நாட்டை முடக்காமல் இருக்கும் இருவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்கின்றார் சுமந்திரன்.

“இலங்கையில் இடம்பெறும் கொரோனா மரணங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுமே காரணம். அவர்களே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். சுகாதாரத் தரப்பினரின் கோரிக்கையைக் கேட்டு நாட்டை உடனடியாக முடக்காது உயிரிழப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ள ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதி ஆகிய இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாடு பலவீனப்பட்டுள்ள நிலையில் நாட்டை உடனடியாக முடக்க வேண்டும் என்பதை சுகாதார, வைத்திய நிபுணர்களே வலியுறுத்தி வருகின்றனர். இந்த விடயத்தைச் சரியாகக் கையாளத் தெரிந்தவர்களும் அவர்கள் என்ற காரணத்தால் அவர்களின் கருத்துக்களுக்கு அனைவரும் செவிமடுக்க வேண்டும்.

நாட்டில் தற்போது கொரோனா மரணங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. நாளாந்தம் 150 இற்கும் அதிக மரணங்கள் பதிவாகிக்கொண்டுள்ளன. இந்தத் தரவுகள் குறித்து பல சர்ச்சைகளும் எழுந்துள்ளன. சுகாதார பணியகம் கூறும் தரவுகளை விடவும் அதிகமான கொரோனா மரணங்கள் பதிவாகியிருக்க வாய்ப்புகள் உள்ளன என்று பொதுச் சுகாதாரத்துறையினர் கூறி வருகின்றனர்.

எனவே, நிலைமை மோசமாக உள்ளதென்பது தற்போது சகலருக்கும் தெரிந்த ஒன்றே. இதன்போது சுகாதாரத் தரப்பின் கருத்துக்களுக்கு முழுமையாகச் செவி மடுத்து அவர்களின் யோசனைகளைப் பின்பற்ற வேண்டுமே தவிர இராணுவம் கூறுவதைக் கேட்டுக்கொண்டு தீர்மானம் எடுக்க முடியாது.

ஆனால், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் தீர்மானங்கள் கொரோனா செயலணியின் மூலமாக இராணுவத் தளபதியைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற காரணத்தாலே தற்போது நாடு பாரிய அச்சுறுத்தல் நிலையை அடைந்துள்ளது. அதேபோல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுகாதாரத் தரப்பின் கோரிக்கைக்கு செவிமடுக்காது தனது தனிப்பட்ட அரசியல் சுயநலன்களைக் கருத்தில் கொண்டு மக்களின் உயிருடன் விளையாடிக்கொண்டுள்ளார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.