தொடர்ந்து மிரட்டும் கொரோனா… இந்தியாவிலும் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ்

தொடர்ந்து கொரோனா உருமாற்றம் கண்டு வருவதால், மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அளிக்க வேண்டிய தேவை உருவாகலாம் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2ம் அலை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையை சாதகமாக பயன்படுத்தி தடுப்பூசி பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேவேளை, உருமாறிய கொரோனா காரணமாக, பிரித்தானியா போன்ற நாடுகள் பொதுமக்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் அளிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் தொடர்பில் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவிக்கையில், பொதுமக்கள் மத்தியில் நோயெதிர்ப்பு சக்தி குறையும்போது, பூஸ்டர் டோஸ் தேவைப்படும்.

அதாவது உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறையும் போது அதை, பூஸ்டர் டோஸ் மூலம் ஈடு செய்து கொள்ளலாம். புதிய உருமாறிய கொரோனாவையும் கட்டுப்படுத்தும் அடுத்த தலைமுறை தடுப்பூசிகளை கொண்டு இந்த பூஸ்டர் டோஸ் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், நாட்டிலுள்ள அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்கப்படும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கும் வாய்ப்புகள் அதிகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, 12-18 வயதுடைய சிறார்கள் மத்தியில் ஸைடஸ் காடிலா தடுப்பூசி சோதனை ஏற்கனவே முடிந்துவிட்டது.

ஸைடஸ் காடிலா நிறுவனம் ஏற்கனவே அவரசக்கால அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் சிறார்களுக்கான தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிவிடும்.

எனவே, பள்ளிகளை படிப்படியாக நாம் திறக்க தொடங்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.