பெருமளவிலான இலங்கையர்கள் வெளிநாடு நோக்கிப் படையெடுப்பு!

இலங்கையில் நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு நாள் சேவையின் கீழ் சேவையைப் பெறுவோரின் எண்ணிக்கை 500 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது எனக் குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஒரு நாள் சேவையின் கீழ் சேவை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரமாகக் காணப்பட்டது எனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், ஒரு நாள் சேவையின் கீழான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,500 ஐக் கடந்துள்ளது எனக் குடிவரவு – குடியகல்வுக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய, கொழும்பிலுள்ள பிரதான காரியாலயத்தில் கடந்த 10 நாட்களுக்குள் ஒரு நாள் சேவையை 12 ஆயிரத்து 158 பேர் பெற்றுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் சாதாரண சேவையின் கீழ் 11 ஆயிரத்து 242 பேர் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர் என்று குடிவரவு – குடியகல்வுக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக மாத்தறை, கண்டி, வவுனியா மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளிலுள்ள பிராந்திய அலுவலகங்களில் கடந்த 10 நாட்களுக்குள் 10 ஆயிரத்து 145 பேர் சேவையைப் பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.