கேட்கும் வரங்கள் அனைத்தையும் அருளும் வரலட்சுமி விரதம்.

வரலட்சுமி விரதம்!

செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியின் ஓர் அம்சமே வரலட்சுமி. கேட்கும் வரங்கள் அனைத்தையும் அருளும் வரலட்சுமியை விரதமிருந்து வழிபடும் நாளே வரலட்சுமி விரத நன்னாள்.

இந்த விரதம் மாங்கல்ய பாக்கியத்திற்காகவும்,கணவரின் தீர்க்காயுளுக்காகவும்,குடும்பத்தில் செல்வம் பெருக கடை பிடிக்கும் விரதம்.

செல்வம், பூமி, கல்வி, அன்பு, புகழ், சாந்தி, மகிழ்ச்சி, பலம் ஆகிய எட்டையும் அருளும் தேவியர்களே அஷ்டலட்சுமியர் என்று வழிபடப்படுகின்றனர். அஷ்டலட்சுமியரின் அம்சமாக இருந்து கேட்கும் வரங்களை அருள்பவளே வரலட்சுமி.

வருடந்தோறும் ஆடி அமாவாசைக்குப் பிறகு, பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமைதான் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் நாள். பல தடவை வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்திலேயே வரும்.

இந்த நன்னாளில்தான் மகாலெஷ்மி அவதரித்ததாக கூறப்படுகிறது.

இந்த விரதத்தை கன்னிப்பெண்கள் இருந்தால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானமும், ஆரோக்கியமும் கிடைக்கும். மாமியார் – மருமகள் உறவு மேம்படும். விரும்பிய நலன்கள் எல்லாம் கிடைக்கும். வீட்டில் செல்வம் நிறையும் என்பது ஐதீகம்.

சக்தியின் வடிவமாகப் போற்றப்படும் பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொண்டு மகாலட்சுமியைப் பூஜித்து வழிபட்டால் இல்லத்தில் மகாலட்சுமியின் கடாட்சம் பெருகும். வரங்கள் அனைத்தையும் அருளும் ஸ்ரீ மகாலட்சுமியை நம் இல்லத்துக்கு வரவேற்றுப் போற்றி வழிபடுவோம்… அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெற்று இன்பமாகவும், வளமாகவும் வாழலாம்!

விரதம் இருக்கும் முறை!

பூஜையறையில் ஒரு தலைவாழை இலையில் ஒரு கலசம் (பித்தளை அல்லது வெள்ளிச் சொம்பு) வைத்து அதில் பச்சரிசி அல்லது சுத்தமான தண்ணீரால் நிரப்ப வேண்டும். தண்ணீர் நிரப்பினால், அதனுடன் சிறிது மஞ்சள் பொடி, ஒரு எலுமிச்சைப் பழம் மற்றும் கருகமணிகள் சிறிது சேர்க்க வேண்டும்.

கலசத்தை நிரப்பிய பிறகு கலசத்தின் மேல் மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் தடவிய கயிறுகளை கலசத்துக்கு முன்பாக பழம், தேங்காய், தாம்பூலம் வைக்கப்பட்டிருக்கும் தாம்பாளத்தில் வைக்கவேண்டும்.

பிறகு கலசத்தில் மாவிலை செருகி, அதன் நடுவில் மஞ்சள் பூசிய தேங்காயை வைக்க வேண்டும். அதன் மேல் அம்மன் முகத்தை வைத்து (தற்போது பூஜைப் பொருள்கள் விற்கும் கடைகளில் கிடைக்கிறது) அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு பாவாடை போன்ற வஸ்திரத்தைச் சாத்தி, நம் விருப்பப்படி மலர்களாலும், நகைகளாலும் அலங்கரிக்க வேண்டும். கலசத்துக்கு முன்பாக மஞ்சளினால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.

நல்ல நேரமாகப் பார்த்து தூய பக்தியுடன், ‘சுக்லாம் பரதரம்’ என்ற ஸ்லோகம் சொல்லி விநாயகரை பூஜிக்க வேண்டும். விநாயகர் பூஜை முடிந்ததும் கலசத்தில் வரலட்சுமியை ஆவாஹணம் செய்து, விஷ்ணு சகஸ்ரநாமம், லக்ஷ்மி சகஸ்ரநாமம் போன்ற பக்தி ஸ்லோகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும். நிறைவாகப் பழங்கள் மற்றும் இனிப்புகளைக் கொண்டு நைவேத்தியம் செய்து மங்கல ஆரத்தி எடுக்க வேண்டும். பூஜை முடிந்ததும் மஞ்சள் கயிற்றை எடுத்துக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். அன்றைக்கு மாலை சில சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்துத் தாம்பூலம் தர வேண்டும்.

ததாதி பிரதி க்ருஹ்ணாதி’ என்பார்கள். அதாவது, நாம் எதைக் கொடுக்கிறோமோ, அதுவே நமக்குக் கிடைக்கும். கனிவும் கருணையும் கொண்டவள் ஸ்ரீமகாலட்சுமி. அவளை மகிழ்வித்தால், அவள் நம்மையும் நம் குடும்பத்தையும் மகிழச் செய்வாள்.

விரதம் இருக்க முடியாதவர்கள் மகாலட்சுமியை பூசை செய்து மனமுருக வேண்டினால் போதும் நல்லதே நடக்கும்.

Leave A Reply

Your email address will not be published.