரப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 12-ஆவது கூட்டம் காணொலி வாயிலாக இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் பிரதிநிதியாக தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா பங்கேற்றுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய அரசிடம் அனுமதி பெற்று காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.

இது குறித்து பேசிய தமிழக பிரதிநிதி, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் பேச்சு காவிரி ஆணையக் கூட்டத்தில் கடும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் இருக்கக் கூடாது. மேகதாதுவில் மட்டுமல்லாமல், காவிரி ஆற்றின் குறுக்கே எங்கு அணை கட்ட வேண்டும் என்றாலும் எங்கள் அனுமதி தேவை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகம் மத்திய அரசிடம் எவ்வாறு அனுமதி பெற முடியும் என்று தமிழகம் சார்பில் கடும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.

12-ஆவது காவிரிநீா் மேலாண்மைக் கூட்டத்தில், ஆணையத்தின் நிா்வாகப் பணியாளா்கள் தோ்வு மற்றும் காவிரி நீா் தொடா்பாக மதுரை, பெங்களூரு உயா்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் தொடா்பாக பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மேட்டூா் அணை தொடா்பான சரபங்கா நீா்ப்பாசன திட்டத்தை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபோன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஹரங்கி நீா்தேக்கம் தொடா்பான வழக்குகளும் உள்ளது. இந்த வழக்குகள் தொடா்பாக மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருந்தது. காவிரி நதி நீரில் மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்களும் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்திற்கு உள்பட்டது என்பதால், ஆணையமும் எதிா் மனுதாராக உயா்நீதிமன்ற வழக்குகளில் சோ்க்கப்பட்டுள்ளது.

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக தற்போது பொறுப்பேற்றிருப்பவா் மத்திய நீா்வள ஆணையத் தலைவா் எஸ்.கே. ஹல்தாா். ஆணையத்திற்கென தனியாக தலைவா் நியமிக்கப்படவில்லை.

கடந்த ஜூன் 17 – ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமும் மீண்டும் வருகின்ற ஜூன் 30 -ஆம் தேதிக்கு அதன் தலைவா் நவீன் குமாா் தலைமையில் நடைபெற இருப்பதாக மத்திய நீா் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தற்போது பருவ மழை பெய்து காவிரியில் புதிய நீா் வரத்து தொடங்கும் நிலையில், இந்தக் கூட்டங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக மே மாதம் வரை காவிரியில் திறந்துவிடப்பட்ட நீா் அளவுகள், தரவுகள் போன்றவைகள் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்பிடப்படும் எனவும் ஜூன் மாதத்தில் வந்த நீா் தரவுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.