சிவகாசியில் நூதன முறையில் வங்கி ஏடிஎம்மில் ரூ. 40 ஆயிரம் திருடிய பெண் தலைமறைவு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் புதன்கிழமை நூதன முறையில் வங்கி ஏடிஎம்மில் ரூ. 40,000 திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகாசி வெம்பக்கோட்டை சாலை சித்துராஜபுரம் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(58). இவர் சிவகாசி வெம்பக்கோட்டை சாலையில் உள்ள வங்கிக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது ஏடிஎம் வளாகத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு பெண்ணிடம் பணம் எடுக்க உதவி செய்யுமாறு கோரியுள்ளார். அந்தப் பெண் அவரிடம் இருந்த கார்டை வாங்கி ரகசிய குறியீட்டு எண்ணை கேட்டுள்ளார். கிருஷ்ணமூர்த்தி ரகசிய குறியீட்டு எண்ணை கூறியுள்ளார். பின்னர் ஏடிஎம் கார்டை இயந்திரத்தில் செலுத்தியவர் உங்கள் கார்டு வேலை செய்யவில்லை. வங்கிக்குச் சென்று விவரங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று கார்டை திருப்பிக் கொடுத்துள்ளார். அந்தக் கார்டை வாங்கிய கிருஷ்ணமூர்த்தி சென்று அங்குள்ள ஊழியரிடம் விபரம் கேட்டபோது அந்த ஏடிஎம் கார்டு உங்களுடையது இல்லை எனக் கூறியுள்ளா.

இதையடுத்து வங்கிக்கு வெளியே வந்து ஏடிஎம் இயந்திரம் பகுதியில் அந்தப் பெண்ணை கிருஷ்ணமூர்த்தி தேடிப் பார்த்தபோது அந்தப் பெண் அங்கு காணவில்லை. பின்னர் ராணுவத்தில் இருக்கும் அவரது மகன் முத்துக்குமார் செல்லிடப்பேசிக்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.40,000 எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து முத்துக்குமார் கிருஷ்ணமூர்த்தியை தொடர்புகொண்டு வங்கியில் பணம் எடுத்தீர்களா நீங்கள் ரூ. 40,000 எடுத்துள்ளதாக எனக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது என கேட்டுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கிருஷ்ணமூர்த்தி தான் பணம் எடுக்கவில்லை எனவும், பெண் ஒருவரிடம் ரகசிய குறியீட்டு எண்ணை கூறியதை அடுத்து அருகில் உள்ள வேறு வங்கி ஏடிஎம்மில் கிருஷ்ணமூர்த்தி கார்டை பயன்படுத்தி ரூ. 40,000 அந்தப்பெண் எடுத்துள்ளது தெரிய வந்தது.

கிருஷ்ணமூர்த்தி தனது கார்டை வாங்கி அந்த பெண் வேறு ஒரு கார்டை தன்னிடம் கொடுத்துவிட்டு தனது கார்டை பயன்படுத்தி வங்கி ஏடிஎம்மில் ரூ. 40,000 திருடிச் சென்றுவிட்டதாக சிவகாசி நகர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிச் சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.