வீதி விபத்துக்களில் சிக்கி 2 நாட்களில் 12 பேர் சாவு!

நாட்டில் கடந்த இரு நாட்களில் (சனி , ஞாயிறு) இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“விபத்துக்களால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர், பொதுமக்களுக்கு வீதிகளில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் வீதிகளில் பயணிக்கும் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதேபோன்று பாதுகாப்பின்றி, கவனயீனத்துடன் சாரதிகள் பயணிப்பதும் அதிகரித்துள்ளது.

விசேடமாக ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்துக்களில் பாதசாரிகள் மூவர் மரணமடைந்துள்ளனர்.

வீதிகளில் பயணிக்கும் பாதசாரிகளையும் வாகனங்களையும் கருத்தில்கொண்டு மிக அவதானத்துடன் பயணிக்குமாறு சகல வாகன சாரதிகளிடமும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

மோட்டார் சைக்கிள் செலுத்தநர்களே அதிகளவில் விபத்துக்குள்ளாகின்றனர்.

மோட்டார் சைக்கிள் செலுத்துநர்களால் வீதிகளில் பயணிக்கும் பாதசாரிகளும் மரணமடைகின்றனர்.

அதேபோன்று விபத்துக்களை எதிர்கொள்வதால் மோட்டார் சைக்கிள் செலுத்துநர்களும் மரணிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

எனவே, வீதியில் பயணிக்கும்போது போக்குவரத்து விதிமுறைகளை மதித்து மிகவும் நிதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

விபத்துக்கள் தொடர்பான வருடாந்த புள்ளிவிவரத் தகவலைப் பார்க்கும்போது மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவு பதிவாகியுள்ளன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.