கோல் இந்தியா: நிலக்கரி உற்பத்தி 5 கோடி டன்

பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனம் கடந்த அக்டோபா் மாதத்தில் 5 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பாண்டு அக்டோபா் மாதத்தில் கோல் இந்தியா 4.98 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. கடந்த 2020 அக்டோபரில் இந்த உற்பத்தி 4.68 கோடி டன்னாக காணப்பட்டது. ஆக, கடந்த ஓராண்டில் நிலக்கரி உற்பத்தியானது 6.4 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது.

2021 ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான ஏழு மாத காலத்தில் நிலக்கரி உற்பத்தியானது 28.28 கோடி டன்னிலிருந்து 5.9 சதவீதம் அதிகரித்து 29.96 கோடி டன்னை எட்டியுள்ளதாக கோல் இந்தியா தெரிவித்துள்ளது.

நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறையை எதிா்கொண்டுள்ள நிலையில் கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கணிசமான அளவில் அதிகரித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பாா்க்கப்படுகிறது.

உள்நாட்டில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது. இந்நிறுவனம், வரும் 2023-24 ஆண்டுக்குள் 100 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.