ஜெயலலிதாவின் முதல் ஹீரோ ஸ்ரீகாந்த் காலமானார்

திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள் பலருண்டு. அவர்களில் பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்தும் ஒருவர். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் அடையாளம் காணப்பட்டு, இயக்குநர் ஸ்ரீதரால் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீகாந்த் 12.10.2021 செவ்வாய்க்கிழமையன்று வயது முதிர்ச்சி காரணமாக காலமானார்.

வெண்ணிற ஆடை திரைப்படத்தில் மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகமான போது , அவருக்கு முதல் திரை நாயகனானவர் ஸ்ரீகாந்த் என்பது பலரும் மறந்து போன விடயம்.

இதோ வெண்ணிற ஆடை திரைப்பட பகுதி :
என்ன என்ன வார்த்தைகளோ ……

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

ஈரோடு பகுதியை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீகாந்தின் இயற்பெயர் வெங்கட்ராமன். அழகும் துடிப்புமிக்க இளைஞரான இவர், அரசுப்பணியில் நல்ல பொறுப்பில் வேலையில் இருந்தார். சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, நாடகங்களின் பக்கம் இவரின் கவனம் செல்ல, அங்கே அறிமுகமானார் இயக்குநர் கே.பாலசந்தர்.

திருவல்லிக்கேணியில் வசித்து வந்த ஸ்ரீகாந்தின் அறையில் இருந்தபடி பாலசந்தர் எழுதிய நாடகங்கள் ஏராளம். அதேபோல், கவிஞர் வாலியுடனும் நாகேஷுடனும் நல்ல நட்பில் இருந்தார். எல்லோரும் ‘வாடாபோடா’ நண்பர்களாகத் திகழ்ந்தார்கள்.

‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர்நீச்சல்’, ‘பாமாவிஜயம்’ என தொடர்ந்து தன் படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களைக் கொடுத்தார் பாலசந்தர். அதேபோல், இயக்குநர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தின் சைக்கியாட்ரிஸ்ட் டாக்டராக, மிகவும் ஸ்டைலாக, கெத்தாக நடித்து அசத்தினார் ஸ்ரீகாந்த்.

‘வெண்ணிற ஆடை’ தான் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கும் வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் முதல் படம். அதுமட்டுமின்றி நடிகையும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கும் முதல் படம். திரையுலகில் ஜெயலலிதாவின் முதல் ஹீரோ ஸ்ரீகாந்த். ‘இந்து தமிழ் திசை’ இணையதள சேனலுக்கு ஸ்ரீகாந்த் அளித்த பேட்டியில், ‘ஜெயலலிதாவை நான் அம்முன்னுதான் கூப்பிடுவேன். நல்ல நண்பர்கள் நாங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் என்று திரையுலகிற்காக பெயர் மாற்றம் செய்திருந்தாலும் ‘வெங்கி’ என்றும் ‘வெங்கு’ என்றும் பாலசந்தர், ஸ்ரீதர், வாலி, நாகேஷ் முதலான திரைப்பிரபலங்கள் அழைப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீகாந்திற்கு ஒரே மகள். மகளை பள்ளிக்கு அழைத்து வந்துவிடும் போது, ‘ஸ்ரீகாந்த் ஸ்ரீகாந்த்’ என்று பள்ளியில் இருந்து குரல் கேட்கும். மாணவிகள் கலாட்டா செய்வார்களாம். பின்னாளில், அந்த மாணவிகளில் ஒருவர், ஸ்ரீகாந்தின் நாயகியாக பல படங்களில் நடித்தார். அந்த நடிகை ஸ்ரீப்ரியா. ‘மிகச் சிறந்த நடிகர் ஸ்ரீகாந்த். மேலும் பண்பும் அன்பும் கொண்ட மனிதர்’ என நடிகை ஸ்ரீப்ரியா நெகிழ்ந்து தெரிவிக்கிறார்.

ஜெயலலிதாவின் முதல் ஹீரோ என்பது போல், ஸ்ரீகாந்தின் வாழ்வில் இன்னொரு அத்தியாயமாக ‘தங்கப்பதக்கம்’ திகழ்ந்தது. ஜெகன் எனும் கேரக்டரில் சிவாஜிக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருந்தார். இவரின் நடை, உடை, பாவனைகளும் வசன உச்சரிப்புகளும் எவர் சாயலுமில்லாமல் புதுமாதிரியாக இருந்தது என்பதும் இவரின் வெற்றிக்கு முக்கியக் காரணம். மகனாக இதில் மிரட்டியிருப்பார். ‘ராஜபார்ட் ரங்கதுரை’யில் சிவாஜியின் தம்பியாக அசத்தியிருப்பார்.

‘ஞானஒளி’யிலும் அசத்தியிருப்பார். ஹீரோவாக நடித்த ‘ராஜநாகம்’ இவரின் நடிப்புத் திறமையை இன்னும் வெளிக்கொண்டு வந்தது. வில்லனாக, கொஞ்சம் ஆவேசக்காரனாக நடித்து மிரட்டினாலும் ‘பாமாவிஜயம்’ படத்தில் நடிகை ராஜஸ்ரீயின் உதவியாளராக கலகலப்பாக நடித்திருப்பார். அதேபோல், கிட்டுமாமா, பட்டுமாமி எனும் கேரக்டர் பெயர்கள் இன்று வரைக்கும் வெகு பிரபலம். ‘எதிர்நீச்சல்’ படத்தில் கிட்டுமாமாவாக ஸ்ரீகாந்த், பட்டுமாமியாக செளகார் ஜானகியும் காமெடியில் கலக்கி சிரிக்கவைத்திருப்பார்கள்.

செளத்ரி கேரக்டர் இன்று வரை பேசப்படுவதற்கு சிவாஜியின் நடிப்பும் ஸ்ரீகாந்த் எதிர்ப்பதும் காரணம். அதேபோல், அதுவரை வில்லத்தனம் செய்துகொண்டிருந்த ரஜினி, நாயகனாக முதன் முதலில் நடித்த படமான ‘பைரவி’யில் வில்லனாக அசத்தியிருப்பார் ஸ்ரீகாந்த். இத்தனைக்கும் படத்தின் டைட்டிலில் ஸ்ரீகாந்த் பெயரே முதலில் போடப்படுவதையும் பார்க்கலாம்.

இலக்கியம், படிப்பு என்று கிடைத்த நேரங்களில் செலவழித்த ஸ்ரீகாந்தின் வாழ்வில் மிக முக்கிய நட்பாக வந்தவர்தான் எழுத்தாளர் ஜெயகாந்தன். அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். அவரின் கதைகளைப் படித்துவிட்டு விவாதித்து அரட்டையடித்து மனம்விட்டுப் பேசினார் ஸ்ரீகாந்த். நட்பு இன்னும் பலப்பட்டது. ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’ படத்தையும் மெட்ராஸ் பாஷை பேசும் கோட்டுச்சூட்டு போட்ட ஸ்ரீகாந்தையும் லட்சுமியையும் இன்னும் நூறாண்டானாலும் மறக்கமுடியாது.

சிவாஜி, முத்துராமன், ஜெய்கணேஷ், விஜயகுமார், சிவகுமார், கமலஹாசன், ரஜினிகாந்த் என பலருடனும் நடித்த ஸ்ரீகாந்த், செல்வராகவன் இயக்கத்தில் ‘காதல் கொண்டேன்’ படத்திலும் நடித்தார்.
’இப்பவும் நடிக்க ரெடியா இருக்கேன்’ என்றார். ‘கேரவனுக்கு என் சொந்தப் பணத்தைத்தான் கொடுத்தேன்’ என்றார். ‘கமல் மிகச்சிறந்த திறமைசாலி’ என்றார். ஜெயலலிதாவின் முதல் ஹீரோவாக நடித்தவர், சூப்பர் ஸ்டார் என்று ரஜினிக்கு டைட்டில் கிடைக்கக் காரணமாக இருந்த ‘பைரவி’ படத்தில் நடித்தவர், ‘ரஜினியைப் பாக்கணும்னு ஆசையா இருக்கு’ என்று அந்தப் பேட்டியில் ஆசை ஆசையாக தெரிவித்திருந்தார்.

ஆனால், அந்த ஆசை நிறைவேறாமலே மரணத்தைத் தொட்டுவிட்டார்.

‘காலைல கூட நல்லாத்தான் இருந்தார். படுத்தபடுக்கையாலாம் இல்ல. காலைல ரெண்டு முறை வாந்தியெடுத்தார். மதியம் உயிர் போயிருச்சு’ என்று குடும்பத்தார் தெரிவித்தார்கள். எண்பது வயதைக் கடந்த ஸ்ரீகாந்த், ஆரோக்கியமாக இருந்த ஸ்ரீகாந்த், அதே வெள்ளந்திச் சிரிப்பும் ஞாபகசக்தியுமாக கலகலவெனப் பேசிக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த் இப்போது இல்லை. ஆனாலும் கிட்டு மாமா, ஜெகன் முதலான எண்ணற்ற கதாபாத்திரங்களில் இன்னும் நூறாண்டுகள் கடந்தும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.

Leave A Reply

Your email address will not be published.