மங்களவின் மறைவு தமிழர்கள் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! – சுமந்திரன் இரங்கல்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மரணம் தமிழர்கள் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பாரிய இழப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“முன்னாள் அமைச்சரும் தமிழ் மக்களின் உண்மையுள்ள நண்பருமான மங்கள சமரவீரவின் எதிர்பாராத மறைவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

1989 இல் அரசியலில் கால் பதித்த மங்கள சமரவீர, 1994 இல் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசில் அமைச்சராகப் பொறுப்பேற்றார். மேலும், தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காகப் பிரசாரம் செய்யும் ‘சுது நெலும்’ இயக்கத்தையும் முன்னெடுத்துச் சென்றார். அவர் இறக்கும் வரையிலும் இனவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்திருந்தார்.

மங்கள சமரவீர, விடுதலைப்புலிகளுடனான போர் நடத்தப்பட்ட முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் தனது அமைச்சரவைப் பதவியை இழக்க நேரிட்டது.

பின்னர் அவர் 2015 இல் வெளிவிவகார அமைச்சராக மீண்டும் பதவியேற்று, நீதி, பொறுப்பு மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி அயராது உழைத்தார். இன, மொழி, சாதி, மதம், அல்லது நம்பிக்கை வேறுபாடுகளாலுக்கப்பால் ஒவ்வொரு குடிமகனும் சமமாக நடத்தப்படும் ஓர் இலங்கையே அவரது தரிசனமாகக் காணப்பட்டது. மங்கள சமரவீரவின் மரணம் நம் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பாரிய இழப்பாகும்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.