கேரளாவில் கர்ப்பிணி உட்பட 10 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு!

கேரளாவில் கர்ப்பிணி பெண் உட்பட 10 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் உடலில் சிகப்பு கட்டிகள் ஏற்பட்டதையடுத்து கடந்த ஜூன் 28ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அப்பெண்ணுக்கு நேற்று முன் தினம் குழந்தை பிறந்தது. அப்பெண் நலமுடன் உள்ளார். இந்நிலையில், அவரது மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

கேரளாவைச் சேர்ந்த 19 பேரின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது. இதில், குறைந்தது 13 பேருக்காவது ஜிகா தொற்று இருக்கும் என எதிர்பார்ப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியிருந்தார். இந்நிலையில், கர்ப்பிணி பெண் உட்பட 10 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பெண், மாநிலத்தை விட்டு வெளியே சென்றதில்லை. அவரது வீடு தமிழ்நாட்டு எல்லையில் அமைந்துள்ளது. கர்ப்பிணியின் தாயாருக்கும் இந்த அறிகுறிகள் ஏற்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு, சிக்கன்குன்யா ஆகிய நோய்களை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்களால்தான் ஜிகா வைரஸும் பரவுகிறது. இந்த வைரஸ் பாதிப்பு முதன்முதலாக 1947-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் குரங்குகளில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பு பின்னர் மனிதர்களிடமும் கண்டறியப்பட்டது. தலைவலி‌, முதுகுவலி, உடல் சோர்வு, கண் சிவத்தல் போன்றவை ஜிகா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.

Leave A Reply

Your email address will not be published.