சிறுமியின் மரணம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும் : வேலுகுமார் எம்.பி

“மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் முழுமையானதொரு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். தமது வீட்டில் நடந்த சம்பவம் தொடர்பில் உண்மை நிலைவரத்தை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டிய சமூகப் பொறுப்பு, கடமை ரிஷாத் பதியுதீனுக்கு இருக்கின்றது. ஏனெனில், அவர் ஒரு மக்கள் பிரதிநிதி. கட்சித் தலைவர். இதற்கெல்லாம் அப்பால் ஒரு தந்தை. எனவே, அவர் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். உண்மை வெளிவர, நீதியைப் பெற்றுக் கொடுக்க அவர் ஒத்துழைப்பு வழங்குவார் என நாம் நம்புகின்றோம்.”

– இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சிறார்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில் அற்ப பணத்துக்கு ஆசைப்பட்டு சிறார்களை வெளியிடங்களுக்குத் தரகர்கள் வேலைக்கு அழைத்துச் செல்கின்றமையானது ஆட்கடத்தலுக்கு ஒப்பான செயல். எனவே, சிறார்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் அவர்களைப் பொறுப்பேற்பவர்கள் என அனைவரும் ஏதேவொரு விதத்தில் குற்றவாளிகளே.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் மலையக சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல தரப்பினரும் இது தொடர்பில் குரல் கொடுத்து வருகின்றனர். இளைஞர்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆகவே, இந்தச் சம்பவத்துக்கு நீதி நிவாரணத்தை வலியுறுத்தும் அதேவேளை சமூக மாற்றத்துக்கான விழிப்புணர்வு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் மீண்டும் இவ்வாறானதொரு துயர் சம்பவம் நிகழாமல் இருப்பதைத் தடுக்க முடியும்.

மலையகப் பெருந்தோட்டப்பகுதிகளில் இருந்து சிறார்கள் வேலைக்கு செல்வதை தடுப்பது தொடர்பில் வலைத்தளங்களில் குரல் கொடுக்கும் இளைஞர்கள், களத்தில் இறங்கி சமூகபொறுப்புடன் விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும். அதற்கான முழு ஒத்துழைப்பையும் நாம் வழங்குவோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.