ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை சாய்த்து மும்பை அணி 5-வது வெற்றியை பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு அபுதாபியில் அரங்கேறிய 42-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது. பஞ்சாப் அணியில் கழுத்து பிடிப்பால் அவதிப்படும் மயங்க் அகர்வாலுக்கு பதிலாக மன்தீப்சிங் இடம் பிடித்தார். ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பஞ்சாப்பை பேட்டிங் செய்ய பணித்தார்.

இதையடுத்து முதலில் பேட் செய்த பஞ்சாப் அணிக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. மன்தீப்சிங் 15 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த கிறிஸ் கெய்ல் (1 ரன்), லோகேஷ் ராகுல் (21 ரன்) இருவருக்கும் வேகப்பந்து வீச்சாளர் பொல்லார்ட் ஒரே ஓவரில் ‘செக்’ வைத்தார். இதில் ராகுலின் விக்கெட், 20 ஓவர் கிரிக்கெட்டில் பொல்லார்ட்டின் 300-வது விக்கெட்டாக அமைந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்து 300 விக்கெட்டும் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை பொல்லார்ட் படைத்தார்.

அடுத்து களம் இறங்கிய நிகோலஸ் பூரனும் (2 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. 48 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை தாரைவார்த்ததால் பஞ்சாப் தள்ளாடியது.

இதன் பின்னர் மார்க்ராமும் (42 ரன், 29 பந்து, 6 பவுண்டரி), தீபக் ஹூடாவும் (28 ரன்) அணியை கவுரவமான நிலைக்கு நகர்த்தினர். 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, பொல்லார்ட் தலா 2 விக்கெட்டும், ராகுல் சாஹர், குருணல் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 136 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா (8 ரன்), சூர்யகுமார் யாதவ் (0) ஒரே ஓவரில் அவுட் ஆகி அதிர்ச்சிக்குள்ளானார்கள். தொடர்ந்து குயின்டான் டி காக் 27 ரன்னிலும், சவுரப் திவாரி 45 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் மும்பை சற்று சிக்கலில் இருப்பது போல் தெரிந்தாலும் ஹர்திக் பாண்ட்யாவும் (40 ரன், 30 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), பொல்லார்ட்டும் (15 ரன், 7 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கைகோர்த்து தடைகளை தகர்த்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு 7 ரன்னில் கேட்ச்சை தவற விட்டது பஞ்சாப்புக்கு பின்னடைவாக மாறியது.

2-வது கட்ட ஐ.பி.எல்.-ல் மும்பை அணி தொடர்ச்சியாக 3 தோல்விக்கு பிறகு பெற்ற முதல் வெற்றியாகும். மொத்தத்தில் 5-வது வெற்றியாகும். 7-வது தோல்வியை தழுவிய பஞ்சாப்புக்கு அடுத்த சுற்று வாய்ப்பு மங்கிப்போயுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.