விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிகள் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு.

மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக கொவிட் 19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிகளை கட்டமைக்கும் செயற்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு முறையே அச்சுவேலி பிரதேசத்திலும், குப்பிளான் தெற்கு விவசாய சம்மேளன பிரிவிலும் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் வெங்காய களஞ்சியத்திற்கான அடிக்கல்லினை அச்சுவேலி பிரதேசத்திலும் உருளைக்கிழங்கு களஞ்சியத்திற்கான அடிக்கல்லினை குப்பிளான் தெற்கு விவசாய சம்மேளன பிரிவிலும் நாட்டி வைத்தார்.

குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுநர் அவர்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் சிந்தனையில் உருவான “சுபீட்சத்தின் நோக்கு கொள்கை” அடிப்படையில் நாட்டில் விவசாயத் துறையில் தற்போது ஒரு புரட்சி ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு விவசாய மக்களுக்கு அனுகூலமான விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதில் மிக முக்கியமான சேதனப் பசளை உற்பத்தி திட்டம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தினை ஐரோப்பிய யூனியன் பாராட்டியுள்ளதுடன் ,சேதன முறையில் உருவாக்கப்பட்ட மரக்கறிகளுக்கான சந்தை வாய்ப்பு அதிகமாக இருப்பதனால் இச்சந்தர்ப்பத்தை உள்ளூர் உற்பத்தியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

எனவே உள்ளூர் உற்பத்திகளுக்கு உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் சிறந்த விலையைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேதனப்பசளை உற்பத்திக்கு யாழ்மாவட்டம் சிறப்பானதொரு இடமென தெரிவிக்கப்பட்டதுடன் சேதனப்பசளை உற்பத்தியின் அதிகரிப்பிற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என தெரிவித்தார்.
இவ் விவசாய புரட்சியின் ஒரு அங்கமாக விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிக்காக வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய திட்டத்தை ஆரம்பிக்க உதவிய விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் அவரது முன்னைய செயலாளர் சுமித் பெரேரா ஆகியோருக்கு

வட மாகாண ஆளுநர் அவர்கள் தனது நன்றிகளை தெரிவித்தார்.

மேலும் யாழ் மக்களுக்கு தேவைகள் அதிகமாக உள்ளது. அத்தேவைகளை தேடியறிந்து செய்யவேண்டிய கடப்பாடு அரசு அதிகாரிகளுக்கு உள்ளதாகவும் அதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்று தனது அன்பான வேண்டுகோளை முன் வைத்த கௌரவ ஆளுநர் அவர்கள் மேலும் விவசாய மக்களின் தேவைகள் மாகாண சபை மற்றும் மத்திய அமைச்சின் ஊடாக நிறைவேற்றப்படும் என்ற ஒரு உறுதிமொழியையும் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.