கரை தொடாமல் சாகும் பெண்கள் : சண் தவராஜா

பிறக்கும் உயிரினங்கள் அனைத்துக்கும் இந்தப் பூமியில் வாழ்வதற்கான உரிமை உண்டு. ‘சிறப்படைந்த விலங்கு’ எனக் கருதப்படும் மனிதன் இந்தப் பூமியில் தான் வசதியாகவும், சொகுசாகவும் வாழ்வதற்காக இந்த உலகின் ஏனைய உயிரினங்களை அழித்து வருவது கண்கூடு. இதனால் இயற்கையின் சமநிலை குலைக்கப்படுவதுடன், அது பல மாற்றங்களுக்கு உட்பட்டு உயிர் வாழ்க்கையையே அச்சுறுத்தும் நிலைக்கு இட்டுச் செல்கின்றது. முன்னெப்போதும் அறியாத இயற்கை அழிவுகள் ஏற்படுவதுடன், உயிர்ப்பலிகளும் நிகழ்கின்றன.

எமது மூதாதையர் எமக்குக் கையளித்துவிட்டுச் சென்ற அற்புதமான உலகை நமது தலைமுறை காப்பாற்றத் தவறியதோடு மட்டுமல்லாமல், எதிர்காலச் சந்ததிக்கு அபாயகரமான நிலையில் உள்ள, நிச்சயமற்ற உலகையே தந்துவிட்டுச் செல்ல இருக்கிறோம் என்பதே யதார்த்தம். சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் முதல் இயற்கையை நேசிக்கும் அனைத்துத் தரப்பினரும் மனித குலமும், ஒட்டுமொத்த உயிரினங்களும் எதிர்கொண்டுள்ள ஆபத்துகள் பற்றி எச்சரித்து வந்தாலும், இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட மனித வாழ்வில் அத்தகைய எச்சரிக்கைகள் புறக்குடத்தில் ஊற்றிய நீராகக் கண்டுகொள்ளப்படாமல் போவதைப் பார்க்கிறோம்.

மனித குலத்தால் உருவாக்கப்படும் உலகின் ஏனைய உயிரினங்களின் இருத்தலுக்கான ஆபத்துகள் ஒருபுறம் இருக்க, மனித குலத்திற்கு உள்ளாகவே ஒரு பாலினத்தோருக்கு எதிராக அத்தகைய இருத்தலுக்கான ஆபத்துகள் உருவாகி உள்ளமை தொடர்பிலும், அதனால் மனித குலம் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் குறித்தும் பேசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

மனித குலத்தின் விருத்திக்கு பெண்களின் பங்களிப்பு மிகமிக அவசியமானது. அவர்கள் தாய்மை அடையாவிட்டால் சந்ததி வளர்ச்சி என்பதே இருக்காது என்பதே யதார்த்தம். மனிதனின் வாழ்க்கை முறைமை காரணமாக ஆண்கள் மத்தியில் உருவாகிவரும் மலட்டுத் தன்மையின் விளைவாக இன விருத்தியில் தடங்கல் உருவாகியுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில், கருவிலேயே பெண் குழந்தைகளைக் கொல்லும் போக்கு அதிகரித்து வருவதாக வெளிவந்துள்ள ஆய்வு ஒன்று, மனித குலத்தின் எதிர்காலம் தொடர்பான கவலையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

‘பி.எம்.ஜே. குளோபல் ஹெல்த்’ என்ற பெயரிலான ஆய்வு நிறுவனம் ஒன்று ஆண், பெண் குழந்தைப் பிறப்பு தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கையொன்றை புள்ளிவிபரங்களுடன் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் பிரகாரம் உலகில் பெண் குழந்தைகளின் பிறப்பு வீதம் குறைவடைந்து செல்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10 வருடங்களுள் உலகம் முழுவதும் 4.7 மில்லியன் பெண் குழந்தைகளின் பிறப்பு தடுக்கப்பட வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கும் அந்த அறிக்கை, மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில் 2100ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 22 மில்லியன் பெண் குழந்தைகள் பிறக்காமல் தடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கிறது.

பிறக்கின்ற குழந்தைகளை ஆண், பெண் எனப் பிரித்துக் கணக்கெடுக்கும் வழக்கம் 1970களிலேயே ஆரம்பமானது. அன்று முதல் இன்று வரையான காலப்பகுதியில் 45 மில்லியன் பெண்களின் பிறப்பு தடுக்கப்பட்டு உள்ளது. இதில் 95 விழுக்காடு இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளில் மாத்திரம் நிகழ்ந்துள்ளது.

உலகில் அதிக சனத்தொகையைக் கொண்ட நாடுகளுள் முதல் இரண்டு இடங்களை வகிப்பவை சீனாவும் இந்தியாவும். இந்த நாடுகளில் மாத்திரமன்றி, குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் பெண் பிள்ளைகளை விடவும் ஆண் பிள்ளைகளைப் பெறுவதையே அதிகம் விரும்பும் போக்கு குறிப்பிட்ட காலம் முதல் நடைமுறையில் இருந்து வருகின்றது. பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்குக் கள்ளிப் பால் தந்து கொல்லும் வழக்கம் அண்மைக் காலம் வரை தமிழகத்தில் இருந்ததை நாம் அறிவோம்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய ‘கருத்தம்மா’ படம் இத்தகைய சம்பவத்தைக் கதைக் களமாகக் கொண்டிருந்தமை தெரிந்ததே. திராவிட இயக்கங்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகள் மேற்கொண்ட தொடர் போராட்டங்களால் மக்கள் மத்தியில் உருவாகிய விழிப்புணர்வு காரணமாகவும், கடுமையான தண்டனைகளுடன் கூடிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டமையாலும் இந்த வழக்கம் ஒழிந்து விட்டாலும், கிராமப் புறங்களில் அங்கென்றும் இங்கொன்றுமாக இத்தகைய சம்பவங்கள் இன்றும் நிகழ்ந்து கொண்டே இருப்பதை செய்திகள் வாயிலாக அறியக் கிடைக்கின்றது.

அதேவேளை, நவீன மருத்துவ வளர்ச்சி வழங்கியுள்ள தொழில் நுட்பத்தின் துணையுடன் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிந்து பெண் குழந்தைகளைக் கருக் கலைப்பு செய்யும் புதிய பழக்கம் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் நடைமுறைக்கு வந்துள்ளது. உயிர் காக்கும் புனிதப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் எனக் கருதப்படும் மருத்துவர்களே இத்தகைய ‘கொலை’களுக்கு உடந்தையாக இருப்பதுவும், பல வேளைகளில் அவர்கள் பெண்களாக இருப்பதுவும் ஜீரணிக்க முடியாத, கசப்பான உண்மையாக உள்ளது.

கருவில் இருப்பது பெண்ணென்று தெரிந்து கொண்டு கருக்கலைப்பு செய்யும் இத்தகைய போக்கு ஆசியாவுக்கு வெளியே தென்கிழக்கு ஐரோப்பாவிலும், ஆபிரிக்காவிலும் பெரிதும் நடைமுறையில் உள்ளது.

‘பி.எம்.ஜே. குளோபல் ஹெல்த்’ மேற்கொண்ட ஆய்வில் 3.26 பில்லியன் குழந்தைப் பேறு தொடர்பான புள்ளிவிபரங்கள் எடுத்தாளப்பட்டன. ஆய்வுப் பரப்பு இரண்டாகப் பிரித்துக் கையாளப்பட்டது. உலகின் பல நாடுகளில் குழந்தைப் பேறு தொடர்பான முறையான பதிவுகள் உள்ளன. சில நாடுகளில், குறிப்பாக உப சகாரா ஆபிரிக்கப் பிராந்தியத்தில் முறையான பதிவுகள் இல்லை. இந்நிலையில் ஒட்டுமொத்த எதிர்வுகூறல்கள் இரண்டு தளங்களில் நிகழ்த்தப்பட்டன.

இயற்கைக்கு முரணான வகையில் பெண்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் போக்கு மிகப் பாரிய சமூகப் பிரச்சனைகளை உருவாக்கக் கூடியது என்பது தெளிவானது. சீனாவின் சில மாகாணங்களில் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகவும், பெண்களின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள நிலையில் அங்கே திருமணம் செய்வதற்கு மணமகளுக்குத் தட்டுப்பாடு உள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தியா போன்ற நாடுகளில், ஏலவே பெண்கள் மீதான வன்கொடுமைகள், துன்புறுத்தல்கள் அதிகம் உள்ள நிலையில் பெண்களுக்குத் ‘தட்டுப்பாடு’  நிலவுமாயின் நிலைமை மேலும் விபரீதமாக மாறும் என்பது சொல்லாமலே புரியும்.
இன்றைய உலகு பெரிதும் ‘ஆண் மைய’ உலகாகவே உள்ளது. இத்தகைய உலகில் ஆண்களுக்குச் சமமானவர்களாகத் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக பெண்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களே இன்னமும் முடிவிற்கு வந்துவிடவில்லை.

அதற்கிடையில், தாங்கள் பெண்களாகப் பிறப்பதற்கே போராட வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளமை வேதனை. “மங்கையராய்ப் பிறப்பதற்கே, மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!” என்று அன்று பாடினான் மகாகவி பாரதி. “மங்கையராய்ப் பிறப்பதற்கே வழிவிடல் வேண்டுமம்மா!” என்று பாடவேண்டிய நிலையில் பெண் சிசுக்களை வைத்துள்ளது இன்றைய உலகம்.

கீழைத்தேய நாடுகள் செழுமையான கலாசார விழுமியங்களைக் கொண்டவை எனக்கூறி பெருமை கொள்ளும் நாம் பெண் குழந்தைகள் விடயத்தில் மேலைத்தேய நாடுகளிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலேயே உள்ளோம் என்ற கசப்பான உண்மையே ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

மாற்றங்கள் எவையும் தாமாகவே நிகழ்ந்து விடுவதில்லை. மாற்றத்தை நோக்கி நாமே முன்னேறிச் செல்ல வேண்டும். இயற்கையின் சமநிலையைப் பேண வேண்டும் என்பதற்கு அப்பால், பெண்கள் இல்லாத உலகில் ஆண்களால் தனித்து வாழ முடியாது என்று சிந்தித்தால் கூட பிறக்கப்போகும் பெண் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை அனைவர் மனதிலும் உருவாகும் என்பது நிச்சயம்.

Leave A Reply

Your email address will not be published.