ராஜபக்சகளின் சால்வையும் , விவசாயிகளின் கோபமும் : உபுல் ஜோசப் பெர்னாண்டோ

மகிந்த ராஜபக்சவின் தலைமுறையின் முதல் குருத்தாக துளிர்விட்டவர்தான் டி.எம் ராஜபக்ச அவர்கள். அவர்தான் மஹிந்த ராஜபக்சவின் தந்தை டி.ஏ. ராஜபக்சவின் சகோதரர்.

D.M. Rajapaksa

அவர் 1936 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து இராச்சிய மந்திரி சபை (நாடாளுமன்ற) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அக் காலத்தில் நடந்த தேர்தல்களில் வாக்காளர்கள் அரசியல் கட்சியின் சின்னத்துக்கு வாக்களிக்கவில்லை. ஒரு நிறத்திற்கே வாக்களித்தார்கள்.

அக் காலத்தில் இக் காலத்தில் போல தேர்தல் சின்னம் நடைமுறையில் இருக்கவில்லை.

வேட்பாளர்கள் தமக்கு பிடித்த ஒரு வண்ணதை அடையாளமாக்கி போட்டியிட்டனர். டி.எம் ராஜபக்ச தேர்தலில் போட்டியிடும் போது அவர் தனக்கான நிறத்தையும் அப்போதைய அரச அதிபரிடம்  கேட்டார் என ‘எ ஜர்னி வித் லியோனார்ட் வுல்ஃப்’ என்ற புத்தகம் கூறுகிறது:
அதில் :

‘சட்டத்தரணி லூபின் போலியர், விக்கிரமசூரிய, ஜி.கே. டபிள்யூ.டபிள்யூ. பெரேரா போன்ற பிரபுக்கள் தேர்தலுக்கு போட்டியிட பெயர் கொடுத்திருந்தனர். இறுதியாக, டி.எம். ராஜபக்ச அவர்களும் தனது நியமனப் பத்திரத்தை பி.ஜே நடேசன் எனும் அரசாங்க அதிபரிடம் ஒப்படைத்தார். நியமனப்பத்திரத்தை டி.எம் ராஜபக்ச ஒப்படைக்கும் போது, ​​அரசாங்க அதிபரிடம், ‘எனக்கான  நிறம் என்ன?’ ‘ எனக் கேட்டார்.

“ஆ. டி.எம் ராஜபக்ச என்பது உன் நிறமா? எனக் கேட்ட திரு.நடேசன் சட்டென்று தனது ஒரு காலை உயர்த்தி மேசையில் அடித்து, ‘உன் நிறத்தை தேர்ந்து எடுத்துக் கொள் ‘ என்றாராம்.

இப்படித்தான் டி.எம் ராஜபக்சவின் தேர்தலுக்கான நிறம் பழுப்பு நிறமாக கிடைத்தது.

அப்போதைய ஜீஏ என அழைக்கப்பட்ட அரசாங்க அதிபரின் காலணியின் வண்ணத்தை தனது தேர்தல் வண்ணமாக ஏற்றுக் கொண்டாலும் , அதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளக் கூடிய   தொலை நோக்கு பார்வை கொண்டவராக டி.எம் ராஜபக்ச தன்னை மாற்றிக் கொண்டார்.

‘ஏழை விவசாயிகளின் நிறம் எனக்கு கிடைத்துள்ளது’ எனக் கூறிக் கொண்டு தோளில் பழுப்பு நிற சால்வையை அணிந்து கொண்டு ‘ருஹுண  பகுதியின் குரக்கன் நிறம்’ தனது நிறம் என பெருமை பேசிக் கொண்டே டி.எம் ராஜபக்ச தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

லியோனார்ட் வுல்ஃப் உடன் ஒரு பயணம் (பக்கம் 104)

லியோனார்ட் வுல்ஃப் கூற்றுப்படி, இதுதான் குரக்கன் நிற (குரஹான் ) சால்வையின் வரலாறு.

D. A. Rajapaksa

தற்போது ராஜபக்ச குடும்பத்தினர் அணியும் சால்வை அன்று டி.எம் ராஜபக்ச தனது தேர்தல் சின்னமாக பாவித்த நிறமாகும்.

‘டி.எம் ராஜபக்சவின் நிறம் நம் விவசாயியின் குரக்கன் நிறம். குரக்கன் நிறத்துக்குக்கு வெற்றி” என விவசாயிகள் கிராமத்தை சுற்றி கோசம் போட்டுக் கொண்டு போனார்கள் என அப் புத்தகத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டி.எம் ராஜபக்ச இறந்த பின்னர் பாராளுமன்றத்திற்கு தேர்வாகி வந்த டி.எம் ராஜபக்சவின் சகோதரரான ,  மகிந்தவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ச தேர்தலில் போட்டியிடத் தொடங்கிய போது  அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

எனவே மகிந்தவின் தந்தையான டி.ஏ.ராஜபக்ச யானை (ஐதேக) சின்னத்தின் கீழ் போட்டியிட்டார். நிறம் பச்சையாக இருந்தது. ஆனால் அவர் கூட அம்பாந்தோட்டையில்  தனது சகோதரர் அறிமுகப்படுத்திய குரக்கன் சால்வையை அணிந்து  கொண்டுதான் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டார்.

பின்னாளில் அரசியலுக்கு வந்தடி. ஏ.ராஜபக்சவின் மகன்களான ஜோர்ஜ் ராஜபக்ச, லக்ஷ்மன் ராஜபக்ச ஆகியோரும் இதே  குரக்கன் சால்வையை அணிந்துகொண்டுதான் தேர்தலில் போட்டியிட்டனர்.

D. A. Rajapaksa flanked by his sons

1970 டி.ஏ. ராஜபக்சவின் மறைவுக்குப் பின்னர் அரசியலில் பிரவேசித்த மஹிந்த ராஜபக்சவும் குரக்கன் சால்வையை அணியத் தொடங்கியிருந்தார். பசில் ராஜபக்சவும் 1977 பொதுத் தேர்தலில் குரக்கன் சால்வையை அணிந்து போட்டியிட்டார். 1977ல் மகிந்தவைப் போலவே பசிலும் தோற்கடிக்கப்பட்டனர்.
அதன்பின் முல்கிரிகல இடைத்தேர்தலில் போட்டியிட்ட சமல் ராஜபக்சவும் குரக்கன் சால்வையை  அணிந்தே இடைத் தேர்தலில் போட்டியிட வந்தார்.

2004ஆம் ஆண்டு மஹிந்த பிரதமராகும் வரை அம்பாந்தோட்டையில் மாத்திரமே இந்த குரக்கன் நிற சால்வை பிரபலமாக இருந்தது. மகிந்த பிரதமராகி குரக்கன் தாவணியை அணிந்த போதுதான் அந்த தாவணியின் பின்புலம் என்ன என்று எல்லோரும் கேட்க ஆரம்பித்தார்கள்.

‘மஹிந்தவின் தோளில் தொங்குவது விவசாயின் நிறம் . அதுதான் ராஜபக்சக்களின் சின்னம். குறியீடு….’ என பொருள் கூறப்பட்டது.

அன்றைய மஹிந்த ஆதரவாளர்கள் குரக்கன் சால்வையை அப்படிச் சொல்லித்தான் பிரச்சாரம் செய்தனர்.

Mahinda

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்தவும் தனது தோளில் விவசாயிகளின் நிறம் , தனது குறியீடாக இருப்பதாகக் கூறினார்.

வடமத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிதறியிருக்கும் இலங்கை விவசாயிகள் குரக்கன் சால்வை மேல் கவரப்பட்டு மகிந்தவை வெற்றி பெற வைக்க அவரைச் சுற்றி திரண்டனர்.

அந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவின் பிரதான கோஷங்களில் இரண்டாக , விவசாயிகளுக்கு உரம் வழங்குதல், ரணிலின் அரசாங்கத்தினால் இல்லாதொழிக்கப்பட்ட நெல் சந்தைப்படுத்தல் சபையை மீள ஸ்தாபித்தல் என்பன முக்கியமான கோசங்களாகவும் , உறுதி மொழிகளாகவும் இருந்தன.

விவசாயிகளை வென்றெடுக்க மகிந்த அன்று ஆற்றிய உரை பின்வருமாறு.

விவசாயத்தை அபிவிருத்தி செய்வோம், இந்த நாட்டை கடந்த  பராக்கிரமபாகுவின் காலத்துக்கு கொண்டு செல்வோம் என பேசிக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்,  வயல்களை மூடுங்கள் என சொல்லத் தொடங்கியிருந்தார். விவசாயிகளின் உர மானியம் வெட்டப்பட்டது. விவசாயம் அழிந்தது. உள்ளூர் விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகளின் விவசாயமும் அழித்தன. நெல் சந்தைப்படுத்தல் சபை,  கடந்த அரசாங்கத்தினால் இரும்பு தாதுவிற்கு விற்கப்பட்டது. அதனால், விவசாயிகளின் விளைந்த பொருட்களை விற்க இடமில்லாது போயுள்ளது . எனவே விவசாயிகளின் நெல்லை விற்பனை செய்ய புதிய நிறுவனங்களை அமைப்போம். 

மஹிந்த ராஜபக்ஷ
15.19.2005
லங்காதீப

விவசாயிகள் மகிந்தவின் குரக்கன் சால்வையை மக்கள் நம்பி வாக்களித்தனர். மஹிந்த ஜனாதிபதியானார். மகிந்த ஜனாதிபதியாகி,  பசில் தேசியப்பட்டியலின் மூலம் பாராளுமன்றத்துக்கு பிரவேசித்த போது பசிலுக்கும் ,  குரக்கன் நிற  சால்வையை அணிவித்தவர் மஹிந்ததான்.

2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாமல் நாடாளுமன்றத்திற்கு வந்தபோதும், ​​மஹிந்த, நாமலுக்கும் குரக்கன் சால்வையைஅணிவித்தார்.

சமலின் மகன் ஷஷேந்திர முதலமைச்சரானபோதும், ​​மஹிந்த தான் குரக்கன் சால்வையை அணிவித்தவரும் மகிந்ததான்.

ஆனால், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாய ராஜபக்ச 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது அவர் தேசிய உடையைக் கூட அணிவில்லை. குரக்கன் சால்வையையும் அணியவில்லை.

2019 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று கோத்தபாய பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அன்று கோத்தபாயவை குரக்கன் சால்வையை அணியுமாறு மகிந்தவும் ராஜபக்ச குடும்பத்தினரும் கூறிய போதிலும் அவர் குரக்கன் சால்வையை அணிய மறுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. நாடாளுமன்ற அமர்வின் ஆரம்ப நாளில் குரக்கன் சால்வையை அணியுமாறு மஹிந்த அறிவுறுத்தியதாகவும், ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளிவந்தன.

ஆனால் அவர் பாராளுமன்றத்திற்கு வந்து தனது சிம்மாசன உரையை ஆற்றியபோது குரக்கன் சால்வையை பற்றி இப்படிக் கூறினார்:

அப்போது ருஹுண பகுதி சிங்கம் என்று அழைக்கப்பட்ட டி.ஏ. ராஜபக்ச நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் நாள் முதல் குரக்கன் நிற சால்வையை அணிந்திருந்தார். அந்த சால்வையில் கிருவாப்பத்து பகுதியின் குரக்கன் விவசாயிகளை அடையாளப்படுத்தினார். நான் அந்த தாவணியை அணியவில்லை என்றாலும், இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் அர்ப்பணிக்கப்படும் குரக்கன் நிற சால்வையின் ஆழ்ந்த பார்வையை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.

கோட்டாபய ராஜபக்ச
03.01.2020

குரக்கன் நிற சால்வையை அணியாமல் கோட்டாபய சிம்மாசன உரை நிகழ்த்தும் போது மகிந்தவும் ராஜபக்ச குடும்பமும் கலக்கமடைந்ததை அறிந்து குரக்கன் நிற சால்வையை பற்றி கோத்தபாய அந்த கதையை கூறியிருக்கலாம். (அவர் அதே நிற டை ஒன்றை அணிந்திருந்தார்)
ஆனால் இன்று விவசாயிகளுக்கு நஞ்சற்ற உரக் கொள்கையை கடைப்பிடித்து,   கோத்தாவின் விஷமில்லா உரக் கொள்கையை நியாயப்படுத்தப்போய் , குரக்கன் நிற  சால்வையை விவசாயிகள்  எரித்த போது மகிந்தவும் , ராஜபக்ச குடும்பமும் விவசாயிகளின் கோபத்துக்கும் வெறுப்புக்கும் ஆளாகியுள்ளனர்.

மஹிந்த குரக்கன் நிற சால்வையை வைத்து 2005 ஆம் ஆண்டு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்னர், இதே விவசாய நிலங்கள் அனைத்தும் ஐ.தே.க. (யானை கட்சியின்) சார்பு நிலங்களாக இருந்தன. இந்த விளைநிலங்கள் ஐ.தே.கவின் அன்றைய தலைவர் டி.எஸ். சேனநாயக்கா காலத்திலிருந்து ஐதேகவின் கோட்டைகளாக இருந்து வந்தன.

2002 ரணில் , யூ.என்.பி. அரசாங்கத்தை அமைத்து, விவசாயிகளுக்கு டெனிம் உடுத்தி, விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்பத்தை புகுத்தி விவசாயிகளை விவசாய நிறுவனங்களாக மாற்ற முற்பட்டபோதுதான் , ரணில் , ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினராலும் , ஜேவிபியினராலும் கொச்சைப்படுத்தப்பட்டார். விவசாயிகளது ஆதரவை இழந்தார்.

விவசாயிகளை நவீனமயப்படுத்தப் போய் விவசாயிகளின் ஆதரவை ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி  அரசாங்கம் இழந்தது.

அந்நேரம் ஐதேகவிடமிருந்து  ராஜபக்சக்களால் கைப்பற்றப்பட்ட விவசாயிகளின் நிலங்களை , நனோ தொழில்நுட்பம் மற்றும் நச்சுத்தன்மையற்ற உரங்கள் மூலம் கோட்டாபய நவீனமயப்படுத்தப் போய் , கோட்டாவும் அதேபோல தனக்கான ஆதரவை  இல்லாமல் ஆக்கிக் கொள்வாரோ என நினைக்காமல் இருக்க முடியவில்லை.

உபுல் ஜோசப் பெர்னாண்டோ

தமிழில்: ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.