வெளியேறும் அமெரிக்கப் படைகள் , நுழையும் தலீபான்கள் : சண் தவராஜா

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய நாள் முதலாக தலீபான்களின் பிடியில் நாடு வேகமாக வீழ்ந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த வருடத்தின் மே மாதத்தில் முழுவதுமாக வெளியேறப் போவதாக முன்னர் அறிவித்திருந்த அமெரிக்க பின்னர் அதனை செப்டெம்பர் 11 என நீடித்திருந்தது.

இந்த அறிவிப்பு பின்னர் ஆகஸ்ட் 30 எனத் திருத்தம் செய்யப்பட்டது. படை வெளியேற்றம் தொடர்பான ஒரு முறையான திட்டமிடல் அமெரிக்காவிடம் இருக்கவில்லை என்பதற்கான ஒரு காட்டியாக இந்தத் திகதி மாற்றங்கள் உள்ளன என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதேவேளை, ஆப்கானிஸ்தான் மீதான படை நடவடிக்கை தொடர்பிலேயே அமெரிக்காவிடம் முறையான திட்டமிடல் இருக்கவில்லை, பிறகெங்கே படை விலகலில் முறையான திட்டமிடல் இருக்கப் போகிறது என நோக்கர்கள் சிலர் கருத்தை வெளியிட்டுள்னர்.
அமெரிக்கப் படைகளின் வெளியேற்றத்தின் முடிவில் ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்களின் வசம் வந்துவிடும் என அமெரிக்கப் புலனாய்வுத் தகவல்கள் ஏற்கனவே கோடி காட்டியிருந்தன. ஆகக் குறைந்தது 12 மாதங்களாவது அதற்கு எடுக்கும் என அவர்கள் முன்னர் கூறியிருந்த எதிர்வு கூறல் தற்போது மறுபரிசீலனைக்கு உட்பட்டுள்ளது. தற்போதைய நிலவரங்களின் படி இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் தலீபான்கள் முழு நாட்டையும் கைப்பற்றி விடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள நிலவரங்களும் அவ்வாறே உள்ளன. தலீபான்களின் முன்னேற்றம் வெகு வேகமாக நிகழ்ந்து வருகின்றது. பெரும் எண்ணிக்கையிலான தீவிரவாதிகள் தாக்குதல்களில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்க, தாக்குதல்கள் இன்றியே பல இடங்களையும் அவர்கள் கைப்பற்றக் கூடிய நிலையும் உள்ளது.

தமது அரசாங்கத்தால் ‘கைவிடப்பட்டதாகக்’ கருதும் ஆப்கான் அரச படையினர் எதிர்ப்புகள் எதுவும் இன்றிச் சரணடையத் தொடங்கியுள்ளனர். இறுதியாக குண்டுஸ் விமானப் படைத் தளத்தில் தங்கியிருந்த படையினர் சரணடைந்துள்ளனர். உள்ளூர் தலைவர்களின் வேண்டுகோளின் பேரில் எதிர்ப்பைக் கைவிட்ட சுமார் 2,000 படையினர் சரணடைந்துள்ள நிலையில் விமான நிலையம் தலீபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதன் போது பெருமளவான ஆயுத தளவாடங்களைக் கைப்பற்றிய தலீபான்கள் பெரும் எண்ணிக்கையான ஹம்வீ ரக வாகனங்களையும் கைப்பற்றினர். அத்தோடு ஒரு உலங்கு வானூர்தியும் அவர்கள் வசமாகியுள்ளது.

மறுபுறம், படாக்ஸ்தான் மாநிலத் தலைநகரான பைசாபாத்தையும் கைப்பற்றியுள்ளனர். இந்த மாநலம் சீனாவுடனான 57 மைல் நீளமான எல்லையைக் கொண்டுள்ளது. 1996 முதல் 2001 வரையான தலீபான்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத பகுதியாக இந்த எல்லை விளங்கியது. பைசாபாத் கைப்பற்றப்பட்டதோடு வட மாநிலங்கள் ஒன்பது தலீபான்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தலீபான்களின் பலத்தை அதிகரிக்கச் செய்துள்ள அதேவேளை உளவியல் அடிப்படையிலும் அவர்களுக்கு உற்சாகத்தைத் தந்துள்ளது.
தற்போதைய நிலையில் 9 மாநிலங்களின் தலைநகரங்கள் தலீபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. நாட்டின் 60 வீதமான நிலப்பரப்பு தலீபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில் தனது பிரஜைகளை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்hகானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான கந்தகாரை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து இந்த அறிவிப்பு அமெரிக்கத் தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது.
விமானப் பயணச் சீட்டுகளுக்குப் பணம் இல்லாதோருக்கு கடனாகப் பணம் தரப்படும் என அமெரிக்கா அறிவிப்பு விடுத்துள்ளதில் இருந்து நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இதேவேளை, தலிபான்களின் படை நடவடிக்கைகளை முடிவிற்குக் கொண்டுவருமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. தாக்குதல்களை நிறுத்தி ~அரசியல் தீர்வு| ஒன்றை எட்ட முன்வருமாறு கோரியுள்ள அமெரிக்கா இது தொடர்பான பேச்சுக்கைள முன்னெடுக்க தனது தூதுவர் சால்மே காலில்சாட் அவர்களை தலீபான் தரப்பினரோடு பேசுவதற்காக கட்டாருக்கு அனுப்பி வைத்துள்ளது.

அஷ்ரப் கானி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை ‘சட்டவிரோத, பொம்மை அரசாங்கம்’ என வர்ணிக்கும் தலீபான்கள் அரசாங்கத்துடனான நேரடிப் பேச்சுக்களை நிராகரித்து வருகின்றனர்.

மறுபுறம், தலீபான்களுக்கு எதிரான தனது நிலைப்பாட்டைப் பலப்படுத்தும் ஒரு முயற்சியாக முன்னாள் முஜாகிதீன் தலைவர்களை அரசுத் தலைவர் அஷ்ரப் கானி சந்தித்துப் பேசியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் வடக்கே இன்னமும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மஸார் ஐ-ஷரிப் எனும் நகரத்துக்குச் சென்ற கானி, அங்கே உஸ்பெக் யுத்தப் பிரபுவான அப்துல் ரஷீட் டொஸ்ரும் மற்றும் தஜிக் யுத்தப் பிரபுவான அட்டா முகம்மட் நூர் ஆகியோரைச் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார். சோவியத் படைகளுக்கு எதிரான அமெரிக்க ஆதரவுப் போரில் பங்கு கொண்டிருந்த அப்துல் ரஷீட் டொஸ்ரும், 2001 இல் அமெரிக்கா மேற்கொண்ட படையெடுப்பின் போதும் அமெரிக்கா தரப்பில் பேருதவி புரிந்திருந்தார். சுமார் 2,000 தலீபான் கைதிகளை குண்டுஸ் பகுதியில் கப்பல் கொள்கலனில் வைத்து கொலை செய்தது உட்பட பல்வேறு போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிய இவரிடம் காணி உதவி கோரி நிற்கிறார்.

முன்னதாக இந்த இருவரையும் புறக்கணித்து வந்த கானி, தற்போது கையறு நிலையில் இவர்களிடம் கையேந்தி நிற்கிறார். தோல்வி கண்ணுக்கு எதிரே தெரிந்தாலும், போராடித் தோற்பது என்ற முடிவுக்கு கானி வந்திருப்பது போலத் தெரிகின்றது. ஆனால், அவரால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் தலீபான்களின் கை ஓங்கி வருகின்றமை அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு உள்நாட்டில் தொல்லையாக மாறியுள்ளது. பல தரப்புகளில் இருந்தும் ஆட்சியாளர்களை நோக்கிக் கேள்விக் கணைகள் தொடுக்கப்படுகின்றன.
வாசிங்டனில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன், படையினரை விலக்கிக் கொள்ளும் தனது முடிவு தொடர்பாக வருத்தப்படப் போவதில்லை எனக் கூறியுள்ளார். “ட்ரில்லியன் கணக்கான டொலரை நாங்கள் ஆப்கானில் செலவிட்டுள்ளோம்.

3 இலட்சம் வரையான படையினருக்குப் பயிற்சி அளித்துள்ளோம். ஆயுத தளவாடங்களை வழங்கியுள்ளோம். அது மாத்திரமன்றி ஆயிரக் கணக்கான படையினரின் உயிர்களையும் விலையாகத் தந்துள்ளோம். இது ஆப்கான் தலைவர்கள் சேர்ந்து தமக்கான அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டிய நேரம்” என்பது அவரது வாக்குமூலம்.

2001க்கு முந்திய தலீபான்களின் அரசாங்கமும் அந்த நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கம்தான் என்பதை வசதியாக மறந்துவிட்டார் பைடன். தற்போதைய நிலையில் தலீபான்கள் ஆட்சியைப் பிடிப்பதைத் தடுத்துவிட முடியாத நிலையே உள்ளது. தலீபான்களின் வெற்றி ஒட்டுமொத்த ஆப்கான் மக்களின் வெற்றியாக மாறுமா என்பதே இன்றைய நிலையில் மிகப் பெறுமதியான கேள்வி.

தலீபான்களுடன் இன்று கரங் கோர்த்துள்ள பலரும் பல்வேறு விதமான கொள்கைகளையும் சிந்தனைகளையும் உடையவர்களாக உள்ளனர். அவர்களுள் மேற்குலக சார்பு உடையவர்களும், இறுக்கமான இஸ்லாமிய மரபுகளைப் பின்பற்றுபவர்களையும் காண முடிகின்றது. கடந்த காலங்களில் தலீபான்கள் கடைப்பிடித்த தீவிர இஸ்லாமிய நடைமுறைகள் உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருக்கவில்லை என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே, எதிர்காலத்தில் தமது கடந்த காலத் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவே நோக்கர்கள் கணிக்கின்றார்கள்.

பல பத்தாண்டுகளாக யுத்த வலயமாகக் காட்சிதரும் ஆப்கானிஸ்தான் தலீபான்களின் கட்டுப்பாட்டில் முழுவதுமாக வந்துவிட்டாலும் கூட ஆயுத மோதல்கள் முடிவுக்கு வருமா என்ற கேள்வி உள்ளது. ஆட்சியைப் பிடிக்கும் தலீபான்களின் கொள்கைகள், அவர்களின் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பவையே எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும்.

ஆப்கான் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் போர் தொடர்பில் வெறுப்புடனேயே இருக்கிறார்கள். ஆனால், போர் அவர்கள் மீது தொடுக்கப்படும் வேளைகளில் எல்லாம் அவற்றுக்கு எதிராக மூர்க்கமான எதிர்வினையைக் காட்டியிருக்கின்றார்கள்.

ஆப்கானின் எதிர்காலம் முன்னோக்கியதாக இருக்குமா, பின்னோக்கியதாக அமையுமா
என்பதைப் பார்ப்பதற்கு அதிக நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்பதையே இன்றைய கள யதார்த்தமாக தெரிகிறது …..

 

 

கட்டுரைக்கு பின் நிலை ….

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், தலிபான்களால் சுற்றிவளைக்கப்பட்டமையை அடுத்து, 
அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கனி, விமானம் மூலம் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.