முகம் காட்ட விரும்பாத மகாராஜா, முகம் காட்டாமலே விடை பெற்றார் (Video)

ஒரு சகாப்தத்தின் முடிவு: கெப்பிட்டல் மகாராஜா குழும தலைவர் திரு ஆர். ராஜமகேந்திரன் விடைபெற்றார்!

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர், மரியாதைக்குரிய திரு. ராஜேந்திரன் ராஜமகேந்திரன் அவர்கள் இன்று (25) காலமானார்.

கொழும்பூ நவலோக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, தனது 78 ஆவது வயதில் இன்று (25) இறைவனடி சேர்ந்தார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவர் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அசைக்க முடியாத ஒரு மனிதராக கடைசிவரை விளம்பரங்களுக்கு முகம் காட்டாது தனது பணியை செய்த ஒரு செயல் வீரனாக வாழ்ந்த மகாராஜா , தனது வாழ்வின் இறுதி நொடிவரை தனது முகத்தை காட்டாமலே அனைவரையும் விட்டு பிரிந்தார். மகாராஜா என்ற பெயர் தெரிந்தாலும் ஊடகங்களிலோ அல்லது புகைப்படங்களிலோ அவரது முகம் அதிகம் வராது. அதை அவர் விரும்பியதே இல்லை. பின்னால் இருந்து அனைவரையும் இயக்கும் ஒரு உந்து சக்தியாகவே வாழ்ந்தார்.

இலங்கை – இந்திய சினிமா – தொலைக்காட்சி கூட்டு முயற்சிகளில் அவரது பங்கு அளப்பரியது. அதேபோல சிங்கள திரை மற்றும் தொலைக்காட்சி துறையிலும் அவரது பங்களிப்பு அதிகமாகவே இருந்தது. அவரது ஊடகம் அநேகருக்கு தாய் வீடாக இருந்துள்ளது.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பொரளை பொது மயானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றன.

1943 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி பிறந்த திரு. ராஜேந்திரன் ராஜமகேந்திரன் அவர்கள், கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.

அன்னார் தமது 16 ஆவது வயதில் தமது சகோதரருடன் தமது தந்தையின் மகாராஜா நிறுவனத்தில் இணைந்தார்.

திரு. ராஜேந்திரன் ராஜமகேந்திரன் அவர்கள், தமது 21 ஆவது வயதில் தந்தையின் இழப்பை அடுத்து தமது சகோதரருடன் வர்த்தக நடவடிக்கையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வர்த்தகம் சார்ந்த பாரிய அறிவு மற்றும் பயிற்சி இல்லாத காலப் பகுதியிலேயே அவர் அந்தப் பொறுப்பை ஏற்றார்.

அன்று முதல் இன்று வரை உலகின் கௌரவத்திற்குரியவராக, பல்வேறு துறைகளிலும் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தி, நிறைவான மக்களின் இதயங்களை வென்ற விசேட நிறுவனமாக பாரிய வர்த்தகக் குழுமமொன்றை அன்னார் கட்டியெழுப்பினார்.

இலங்கை முதலீட்டு சபையின் அங்கீகாரம் பெற்ற முதலாவது முதலீட்டுத் திட்டத்தை உருவாக்கிய பெருமை அன்னாரையே சாரும்.

விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தம்பே உள்ளிட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குரிய, பாரிய பல்நோக்குத் திட்டங்களை உருவாக்குவதற்கு தமது நிறுவனத்தினூடாக அன்னார் அளப்பரிய பங்களிப்பைச் செய்தார்.

இலங்கைக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் அந்தஸ்து கிடைப்பதற்கும் அன்னார் முன்நின்று செயற்பட்டமை இரகசியமல்ல.

இலங்கையில் கையடக்கத் தொலைபேசி சேவையை நவீனமயப்படுத்தி, மக்கள் சிறந்த வசதியுடனான சேவையைப் பெறக்கூடிய வகையில் டயலொக் நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கும் திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்கள் அடித்தளமிட்டார்.

அதனையடுத்து, இலங்கையின் மிகப்பெரும் ஊடக வலையமைப்பை ஆரம்பித்து இலங்கை ஊடகத்துறையின் நவீனமயப்படுத்தலுக்கு வழிகாட்டி புரட்சிகரப் பயணத்தை அன்னார் ஆரம்பித்தார்.

நியூஸ்பெஸ்ட் செய்தி ஊடகத்தை நேரடியாக வழிநடத்தி, மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்கள், பல தசாப்தங்களாக கைவிடப்பட்ட மக்களுக்காக மக்கள் சக்தி தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை உருவாக்கி ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தினார்.

திரு. ராஜேந்திரன் ராஜமகேந்திரன், சாமானிய மனிதர் அல்லர். அவர், சுதந்திர இலங்கையின் ஓர் எழுச்சிமிகு அத்தியாயம்.

அரசியல் மற்றும் ஏனைய துறைகளில் கடந்த கால மற்றும் நிகழ்காலத் தலைவர்கள், தமது துறையில் முன்னேறுவதற்கு அன்னார் தன்னலமற்ற ஒத்துழைப்பை நல்கினார்.

எவ்வித அனுகூலங்களையும் ஒருபோதும் எதிர்பார்க்காமல், ஒத்துழைப்பு நல்குபவராகவே அன்னார் திகழ்ந்தார்.

சில சந்தர்ப்பங்களில் அவர்கள், அவருக்கு எதிராக செயற்பட்ட போதிலும் அடிபணியாத தைரியத்தையும் துணிச்சலையும் கொண்டவராக திரு. ராஜேந்திரன் ராஜமகேந்திரன் அவர்கள் மிளிர்ந்தார்.

சாமானியர்கள் தொடர்பில் அவருக்கிருந்த நெஞ்சார்ந்த பிணைப்பே அதற்கான காரணமாகும்.

அன்னார், இலாபம் தொடர்பில் கருத்திற்கொள்ளாது மக்களுக்காகத் தொடர்ந்தும் செயற்பட்ட உன்னத மாமனிதர்.

திரு. ராஜேந்திரன் ராஜமகேந்திரன் அவர்கள் எவ்வித பிரதிபலனையும் ஒருபோதும் எதிர்பார்த்திராத ஒப்பற்றவர்.

இந்து, பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் என அனைத்து சமயங்களையும் சமமாக மதித்த அன்னார், அவற்றின் வளர்ச்சிக்காகவும் அரும்பணியாற்றினார்.

மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் முன்நின்ற அன்னார், பிரிவினைக்கு ஒருபோதும் துணைபோகவில்லை.

நல்லிணக்கத்தின் அடையாளமாகவே அன்னார் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தை கட்டியெழுப்பினார்.

எவ்வித பேதங்களுமின்றி, திறமையால் முன்னோக்கிச் செல்வதற்கு வழிகாட்டிய நிரந்தர முன்னுதாரணத் தலைவரே திரு. ராஜேந்திரன் ராஜமகேந்திரன் அவர்கள்.

இசை, ஓவியம், நடனம், சினிமா போன்ற துறைகள் தொடர்பிலும் ஆழமான அறிவைக் கொண்டிருந்த அன்னார், கலையை ஆத்மார்த்தமாக நேசித்த கலாரசிகன் ஆவார்.

மக்களுடன் பின்னிப்பிணைந்த புதிய எண்ணக்கருவினூடாக பல தசாப்தங்களாக சக்தி மற்றும் சிரச ஊடக வலையமைப்பு பயணித்துள்ளமை, அன்னாரின் ஈடுணையற்ற திறமைக்கான மற்றுமோர் சான்றாகும்.

திரு. ராஜேந்திரன் ராஜமகேந்திரன் அவர்கள் தமது வாழ்நாளில் பல சவால்களை சளைக்காமல் எதிர்கொண்டவர்.

1983 ஆம் ஆண்டில் மகாராஜா நிறுவனத்திற்கு தீ வைக்கப்பட்டதுடன், 2009 ஆம் ஆண்டில் சக்தி – சிரச ஊடக வலையமைப்பின் தெபானம கலையகத்திற்கும் தீ வைக்கப்பட்டது.

அன்னாரின் உயிருக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதுடன், சில சந்தர்ப்பங்களில் அன்னார் தமக்கு நெருக்கமானவர்களையும் இழக்க நேரிட்டது.

ஆனாலும், தாம் ஆழமாக நம்பிய உண்மை மற்றும் சத்தியத்திற்காக அன்னார் சளைக்காமல் முன்நின்றார்.

தாய் நாட்டிற்காகவும் எம் அனைவரினதும் எதிர்காலத்திற்காகவும் போராடியவரே திரு. ராஜமகேந்திரன் அவர்கள்
அன்னார் ஜனரஞ்சகத்தையும் பிரபல்யத்தையும் எதிர்பார்த்த ஒருவரல்லர்.

எனினும், மக்களுக்காக தமது பொறுப்பை அமைதியாக நிறைவேற்றினார்.

வெளிநாடுகளுக்கு அடிபணியாத, இறைமையுள்ள இலங்கைக்காகச் செயற்பட்ட ஒருவரே திரு. ராஜேந்திரன் ராஜமகேந்திரன் அவர்கள்.

மக்கள் மகிழ்ச்சியாக வாழும், சுபீட்சமான நாடே அவரின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக இருந்தது.

திரு. ராஜேந்திரன் ராஜமகேந்திரன் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையினூடாக உருவாக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமம், அன்னாரின் அந்த உயரிய நோக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றது.

குறுகிய நலன்களை எதிர்பார்த்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தீங்கான வாணிபத்தில் ஈடுபடாத திரு. ராஜேந்திரன் ராஜமகேந்திரன் அவர்கள், அனைத்து சந்தர்ப்பங்களிலும் உண்மைக்காகவே முன்நின்றார்.

அவரின் தலைமைத்துவத்தின் நோக்கம் பின்தொடர்பவர்களை உருவாக்குவதல்ல, மாறாக தலைவர்களையே அவர் சிருஷ்டித்தார்.

எமது தலைவர் நம்பியவாறே, சத்தியத்தின் சக்தி இறுதியில் அனைத்தையும் வெற்றி கொள்ளும்.

எமக்காகவும் நாட்டிற்காகவும் ஆற்றிய நற்பணிகளுக்கு நன்றி!

உங்களின் தன்னலமற்ற சேவைக்கும் நன்றி!
நீங்கள் எம் மீது கொண்டிருந்த அன்பிற்கு நன்றி!
உங்களின் அர்ப்பணிப்பிற்கு நன்றி!
எம் மீது நம்பிக்கை கொண்டிருந்தமைக்கு மிக்க நன்றி!
சிம்ம சொப்பனமான பெருந்தலைவரே!

நீங்கள் வளர்த்த அனைவரும் உங்களின் உன்னதப் பணியை உங்களின் வழியில் தொடர்வோம் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
எம்மிடமிருந்து விடைபெற்ற எமது அன்பிற்குரிய தலைவரின் ஆத்மா சாந்தியடைய, கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. சஷீ ராஜமகேந்திரன் அவர்கள், முகாமைத்துவத்தினர் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் பிரார்த்திக்கின்றோம்.

Umachandraa Pragash
www.newsfirst.lk

Leave A Reply

Your email address will not be published.