அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் திணறும் மக்கள்!

அத்தியாவசிய பொருட்களான அரிசி, மா, சீனி, பால்மா, எரிவாயு உட்பட அதிகமான மக்களின் அன்றாட பாவனை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை சந்தையிலிருந்து காணாமல் போயுள்ளது. இதனால் சில பொருட்களின் விலை இரண்டு மடங்கு, மூன்று மடங்காக அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலைமையினால் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதன்படி ,மோல்ட் பானங்களை தவிர உள்நாட்டு, வெளிநாட்டு பால்மாவகைகள் எதுவும் சந்தைகளில் விற்பனைக்கு இல்லாத நிலை அம்பாறை மாவட்டம் பூராகவும் நிலவி வருகிறது.

சிறுவர்களின் பாவனைக்காக பால்மா கொள்வனவை மேற்கொள்ள கல்முனையிலிருந்து உஹன பிரதேசத்திற்கு 120 கிலோமீட்டருக்கு மேல் பயணித்து அம்பாறை மாவட்டத்தின் எல்லைகளை சுற்றியலைந்து வர்த்தக நிலைய ஊழியர்களிடம் மண்டாடி சந்தைக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் அறிமுகமாகிய உள்நாட்டு தயாரிப்பு சில பால்மா பக்கட்டுக்களை அரச அதிகாரியொருவர் பெற்றதாக கவலையுடன் தெரிவித்தார்.

சீனி அம்பாறை நகரில் 206-210 ரூபாய்க்கும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் 210- 245 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. சகல உணவகங்களிலும் வெதுப்பாக உணவுகள், தேனீர் என்பன விலையேற்றத்தை சடுதியாக கண்டுள்ளது.

போதைப்பொருள் அல்லது சட்டவிரோத பொருட்களை விற்பனை செய்வது போன்று வர்த்தகர்கள் உணவுப் பொருட்களை மறைத்து விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

செல்வாக்கு மிகுந்தவர்களுக்கு இலகுவாக கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் சாதாரண மக்களுக்கு இலகுவில் கிடைப்பதில் சிக்கல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா சதோஷவில் மட்டும் 120 ரூபாய்க்கு சீனியும், ஒரு உள்நாட்டு தயாரிப்பு பால்மாவும் வழங்கப்படுகின்றது. எல்லோருக்கும் பொருட்கள் கிடைக்கும் விதமாக சில அத்தியவசிய பொருட்கள் விற்பனை கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முடக்கம் காரணமாக வருமானம் இழந்த மக்கள் அரசினால் வழங்கப்படும் 2,000 ரூபாயை கொண்டு இரண்டு நாளை கூட கடத்த முடியாத நிலையில் உள்ளனர் என்பது கவலையான விடயமாக நோக்கப்படுகின்றது.

மேலும் ,அரசாங்கம் உடனடியாக அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்நிலையிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று அம்பாறை மாவட்ட மக்கள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.