பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்புக்களில் 10 பேர் சிக்கினர்!

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.

கொழும்பு – கிராண்டபாஸ், முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 15 கிராம் ஹெரோய்னுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 14, ஜா – எல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு அலுபோமுல்ல, பாணந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது 53 லீற்றர் மதுபானம், 2 ஆயிரத்து 124 லீற்றர் கோடா, இரு எரிவாயு அடுப்புகள், இரு எரிவாயு சிலிண்டர்கள், இரு செப்புத்தகடுகள் என்பவற்றுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அலுபோமுல்ல, பொல்கஸ்ஓவிட்ட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32, 62 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இரண்டு மதுபான சுற்றிவளைப்புகளில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 308 லீற்றர் மதுபானம், ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவலகஸ்வௌ, எரபதுகஸ்வௌ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரமின்றி இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கியுடன் ஓட்டோவில் பயணித்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 27, 65 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேட்டுவான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒரு கிராம் 486 மில்லிகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாஎலிய பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.