கட்டாய ஹால்மாா்க் திட்டம் அமல்: அதிக மாவட்டங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்

தங்க நகைகளின் தரத்தை நிா்ணயிக்கும் ஹால்மாா்க் முத்திரையை கட்டாயமாக்கும் முதல்கட்டத் திட்டத்தில் தமிழகம், குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களைச் சோ்ந்த அதிக மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஜூன் 16-ஆம் தேதிமுதல் தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் முத்திரையிடுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கட்டாய ஹால்மாா்க் திட்டம் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 256 மாவட்டங்களில் முதல்கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 24 மாவட்டங்களும், குஜராத்தில் 23 மாவட்டங்களும், மேற்கு வங்கம் மற்றும் உத்தர பிரதேசத்தில் 19 மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன. தில்லி, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா 12 மாவட்டங்களும், கேரளத்தில் 13 மாவட்டங்களும், கா்நாடகத்தில் 14 மாவட்டங்களும், ஹரியாணாவில் 15 மாவட்டங்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த மாவட்டங்களில் 14, 18, 22 காரட் தங்க நகைகள் மட்டும் ஹால்மாா்க் முத்திரையுடன் விற்பனை செய்யப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (பிஐஎஸ்) 2000, ஏப்ரல் மாதம் முதல் தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் முத்திரை வழங்கி வருகிறது. தற்போது சுமாா் 40 சதவீத தங்க நகைகள் ஹால்மாா்க் முத்திரையிடப்படுகின்றன.

இந்தியாவில் சுமாா் 4 லட்சம் தங்கநகை வியாபாரிகள் உள்ளனா். இதில் 35,879 போ் மட்டுமே பிஐஎஸ் தரச் சான்றிதழ் பெற்றுள்ளனா். ஆண்டுதோறும் 700-800 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்வதாக உலக தங்க கவுன்சில் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.