ஓரணியில் நின்று தீர்வுக்காகச் செயற்பட தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகளுக்கு அழைப்பு ‘சூம்’ மூலம் கலந்துரையாடல்.

ஒருமித்த நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடலுக்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகளுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை மாலை 5 மணிக்கு மெய்நிகர் இணையவழி ஊடாக இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கு செல்வம் அடைக்கலநாதன் மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலின் பின்னராக ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் சிக்கல் மிகுந்த பிரச்சினைகளுக்கு தமிழ் மக்கள் முகம் கொடுத்து நிற்கின்றோம்.

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அரசு எமது தாயக பரப்பில் காணி நிலங்களை அபகரித்து வருகின்றது. தொல்லியல், அபிவிருத்தி, மாவலி திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனப் பல காரணங்களைக் கூறினாலும் அடிப்படையிலேயே திட்டமிட்ட குடியேற்றங்களை குறிவைத்த நடவடிக்கைகளாக இவை அமைந்திருக்கின்றன. அதேபோன்று மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அதிகாரங்களை மெதுவாக அரசு கையகப்படுத்தி வருகின்ற சூழலையும் காணுகின்றோம். இவற்றைத் தடுத்து நிறுத்தவும் இருக்கக்கூடிய அதிகாரங்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் எங்களுக்கு இருக்கின்றது.

சர்வதேச சூழலிலேயே எமக்குச் சார்பான பல விடயங்களுக்காக வல்லரசு நாடுகள் இலங்கை அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் இவ்வேளையில் நாம் ஒருமித்த நிலைப்பாட்டில் அரசியல் விடயங்களை தாயகப் பரப்பில் கையாள்வதன் மூலம் சாதகமான உள்ளக அரசியல் சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்த முடியும்.

ஆகவே, காலத்தின் தேவையைக் கருத்தில்கொண்டு எந்தெந்த விடயங்களில் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ்த் தேசிய கட்சிகள் ஆகிய நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் வினையாற்ற முடியும் என்ற ஆரம்பகட்ட மெய்நிகர் இணையவழி ஊடான கலந்துரையாடலுக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

தேர்தல் நோக்கங்கள், கட்சி நலன்கள் மற்றும் தனிப்பட்ட விரோதங்களை தாண்டி செயற்படும் நோக்கத்திலேயே இந்த அழைப்பு விடுக்கப்படுகின்றது.

நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள உங்கள் சம்மதத்தை எதிர்பார்த்து நிற்கின்றேன்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.