போக்குவரத்து கழகங்களுக்காக 10 இடங்களில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள்!

அரசு போக்குவரத்து கழகங்களின் கூடுதல் வருவாய்க்காக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. அப்போது, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேரவையில் புதிய 10 அறிவிப்புகளை வெளியிட்டார். அவை,

தமிழ்நாட்டில் புதியதாக BS – IV குறியீட்டிற்கு இணக்கமான 2213 டீசல் பேருந்துகள் மற்றும் காற்று மாசினை குறைப்பதற்கு 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

அரசு போக்குவரத்து கழகங்களில் கூடுதல் வருவாய்க்காக பெட்ரோல் டீசல் சில்லறை விற்பனை நிலையங்கள் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் நிறுவப்படும். பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து மேலும் பல இடங்களுக்கு நீட்டிக்கப்படும்.

அரசு போக்குவரத்து கழகங்களின் மின்சார செலவை குறைப்பதற்காக போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான பணிமனைகள், அலுவலகங்கள் போன்ற 12 இடங்களின் கூரையில் சூரிய சக்தி மின்னாற்றல் தகடுகள் நிறுவப்படும்.

அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வராமலேயே பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்ற மாகிய சேவைகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 3 கோடி மதிப்பில் சொந்த அலுவலகக் கட்டடம் கட்டப்படும்.

மதுரை மாவட்டம் மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்தக் கட்டடம், ஓட்டுநர் தேர்வு தளம் ரூபாய் 528 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு 498 லட்சம் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

போக்குவரத்து துறையில் பணிபுரியும் முதன்மை கணக்கு அலுவலர்,கணக்கு அலுவலர் உதவி இயக்குனர் ( உள் தணிக்கை ) உதவி இயக்குனர் மற்றும் அனைத்து சரக அலுவலகங்களில் பணிபுரியும் உதவி கணக்கு அலுவலர்கள் உட் தணிக்கை பணியினை மேற்கொள்ளும் பொருட்டு மடிக்கணினி மற்றும் தரவு அட்டைகள் ரூபாய் 17.92 லட்சம் செலவில் வழங்கப்படும்.

அனைத்து சரக அலுவலகங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளுக்கு புதிய கணினிகள் அச்சுப்பொறிகள் ரூபாய் 291.90 லட்சம் செலவில் வழங்கப்படும்.

 

Leave A Reply

Your email address will not be published.