வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு : தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை

வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 2 நாட்களில் தென்தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென் மேற்கு வங்ககடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரை ஒட்டி நிலவக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளையும் 30, 31ஆகிய தேதிகளிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், என்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதியன்று தென் தமிழகம் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மதுரையில் அரசு பேருந்தில் மழை நீர் வழிந்ததால் பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்த காட்சி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. மதுரையின் சில இடங்களில் நேற்று பலத்த மழை பெய்ததது. மாட்டுத்தாவணியிலிருந்து சங்கரன்கோவிலுக்கு சென்ற அரசு பேருந்தின் மேற்பகுதி முழுவதும் சேதமடைந்திருந்ததால், மழை நீர் உள்ளே கொட்டியது.

இதனால் அனைத்து இருக்கைகளும் நனைந்து, பயணிகள் நின்றபடியும், மழையில் நனைந்தவாரும் பயணம் செய்தனர். இதனால், மழைக்காலங்களில் இயக்கப்படும் பேருந்துகளில், மேற்கூரைகள் ஒழுகாதவாறு இருப்பதை போக்குவரத்து துறை உறுதிபடுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல, தூத்துக்குடியில், செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக, தூத்துக்குடி, வெள்ளப்பட்டி, முள்ளக்காடு, முத்தையாபுரம், ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான உப்பளங்கள் நீரில் மூழ்கின. இதனால், ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதையடுத்து, தமிழக அரசு அறிவித்திருந்த மழைக்கால நிவாரணத் தொகையான ஐந்தாயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நல வாரியத்தில் பதிவு செய்யாத ஏராளமான தொழிலாளர்களுக்கும் நிவாரணத் தொகையை அரசு வழங்க வேண்டும் என்று உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் நாடு ஆந்திர எல்லைப் பகுதியில் தொடர் மழை காரணமாக பாலாறு மற்றும் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 57 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில், 21 ஏரிகளும் முழுமையாக நிரம்பியுள்ளன. இவ்விரு மாவட்டங்களி்லும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.

வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்னரே, பாலாற்றிலும், செய்யாற்றிலும் நீர்வரத்து துவங்கியுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழைக்கு, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.