பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 13 பேர் கைது!

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக 6 மதுபான சுற்றிவளைப்புகளில் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 119 லீற்றர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் 371 லீற்றர் கோடா, இரண்டு செப்புத் தகடுகள், இரண்டு எரிவாயு அடுப்புக்கள், 3 பீப்பாய்கள் என்பற்றையும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பு, மட்டக்குளிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பர்கியூஸன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தீர்வை வரியின்றி நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 360 புகைத்தல் பொருட்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு 15 ஐச் சேர்ந்த 49 வயது நபரே கைதாகியுள்ளார்.

குருநாகல், குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயக்கோடிவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளனர். குளியாப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி, கஹவத்த, குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாத்தகட, குருவிட்ட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18, 18, 41, 42, 44 வயதுகளையுடைய ஐவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.