அரசு வேலை வாங்கி தருவதாக 38 லட்சம் சுருட்டல் – மோசடி தம்பதி கைது

மயிலாடுதுறையில் அரசு வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி பண மோசடி செய்து தப்பியோடி தலைமறைவான தம்பதியினரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா விக்ரமசிங்கபுரம் தெற்கு அகஸ்தியர்புரம் பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி மகன் அருண்குமார்(36). இவரும், இவரது மனைவி கிருஷ்ணகோகிலா (29) என்பவரும் அரசு வேலை வாங்கித் தருவதாக மயிலாடுதுறையில் 7 பேரிடம் ரூ.14 லட்சம் வாங்கிக்கொண்டு, வேலை வாங்கித்தராமல் ஏமாற்றி தலைமறைவாகி விட்டதாக திருவிழந்தூர் கே.கே.நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சித்தார்த்(30) என்பவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை புகார் அளித்தார்.

இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில் கடந்த சில நாள்களுக்கு முன்புவரை மயிலாடுதுறை கூறைநாட்டில் வசித்து வந்த தம்பதியினர் இருவரும், கடந்த சில நாள்களுக்கு முன் திடீரென வீட்டைக் காலி செய்து விட்டு தப்பியோடி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர்கள் நரசிம்மபாரதி, அசோக் உள்ளிட்ட போலீஸார் காரைக்குடி விரைந்தனர். அங்கு, காரைக்குடி அருணாசலம் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த அருண்குமார், கிருஷ்ணாகோகிலா தம்பதியினரை தனிப்படை போலீஸார் கைது செய்து, மயிலாடுதுறைக்கு கொண்டு வந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், அருண்குமார் மீது சென்னையில் ஏற்கெனவே இவர் பலரிடம் ரூ.40 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்து இவர்மேல் மோசடி வழக்கு உள்ளதாகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 17 பேரிடம் ரூ.38 லட்சம் வரை ஏமாற்றி உள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.