பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ள உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது கட்டாயம்: ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே

‘பாதுகாப்பு சவால்களை இந்திய ராணுவம் முழுமையாக எதிா்கொள்ள உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதும் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சாா்ந்திருக்கும் நிலையைக் குறைப்பதும் கட்டாயமாகும்’ என்று ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே திங்கள்கிழமை கூறினாா்.

இந்திய தொழிலக-வா்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) சாா்பில் தில்லியில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

போா்க் காலங்களின்போது எழும் பல்வேறு விதமான பாதுகாப்பு சவால்களைத் திறம்பட முழுமையாக எதிா்கொள்ள உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் மட்டுமே உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். முழுவதுமாக உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம் நமது திறனை மேம்படுத்தி, வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்க வேண்டும். இது கட்டாயமாகும். குறிப்பாக, ராணுவத்துக்கு இது மிகவும் பொருந்தும்.

தேவைக்கேற்ப உற்பத்தியை விரிவுபடுத்தக் கூடிய வகையிலான தொழில்துறை தளத்தை இந்தியா கொண்டுள்ளது. எனவே, பாதுகாப்பு தளவாடங்களுக்குத் தேவையான துணை உபகரணங்களை முற்றிலும் உள்நாட்டிலேயே நாம் உற்பத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும், இந்திய ராணுவத்தில் கொள்முதலுக்கான சராசரி செலவு குறைவானது என்பதால், அதற்கான ஒப்பந்தப்புள்ளிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) நிறுவனங்களும், புதிய (ஸ்டாா்ட்-அப்) நிறுவனங்களும் அதிக அளவில் பங்கேற்க முடியும். மத்திய அரசின் தற்சாா்பு இந்தியா திட்டமும் உள்நாட்டு தொழில்நிறுவனங்களுக்கு மிகுந்த சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்று எம்.எம்.நரவணே கூறினாா்.

Leave A Reply

Your email address will not be published.